

தமிழில் குடமுழுக்கு நடத்தக்கோரி மதுரை மீனாட்சி அம்மன் கோயில் முன்பு காத்திருப்புப் போராட்டத்தில் ஈடுபட்ட தமிழ் வேள்வியாளர்களுடன் பேச்சுவார்த்தை நடத்திய அமைச்சர் நிர்மல்குமார். படம்: நா.தங்கரத்தினம்.
மதுரை: மதுரை மீனாட்சி அம்மன் கோயிலில் தமிழில் குடமுழுக்கு நடத்த வேண்டும் என கோயில் முன்பு தமிழ் வேள்வியாளர்கள் நேற்று காத்திருப்புப் போராட்டத்தில் ஈடுபட்டனர். இவர்களோடு அமைச்சர் நிர்மல்குமார் பேச்சுவார்த்தை நடத்தி கோயிலுக்குள் அனுமதிப்பதாக உறுதி அளித்தார். இதுதவிர தமிழில் குடமுழுக்கு நடத்த ஏற்பாடுகள் நடப்பதாக அமைச்சர் ரமேஷ் தெரிவித்தார்.
மதுரை மீனாட்சி அம்மன் கோயிலில் தமிழில் குடமுழுக்கு நடத்த வேண்டும், தமிழ் வேள்வியாளர்கள், அர்ச்சகர்கள், ஓதுவார்கள் மூலம் தமிழில் மந்திரங்கள் ஓதி வேள்வி நடத்த வேண்டும். யாகசாலை, குடமுழுக்கு, கருவறையில் தமிழில் வேள்விகள் நடத்த வேண்டும் என தெய்வத் தமிழ்ப் பேரவையினர் உயர்நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்தனர்.
உயர் நீதிமன்ற உத்தரவுப்படி சம்ஸ்கிருதத்துக்கு இணையாக தமிழில் வேள்வி நடத்த வேண்டும் எனவும், தமிழில் வேள்வி நடத்துவதை ஆய்வு செய்ய அனுமதிக்க வேண்டும் எனவும் வலியுறத்தி நேற்று முன்தினம் சென்னை இந்து சமய அறநிலையத் துறை ஆணையர் அலுவலகத்தில் தெய்வத்தமிழ் பேரவையினர் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். அங்கு நடந்த பேச்சுவார்த்தையில், கவுதமன், சத்தியபாமா, தமிழ்மணி, காயத்ரி அடங்கிய தமிழ் வேள்வியாளர்கள், மதுரை மீனாட்சி அம்மன் கோயில் இணை ஆணையர் க.செல்லத்துரையை சந்திக்க அனுமதி அளிப்பது என முடிவெடுக்கப்பட்டது.
அதன்படி இவர்கள் நேற்று அம்மன் சந்நிதி வழியாக கோயிலுக்குள் செல்ல காவல் துறையினர் மற்றும் கோயில் நிர்வாகத்தினர் மறுப்புத் தெரிவித்தனர். இதனால் கோயில் முன்பு சத்தியபாமா தலைமையில் தமிழ் வேள்வியாளர்கள் காத்திருப்புப் போராட்டத்தில் ஈடுபட்டனர். பின்பு இவர்களோடு அமைச்சர் நிர்மல்குமார் பேச்சுவார்த்தை நடத்தினார். கோயிலுக்குள் செல்ல அனுமதி பெற்றுத் தரப்படும் என தெரிவித்தார்.
தமிழ் ஓதுவார்கள்: இந்நிலையில் மீனாட்சி அம்மன் கோயில் குடமுழுக்கு விழா ஏற்பாடுகளை பார்வையிட்ட பிறகு அமைச்சர் ரமேஷ் கூறியது: குடமுழுக்கு விழாவில் தமிழில் பாராயணம் செய்வதற்கு தமிழகம் முழுவதும் இருந்து 27 ஓதுவார்களை நியமித்துள்ளோம். முதல்வர் எப்போதும் தமிழை முன்னிறுத்தக் கூடியவர். தவெக ஆட்சியில் தமிழுக்கு முக்கியத்துவம் கொடுப்போம். அதன்படி கடந்த 11-ம் தேதியிலிருந்து ஓதுவார்கள் தமிழில் மந்திரங்கள் ஓதி வருகின்றனர். தமிழில் குடமுழுக்கு நடத்துவதற்கு அனைத்து ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளன.
அரசால் நியமிக்கப்பட்ட ஓதுவார்கள் யாரும் போராட்டம் செய்யவில்லை. அவர்கள் யாகசாலையில் பணியாற்றுகின்றனர். கோபுரக் கலசத்தில் நீர் ஊற்றவும், கருவறைக்குள் சென்று குடமுழுக்கு செய்யவும் தமிழ் ஓதுவார்கள் அனுமதிக்கப்படுவார்கள். இவ்வாறு கூறினார்.
அமைச்சர் நிர்மல்குமார் கூறுகையில், அறங்காவலர் குழு தலைவர் மற்றும் அறங்காவலர்களைத் தொடர்புகொண்டு அவர்களுக்கு எத்தகைய ஆதரவு தேவை என்பதை இணை ஆணையர் மூலம் கேட்டறிந்து அவற்றை நிவர்த்தி செய்வோம். குடமுழுக்கு விழா பாஸ் தொடர்பாக பல தவறான தகவல்கள் வருகின்றன. இதுவரை நான் ‘பாஸ்’களை கண்ணால்கூட பார்க்கவில்லை. அதில் நான் தலையிடவே இல்லை. கோயில் நிர்வாகம் இணை ஆணையர் கட்டுப்பாட்டில்தான் உள்ளது. அதில் நான் தலையிடவில்லை. சிட்டிங் எம்.பி., எம்எல்ஏக்களுக்கு கோயில் நடைமுறைப்படி பாஸ் கொடுக்கப்பட்டுள்ளது.