

ஈரோடு: தவெக தலைவர் விஜய் கூட்டணி அமைக்காவிட்டால் பரிதாபமான தோல்வியை சந்திப்பார் என்று தமிழருவி மணியன் கூறினார்.
அவரது காமராஜர் மக்கள் கட்சியை, தமாகாவுடன் இணைக்கும் நிகழ்ச்சி ஈரோட்டில் நேற்று நடைபெற்றது. இதில் பங்கேற்ற தமிழருவி மணியன், பின்னர் செய்தியாளர்களிடம் கூறியதாவது: மக்கள் நலக் கூட்டணியை நான் உருவாக்கவில்லை. அதில் காந்திய மக்கள் இயக்கம் இடம் பெறவில்லை. விஜயகாந்தை முதல்வராக முயற்சித்தேன் என்பதும் தவறான தகவல். மாற்று அரசியலை உருவாக்குவோம் என்று ரஜினி சொன்னதால்தான் அவருடன் இணைந்து செயல்பட்டேன்.
விஜய்க்கு கொள்கை எதிரி, அரசியல் எதிரி யார் வேண்டுமானாலும் இருக்கலாம். வரக்கூடியது சட்டப்பேரவைத் தேர்தல். அந்த தேர்தலில் அரசியல் எதிரியை வீழ்த்த விஜய் முயற்சிக்க வேண்டும். அவரது அரசியல் எதிரியான திமுகவை வீழ்த்த, வலிமையான கூட்டணியில் விஜய் இடம்பெற வேண்டும்.
ஆந்திராவில் சிரஞ்சீவி கட்சி தொடங்கியபோது மாநிலமே குலுங்கியது. ஆனால், பின்னர் பரிதாபமான சூழ்நிலையைத் தான் சிரஞ்சீவி சந்தித்தார்.
அதேநேரத்தில், பவன் கல்யாண் சரியாக காயை நகர்த்தி, சந்திரபாபு நாயுடுவுடன் சேர்ந்து தேர்தலை சந்தித்து துணை முதல்வரானார். அதுபோல, தனியாகத்தான் இருப்பேன் என்று விஜய் முடிவெடுத்தால், அடுத்த சிரஞ்சீவியாக மாறிவிடுவார். தமிழகத்தில் விஜய்க்கு 20 சதவீத வாக்கு வங்கி உள்ளது. எனவே, வரும் சட்டப்பேரவை தேர்தலில் கூட்டணி முடிவை விஜய் எடுக்காவிட்டால், நிச்சயம் பரிதாபமான தோல்வியை சந்திப்பார்.
விஜய் கூட்டத்தைக் கலைக்க காவல் துறை முனைகிறது. தேர்தல் நேரத்தில் திமுக பல சித்துவிளையாட்டுகளை அரங்கேற்றும். அதை சமாளிக்க முடியாது. இவ்வாறு அவர் கூறினார்.