

சென்னை: தமிழ்நாடு - புதுச்சேரி பார் கவுன்சில் தேர்தல் மார்ச் 30-ம் தேதி நடைபெற உள்ளது.
தமிழகம் மற்றும் புதுச்சேரி பார் கவுன்சிலில் மொத்தம் உள்ள 25 உறுப்பினர் பதவிகளுக்கான தேர்தல் உச்ச நீதிமன்ற உத்தரவுப்படி மார்ச் 30 அன்று தமிழகம் மற்றும் புதுச்சேரியில் நடைபெறவுள்ளது. இந்த தேர்தலில் 140-க்கும் மேற்பட்ட வழக்கறிஞர்கள் போட்டியிடுகின்றனர்.
இந்த தேர்தலில் சுமார் ஒரு லட்சம் வழக்கறிஞர்கள் தங்களது விருப்ப வாக்குரிமைப்படி வாக்களிக்கவுள்ளனர். அதாவது வாக்காளர்கள் தாங்கள் விரும்பும் வேட்பாளர்களுக்கு முன்னுரிமை அடிப்படையில் 1, 2, 3 என்ற வரிசைப்படி நம்பரை எழுதி வாக்களிக்க வேண்டும்.
இந்த 25 பேரில் ஒருவரை பார் கவுன்சில் தலைவராகவும், மற்றொருவரை துணைத் தலைவராகவும் தேர்வு செய்ய வேண்டும். மேலும் ஒருவரை அகில இந்திய பார் கவுன்சிலுக்கு பிரதிநிதியாக அனுப்பி வைக்க வேண்டும். அரசு தலைமை வழக்கறிஞர் பார் கவுன்சிலி்ன் பதவி வழி உறுப்பினராக செயல்படுவார்.
மார்ச் 30 அன்று நடைபெறும் தேர்தலில் தமிழகம் மற்றும் புதுச்சேரியில் அமைக்கப்படும் 168 மையங்களில் வாக்குப் பதிவு நடைபெறும். வாக்கு எண்ணிக்கை ஏப்.3-ல் தொடங்கப்படும். முன்னுரிமை வாக்கு என்பதால் முடிவுகள் வெளியாக சில மாதங்கள் பிடிக்கும்.
பெண்களுக்கு 30 சதவீதம்: முதன்முறையாக இந்த தேர்தலில் உச்ச நீதிமன்ற உத்தரவுப்படி பெண் வழக்கறிஞர்களுக்கு 30 சதவீதம், அதாவது மொத்தம் உள்ள 25 பதவிகளில் 7 இடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளன. இதில் 2 பெண் உறுப்பினர்கள் அகில இந்திய பார் கவுன்சிலால் நேரடியாக நியமிக்கப்படுவர். எஞ்சிய 5 இடங்களுக்கு தேர்தல் நடத்தப்படும் என்பதால் 18 ஆண் உறுப்பினர் பதவிகளுடன் சேர்த்து மொத்தம் 23 பதவிகளுக்கு மட்டுமே இம்முறை தேர்தல் நடத்தப்படவுள்ளது.
உயர் அதிகார தேர்தல் குழு: தேர்தலை நடத்த இமாச்சலப்பிரதேச உயர் நீதிமன்ற ஓய்வுபெற்ற தலைமை நீதிபதி ராஜிவ் ஷக்தேர் தலைமையில், சென்னை உயர் நீதிமன்ற மூத்த வழக்கறிஞர்கள் இ.ஓம்பிரகாஷ், அமித் ஜார்ஜ் ஆகியோர் கொண்ட உயர் அதிகார தேர்தல் குழுவை உச்ச நீதிமன்றம் அமைத்துள்ளது. அதேபோல தேர்தலை நடத்தும் அதிகாரியாக ஓய்வுபெற்ற நீதிபதி கே.என்.பாஷா நியமிக்கப்பட்டுள்ளார்.
இந்த தேர்தலில் கடந்தமுறை பார் கவுன்சில் தலைவராக பதவி வகித்த பி.எஸ்.அமல்ராஜ், துணைத்தலைவராக பதவி வகித்த வி.கார்த்திகேயன், அகில இந்திய பார் கவுன்சில் துணைத் தலைவராக பதவி வகித்த எஸ்.பிரபாகரன் மற்றும் உறுப்பினர்களாகப் பதவி வகித்த ஜி.மோகனகிருஷ்ணன், ஆர்.சி.பால்கனகராஜ், கே.பாலு, டி.செல்வம், எம்.வேல்முருகன், டி.சரவணன், எம்.ராஜேந்திரகுமார், கே.ஆர்.ஆர்.அய்யப்பமணி, என்.மாரப்பன், பிரிஸில்லா பாண்டியன், கே.சந்திரமோகன், பி.அசோக், ஜி.தாளைமுத்தரசு, மைக்கேல் ஸ்டானிஸ் பிரபு, ஆர்.அய்யாவு, ஸ்ரீமுருகா, கதிரவன், சிவசுப்பிரமணி ஆகியோர் இம்முறையும் போட்டியிடுகின்றனர்.
மேலும், அரசு குற்றவியல் வழக்கறிஞராகப் பதவி வகித்த என்.விஜயராஜ், சென்னை உயர் நீதிமன்ற வழக்கறிஞர்கள் சங்க முன்னாள் நிர்வாகிகளான எஸ். அறிவழகன், ஆர்.முரளி, அதிமுக வழக்கறிஞரணி இ.பாலமுருகன், ஓசூர் ஆனந்தகுமார், பாஜக வழக்கறிஞரணி எஸ்.திவாகர், திமுக எம்.பி ஆர்.கிரிராஜன், மதுரை முன்னாள் அரசு குற்றவியல் வழக்கறிஞர் எஸ்.மோகன்குமார், பி.விஜயராஜா, எம்.கே.சுரேஷ், வி.ஆர்.சுதாகர், எம்.வி.சதீஷ்குமார், முகமது ரபீ, ஏற்கெனவே பார் கவுன்சில் செயலாளராக பதவி வகித்த சி.ராஜாகுமார், இ.சவுந்தரராஜன், விக்டர் உள்ளிட்ட பலரும் இம்முறை போட்டியிடுகின்றனர்.
அதேபோல மொத்தம் உள்ள 5 பதவிகளுக்கு பெண் வழக்கறிஞர்கள் சங்க நிர்வாகிகளான கே.சாந்தகுமாரி, வி.நளினி, டி.பிரசன்னா, கனிமொழி மதி, மார்கரேட் லாரன்ஸ், லூசியால் ரமேஷ், ஷோபா, கஜலெட்சுமி, ஷசிலி மற்றும் இளம் வழக்கறிஞர்களான அர்ச்சனா, ஆர்.எஸ்.இந்திரா, எல்.சுமதி, விஜயலட்சுமி துரைக்கண்ணன், ஹரிதா, ஷீலா உள்ளிட்ட பலர் போட்டியிடுகின்றனர். தருமபுரி ஜி.ரேவதி (25) இளவயது வேட்பாளராகப் போட்டியிடுகிறார்.
சட்டப்பேரவைத் தேர்தலை மிஞ்சும் வகையில் தமிழகம் மற்றும் புதுச்சேரியில் சூறாவளி சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள வேட்பாளர்கள், வாக்காளர்களுக்கு பல்வேறு கவர்ச்சிகரமான வாக்குறுதிகளை அள்ளி வீசி வாக்குகளை சேகரித்து வருகின்றனர். இதனால் வழக்கறிஞர்கள் மத்தியில் தேர்தல் களம் சூடுபிடித்துள்ளது.