

சென்னை: அமெரிக்க அதிபரின் ஏகாதிபத்திய 500 சதவிகித வரிவிதிப்புக்கு கடும் கண்டனங்களை பதிவு செய்வதுடன், தேசத்தின் பொருளாதாரத்தை பாதுகாக்க இந்திய வணிகர்கள் தேசத்திற்கு தோளோடு தோள் கொடுப்போம் என தமிழ்நாடு வணிகர் சங்கங்கள் தலைவர் ஏ.எம்.விக்கிரமராஜா தெரிவித்துள்ளார்.
இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், “அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்ப் இரண்டாம் முறை அதிபராக பதவி ஏற்றபின் இந்திய குடியரசுக்கு எதிராக பல கடுமையான நடவடிக்கைகள் எடுத்துவருவதை ஜனநாயக அமைப்பின் அடிப்படையில் இயங்கும் பல்வேறு நாடுகள் உன்னிப்பாக கவனித்து வரும் சூழலை அனைத்து பத்திரிகைகள் மற்றும் ஊடகங்கள் அன்றாடம் வெளியிட்டு வருகின்றன.
பதவி ஏற்ற முதல் நாளிலேயே தற்காலிக குடியுரிமை பெற்று அமெரிக்காவில் பணியாற்றி வந்த இந்திய வம்சாவளியினரை உடனடியாக அமெரிக்காவை விட்டு வெளியேற்றுவதற்கான கடுமையான நடவடிக்கைகளை டொனால்ட் ட்ரம்ப் எடுத்தார். அதைத் தொடர்ந்து அமெரிக்காவில் பணிபுரியும் இந்திய வம்சாவளியினர், தங்கள் தாய் நாட்டுக்கு அனுப்புகின்ற பணத்துக்கு அதீத வரி விதித்திட நடவடிக்கைகள் மேற்கொண்டார்.
மீண்டும் வர்த்தக அடிப்படையிலான பொருளாதார தீவிரவாதத்தை திணிக்கும் விதமாக, இந்திய இறக்குமதி பொருட்களுக்கு 200 சதவிகித வரி விதித்து, இந்திய வர்த்தகத்தில் ஒருவித இறுக்கமான சூழ்நிலையை உருவாக்கினார். மேலும், இந்தியா, பாகிஸ்தான் மீது மேற்கொண்ட ஆபரேஷன் சிந்தூர் நடவடிக்கையில், ட்ரம்ப் தனது மூக்கை நுழைத்ததுடன், பாகிஸ்தானுக்கு ஆதரவான நடவடிக்கையை மேற்கொண்டார்.
இந்நிலையில் தற்போது, இந்திய பொருட்களுக்கான இறக்குமதி வரியை 500 சதவிகிதம் உயர்த்தி அறிவித்திட அமெரிக்க நாடாளுமன்றத்தில் இரு தனிநபர் மசோதாவான கிராஹாம்பெல் புளு மெந்தால் சட்ட முன்வடிவை முழுமையாக ஆதரிக்கும் நடவடிக்கையை மேற்கொண்டு வருவதாக செய்திகள் வெளியாகிக்கொண்டிருக்கின்றன.
ஒரு பொருளை வாங்குவதற்கான உரிமையும், விற்பதற்கான சுதந்திரமும் ஒவ்வொரு வணிகத்திற்கும் வணிகம் சார்ந்த வணிகருக்குத்தான் உண்டு அதைப்போலவே ஒரு நாட்டின் குடிமக்களுக்கான அத்தியாவசியப் பொருட்களை வாங்குவதை தீர்மானிக்கும் உரிமையும் விற்பதற்கான சுதந்திரமும் ஒவ்வொரு நாட்டின் இறையான்மையைச் சார்ந்ததாகும்
எனவே, இது முழுக்க முழுக்க அமெரிக்க அதிபரின் ஏகாதிபத்திய எண்ணத்தையும், செயலையும், இந்தியாவிற்கு எதிரான தனது அதிகார அத்துமீறலை வெளிப்படையாக பிரதிபலிப்பதாகவே தெரிகின்றது. இந்திய பொருளாதாரத்தின் வளர்ச்சியும், உலகளவில் இந்தியாவின் முன்னேற்றத்தையும், இதர நாடுகளுடனான நட்புறவையும் பொறுத்துக்கொள்ள இயலாமல், ஆங்கிலேயர்கள் பாரத மண்ணை அடக்கி அடிமைப்படுத்திட வர்த்தக வழியை தேர்ந்தெடுத்ததைப் போல, அமெரிக்கர்கள் அதே வழியில், வணிகத்தின் மூலம் பொருளாதார தீவிரவாதத்தை திணித்து இந்தியாவை அடிமைப்படுத்திட முனைவதாகவே அதிபர் ட்ரம்பின் நடவடிக்கைகள் அமைந்துள்ளன. இது அதிபர் ட்ரம்ப், வெணிசுலா நாட்டை ஆக்கிரமித்ததின் மூலம் வெளிப்படுத்தியுள்ளார்.
பாரத மண்ணின் மைந்தர்களாம் இந்திய வணிகர்கள் குறிப்பாக தமிழகத்து வணிகர்கள் அந்நிய நாட்டின் அடிமைத்தன நடவடிக்கைகளுக்கு என்றும் துணை போகமாட்டார்கள் என்பதோடு, தாய் மண்ணை காத்திட, இந்தியாவிலேயே நம் மண்ணின் மைந்தர்களுக்கான பொருட்களை நமக்கான பொருட்களை நாமே தயாரித்து, நமது பாரம்பரிய வணிகத்தை நாமே பாதுகாத்து நமது மக்களுக்கான சேவையையும், அகிலத்து மக்களுக்கான சேவையையும் அவசியம் முன்னெடுப்போம் என்பதை உறுதி செய்து, அமெரிக்க அதிபரின் ஏகாதிபத்திய 500 சதவிகித வரிவிதிப்புக்கு கடும் கண்டனங்களை பதிவு செய்வதுடன், தேசத்தின் பொருளாதாரத்தை பாதுகாக்க இந்திய வணிகர்கள் தேசத்திற்கு தோளோடு தோள் கொடுப்போம்” இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.