

சென்னை: தமிழகம் முழுவதும் விரைவில் பழைய மற்றும் புதிய ஆட்டோக்களுக்கு பிரத்யேக நம்பர் பிளேட் வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக போக்குவரத்துத் துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
சென்னையின் பிரதான போக்குவரத்து சேவைகளை பூர்த்தி செய்யும் வகையில் ஆட்டோக்கள் இயங்கி வருகின்றன. மோட்டார் வாகனச் சட்டத்தின்படி, ஒவ்வொரு வாகனமும் தெளிவாகக் காணக்கூடிய வகையில் பதிவு எண்ணை காட்சிப்படுத்த வேண்டும்.
இது விபத்து அல்லது குற்றச் சம்பவங்களின்போது வாகனத்தை அடையாளம் காண மிகவும் முக்கியமானதாகும். ஆனால் நம்பர் பிளேட் இல்லாமல் ஏராளமான ஆட்டோக்கள் ஸ்டிக்கர் மட்டும் ஒட்டிக்கொண்டு மாநகரத்தில் உலா வருகின்றன. இதனால் போக்குவரத்து கண்காணிப்பு கேமராக்கள் எளிதில் பதிவுசெய்ய முடியாத சூழல் உருவாகியுள்ளது.
வாகனப் பதிவெண் தொடர்பாக போக்குவரத்துத் துறை காவல் அதிகாரி கூறும்போது, “கட்டுப்பாட்டை மீறி வேகமாக செல்லுதல், அனுமதியில்லாத இடங்களில் வாகனத்தை நிறுத்துதல், சாலை விதிகளை மீறுதல் போன்ற செயல்களில் ஈடுபடும் ஆட்டோக்கள் மீது அபராதம் விதிக்கப்படுகிறது. ஆர்டிஓ மூலமாக கொடுக்கப்பட்ட ஐஎன்டி ஹோலோகிராம் ஸ்டிக்கர் கொண்ட நம்பர் பிளேட்டை அகற்றிவிட்டு சாதாரண ஸ்டிக்கர் ஒட்டுவதால் உடனடியாக அந்த ஆட்டோக்களை சிசிடிவி கேமராக்கள் மூலம் கண்டறிவதில் சிரமம் ஏற்படுகிறது” என்றார்.
ஆனால், போதிய அளவில் ஆட்டோக்களுக்கு நம்பர் பிளேட் தரப்படவில்லை என ஆட்டோ ஓட்டுநர்கள் தரப்பில் குற்றச்சாட்டு வைக்கப்படுகிறது. இதுகுறித்து, ஆட்டோ தொழிற்சங்கப் பிரிவு நிர்வாகி கூறுகையில், “சென்னையில் ஓடும் 1.20 லட்சம் ஆட்டோக்களில் 75% பழைய ஆட்டோக்கள்தான். தற்போது வரை பழைய ஆட்டோக்களுக்கு நம்பர் பிளேட் வழங்கப்படவில்லை.
யாரோ ஒருசிலர் மட்டுமே குற்றச்சம்பங்களில் ஈடுபடுகின்றனர். எங்களின் பிரதான கோரிக்கை யே பழைய வாகனங்களுக்கும் நம்பர் பிளேட் வழங்கப்பட வேண்டும். பர்மிட், ஆவணங்கள் உரிமம் பெறுவது உள்ளிட்டவற்றில் காலதாமதத்தை தவிர்க்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்” என்றார்.
விதிமீறல் வாகனங்கள்: போக்குவரத்து ஆணையரகம் மூலமாக கடந்த ஏப்ரல் மற்றும் மே மாதங்களின் போக்குவரத்து விதிகளை மீறியதாக கார், ஆட்டோ மற்றும் லாரி போன்ற வானகங்களுக்கு அபராதம் விதிக்கப்பட்டுள்ளது
ஆட்டோ ஓட்டுநர் தரப்பு புகார் குறித்து போக்குவரத்து ஆணையரக உயர் அதிகாரி கூறும்போது, “விதிமுறைகளை மீறி இயக்கும் வாகனங்கள் மீது நடவடிக்கை எடுத்து வருகின்றோம். பழைய மற்றும் புதிய ஆட்டோக்கள் அனைத்துக்கும் விரைவில் தமிழகம் முழுவதும் பிரத்யேக நம்பர் பிளேட் வழங்க டெண்டர் விட திட்டமிட்டுள்ளோம். மேலும் போக்குவரத்து ஆணையரகம் தரப்பில் 22 வாகன சோதனைச் சாவடிகளில் ஹை-டெக் கேமராக்கள் பொருத்தும் பணிகளும் நடைபெறுகின்றன” என்றார். - மணிகண்டன் ஆறுமுகம்