“டபுள் இன்ஜின் மாடல் இங்கு எடுபடாது; தமிழகப் பெண்கள் பாடம் கற்பிப்பார்கள்” -  கனிமொழி

“டபுள் இன்ஜின் மாடல் இங்கு எடுபடாது; தமிழகப் பெண்கள் பாடம் கற்பிப்பார்கள்” - கனிமொழி

டெல்டா மண்டல திமுக மகளிரணி மாநாட்டில் பேச்சு
Published on

தஞ்சாவூர்: “நீங்கள் எந்த கனவோடு இங்கு வந்தாலும், நிச்சயம் தமிழக பெண்கள் சரியான பாடத்தை உங்களுக்கு சொல்லித்தருவார்கள்” என பிரதமர் மோடிக்கு திமுக எம்.பி கனிமொழி பதிலளித்துள்ளார்.

‘வெல்லும் தமிழ்ப் பெண்கள்’ டெல்டா மண்டல திமுக மகளிரணி மாநாடு தஞ்சாவூரில் இன்று நடைபெறுகிறது. இந்த மாநாட்டில் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின், துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின், திமுக மகளிரணி செயலாளர் கனிமொழி மற்றும் அமைச்சர்கள் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.

இம்மாநாட்டில் கலந்துகொண்டு பேசிய கனிமொழி, “வெல்லும் தமிழ்ப் பெண்கள் இரண்டாவது மாநாடு தஞ்சையில் எழுச்சியோடு நடத்துகிறோம். இப்போது பலரும் பல்வேறு கனவுகளோடு பல திசைகளில் இருந்து தமிழகத்தை நோக்கி படையெடுத்துக் கொண்டுள்ளனர். உள்ளூரிலிருந்தும் சில படையெடுக்கிறார்கள். நமக்கு ஏதும் வாய்ப்பு கிடைக்குமா என அவர்கள் பார்க்கிறார்கள். ஆனால், இங்கு கூடியுள்ள படை அவர்களுக்கு பதில் சொல்லியிருக்கும்.

தமிழக மக்கள் தெளிவானவர்கள். அதைவிட தமிழக பெண்கள் புத்திசாலிகள். வாய்ச் சவடால் விட்டு இங்கு ஆட்சி செய்ய முடியாது. முதல்வர் ஸ்டாலினால் தான் பெண்கள் நல ஆட்சியை நடத்த முடியும்.

யார் கொடுத்த வாக்குறுதியை காப்பாற்றுவார்கள் என தமிழக பெண்களுக்குத் தெரியும். நான் 10 ஆயிரம், 8 ஆயிரம் கொடுக்கிறேன். ‘குலவிளக்கு’ திட்டத்தில் 2 ஆயிரம் கொடுக்கிறேன் என யார் வேண்டுமானாலும் சொல்லலாம். ஆனால், யாராலும் எதுவும் வராது என தெரியும். முன்பு ஸ்கூட்டி கொடுப்பேன் என சொன்னார்கள். வந்ததா?. அதுபோல குலவிளக்கும் வீட்டுக்கு வராது எனத் தெரியும். ஆனால், மகளிர் உரிமைத் தொகை ஒவ்வொரு மாதமும் உங்கள் வீட்டுக் கதவை தட்டி வரும்.

விடியல் பேருந்து திட்டம், புதுமைப்பெண் திட்டம் முதல்வர் ஸ்டாலினால் நிறைவேற்றப்பட்டது என்பதை பெண்கள் உணர்ந்துள்ளனர். எனவே இந்த மாநாடு பல கனவுகளோடு தமிழகத்தை நோக்கி வருபவர்களுக்கு அதனை தெளிவுப்படுத்தும்.

தமிழகத்துக்கு வரும் போதெல்லாம் ‘டபுள் இன்ஜின்’ என சொல்கிறார்கள். ஆனால், அது வேலை செய்யாத இன்ஜினாகத்தான் இருக்கிறது. அது ரிப்பேர் மாடல் இன்ஜினாகவும், தேறாத இன்ஜினாகவும்தான் உள்ளது.

குஜராத்தில் அரசு மருத்துவக்கல்லூரிகள் 6 தான். தமிழகத்தில் அரசு மருத்துவமனைகள் 2 ஆயிரத்துக்கும் மேல் உள்ளன, அதில் 1 லட்சம் படுக்கை வசதிகள் உள்ளது. உ.பியில் கோவிட் நேரத்தில் மக்கள் மருத்துவமனைகளுக்கு வெளியே கிடந்தனர்.

தமிழகத்தில்தான் நாட்டிலேயே தொழில்வளர்ச்சி அதிகம். தமிழகத்தில் 38 ஆயிரம் தொழிற்சாலைகள் உள்ளன, அதில் 42% பெண்கள் பணிபுரிகின்றனர். மின்னணு ஏற்றுமதி, ஜவுளி ஏற்றுமதியில் தமிழகம்தான் முதலிடம். வேறு எந்த டபுள் இன்ஜின் ஆட்சியிலும் இந்த சாதனையை செய்யவில்லை.

டபுள் இன்ஜின் ஆட்சி செய்யும் மாநிலங்களில்தான் பெண்களுக்கு எதிரான குற்றங்கள் அதிகம் உள்ளது. சமூக மேம்பாட்டு குறியீட்டில் பெரிய மாநிலங்களில் தமிழகம்தான் முதலிடத்தில் உள்ளது. டபுள் இன்ஜின் ஆட்சி உள்ள உ.பி, ம.பி ஆகியவை 31, 32-ம் இடங்களில் உள்ளன.

ஜனவரி 23-ம் தேதி தமிழகம் வந்து எல்லோரையும் கேள்வி கேட்டுவிட்டு பிரதமர் சென்றுள்ளார். 2012-ல் அவர் குஜராத் முதல்வராக இருந்தபோது 1 டாலரின் மதிப்பு 56 ரூபாய். அப்போது இங்கு நல்ல ஆட்சி இல்லை என மோடி சொன்னார். இன்று ஒரு டாலரின் மதிப்பு 92 ரூபாய். இப்படிப்பட்ட ஆட்சி நடத்தும் நீங்கள் எங்களைப் பார்த்து கேள்வி கேட்கலாமா?.

நீங்கள் எந்த கனவோடு இங்கு வந்தாலும், நிச்சயம் தமிழகப் பெண்கள் சரியான பாடத்தை உங்களுக்கு சொல்லித்தருவார்கள்.

ஒவ்வோர் ஆண்டும் ஆளுநர் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட சட்டப்பேரவையை அவமதிக்கிறார். பாஜக அல்லாத ஒவ்வொரு ஆட்சியையும் கஷ்டப்படுத்தவே ஆளுநர்கள் உள்ளனர். தேர்தல் சீசன் வந்துவிட்டதால், பிரதமர் இனி அடிக்கடி தமிழகம் வருவார். ஜன.23ஆம் தேதி தமிழகத்தில் 45 நிமிடம் பேசிய பிரதமர் மோடி, ஒரு முறைகூட அதிமுகவின் பெயரை சொல்லவில்லை. அப்படி தங்கள் கட்சியின் பெயரையே சொல்லாதவரோடு தான் கூட்டணி வைத்துள்ளார் பழனிசாமி” என்றார்.

“டபுள் இன்ஜின் மாடல் இங்கு எடுபடாது; தமிழகப் பெண்கள் பாடம் கற்பிப்பார்கள்” -  கனிமொழி
“தேர்தலில் நான் போட்டியிடப் போவதில்லை” - டிடிவி தினகரன் அறிவிப்பு

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in