“தேர்தலில் நான் போட்டியிடப் போவதில்லை” - டிடிவி தினகரன் அறிவிப்பு

தினகரன் | கோப்புப் படம்
தினகரன் | கோப்புப் படம்
Updated on
2 min read

தேனி: “வரும் தேர்தலில் நான் போட்டியிடப் போவதில்லை. உடன் இருப்பவர்களை வெற்றி பெறச் செய்து சட்டமன்றத்திற்கு அனுப்ப வேண்டும். மேலும் அவர்களை அமைச்சர்களாக பார்க்க வேண்டும் என்ற ஆசையும் இருக்கிறது” என்று அமமுக பொதுச் செயலாளர் டிடிவி.தினகரன் தேனியில் செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.

அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் இன்று தேனி அருகே ஊஞ்சாம்பட்டியில் உள்ள அவரது இல்லத்தில் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது அவர் கூறியதாவது: அதிமுகவால் 3 முறை முதலமைச்சரான ஓபிஎஸ், இந்த இயக்கத்துக்கு நன்றிக்கடன் செலுத்தும் நேரம் வந்து விட்டது. தமிழகத்தில் நல்லாட்சி ஏற்பட ஓரணியில் இணைய வேண்டும் என அழைப்பு விடுக்கிறேன். அவரும் நல்ல முடிவை எடுப்பார் என நம்புகிறேன்.

எம்ஜிஆர் படத்தை வைத்து கொண்டு அதிமுகவை ஊழல் கட்சி என விஜய் கூறுவது தவறு. நாங்கள் எல்லாம் வெகுண்டெழுந்தால் தப்பாக போய்விடும். ஊழலை ஒழிப்போம் என சொல்லும் விஜய் தனது படத்துக்கான டிக்கெட்டை பிளாக்கில் விற்பதையே தடுக்க முடியவில்லை. இவர் எப்படி தமிழகத்தில் ஊழலை ஒழிப்பார்?.

முதலில் அவர் வீட்டை விட்டு வெளியே வந்து அரசியல் செய்யட்டும். வீட்டில் உட்கார்ந்துகொண்டு அவர் சும்மா டயலாக் பேசிக்கொண்டிருக்கிறார். விஜய் வெளியில் வந்து முதலில் ஊடகங்களை சந்திக்க வேண்டும்.

அண்ணன் பழனிசாமி தலைமையை ஏற்று தேசிய ஜனநாயக கூட்டணியில் இணைந்துள்ளோம். மிரட்டியோ, அழுத்தம் கொடுத்தோ நாங்கள் கூட்டணியில் இணையவில்லை. ஊழல் என்றால் நினைவுக்கு வருவது திமுக தான். போதை மருந்து கடத்தலில் தமிழ்நாடு முதல் மாநிலமாக மாறி வருகிறது.

அம்மா உணவகம், தாலிக்கு தங்கம், லேப்டாப் என ஜெயலலிதா கொண்டு வந்த அனைத்து திட்டத்தையும் திமுக நிறுத்தியது. எங்களுக்குள் இருந்தது குடும்பச் சண்டையே. நாங்கள் அன்றே ஒன்று சேர்ந்து இருந்தால் திமுக வெற்றி பெற்று இருக்காது. அம்மாவின் ஆட்சி மலர்வதற்காகவே நாங்கள் ஒன்றிணைந்து பிரச்சாரம் செய்வோம்.

ஜெயலலிதாவின் உண்மை தொண்டரான ஓபிஎஸ். எங்கள் கூட்டணிக்கு வருவார். அவர் மட்டும் தர்ம யுத்தத்தை தொடங்காமல் இருந்தால் சசிகலா தலைமையில் மீண்டும் முதல்வராக வந்திருப்பார். அதிமுகவால் 3 முறை முதல்வரான ஓபிஎஸ் தன்னை வாழ வைத்த கட்சிக்கு நன்றிக்கடன் செலுத்த வேண்டிய நேரம் வந்து விட்டது.

தமிழகத்தில் நல்லாட்சி ஏற்பட எங்கள் கூட்டணியில் இணைய வேண்டும். இத்தேர்தலில் தமிழ்நாட்டுக்கு உண்மையான விடியல் வர உள்ளது. நாட்டின் முதன்மை மாநிலமாக தமிழ்நாட்டை மோடி மாற்றுவார். வரும் சட்டப்பேரவைத் தேர்தலில் நான் போட்டியிடப் போவதில்லை. என்னுடன் இருப்பவர்களை வெற்றி பெறச் செய்து சட்டப்பேரவைக்கு அனுப்ப வேண்டும். அதோடு அவர்களை அமைச்சராக பார்க்க வேண்டும் என்ற ஆசையும் இருக்கிறது. ஆனால், அதற்காக கூட்டணியில் அழுத்தம் தர மாட்டேன்.” என்றார்.

தினகரன் | கோப்புப் படம்
“அழுத்தத்துக்கு அடங்கிப் போகும் ஆட்கள் நாம் இல்லை” - தவெக தலைவர் விஜய் பேச்சு

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in