“இந்தியாவில் தற்கொலை தலைநகரமாக இருக்கிறது தமிழகம்” - ஆளுநர் ஆர்.என்.ரவி பேச்சு

“இந்தியாவில் தற்கொலை தலைநகரமாக இருக்கிறது தமிழகம்” - ஆளுநர் ஆர்.என்.ரவி பேச்சு
Updated on
2 min read

கோவை: இந்தியாவில் தற்கொலை தலைநகரமாக தமிழகம் உள்ளது என்றும், பாரதத்தின் தொன்மையான நாகரிகம் சரஸ்வதி நதிக்கரையோரம் தான் உருவானது என்றும் கோவையில் நடந்த கருத்தரங்கில் தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி பேசினார்.

தென்னிந்திய ஆய்வு மையம் மற்றும் கொங்குநாடு கலை அறிவியல் கல்லூரி ஆகியவை இணைந்து நடத்திய, ‘சிந்து சரஸ்வதி நாகரிகம்’ என்ற தலைப்பில் இருநாள் மாநாடு, கல்லூரி வளாகத்தில் இன்று தொடங்கியது. தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி பங்கேற்று இந்த மாநாட்டை தொடங்கி வைத்து பேசியது: “உலக அளவில் நதிகளின் கரைகளில்தான் நாகரிகங்கள் உருவாகின. நதிகள் அழியும்போது நாகரிகங்களும் மறைந்தன.

பாரதத்தின் தொன்மையான நாகரிகமும் சரஸ்வதி நதிக்கரையோரம் தான் உருவானது. காலப்போக்கில் சரஸ்வதி நதி அழியும்போது நாகரிகமும் மறைந்தது. ஆனால், அதன் தாக்கம் நாடு முழுவதும் உள்ளது. சரஸ்வதி நதிக்கரையோரம் உருவான நாகரிகத்தில், உலகின் பிற நாகரிகங்களைப் போல கட்டுமான கலை, மக்கள் குடியிருப்பு ஆகியவை இருந்த போதும், இதன் தனித்துவமாக அறிவு சார்ந்த விஷயங்கள் மற்றும் வேதங்கள் உருவாக்கப்பட்டிருந்தன.

ஆங்கிலேயர் ஆட்சிக் காலத்திற்குப் பிறகு பாரதத்தின் தொன்மையான வேதங்கள் மற்றும் அது சார்ந்த கருத்துகள் அழிக்கப்பட்டன. ராமாயணம், மகாபாரதம் ஆகியவற்றின் கருத்துக்கள் பாரதத்தின் அனைத்து பகுதிகளிலும் பல்வேறு இலக்கியங்களிலும் உள்ளன. குறிப்பாக தமிழ் சங்க இலக்கியங்களான அகநானூறு, புறநானூறு, சிலப்பதிகாரம், மணிமேகலை ஆகியவற்றில் ராமாயணத்தின் சம்பவங்கள் உள்ளன.

இவ்வாறு சரஸ்வதி நதிக்கரையில் உருவான நாகரிகமும், அங்கு உருவாக்கப்பட்ட தத்துவங்களும் மொழிகளைக் கடந்து, இனங்களை கடந்து பாரதம் முழுவதும் பரவியுள்ளது. பாரதம் மட்டுமின்றி உலகத்திற்கே அந்த கருத்துக்கள், தத்துவங்கள் இன்று தேவைப்படுகின்றன. இந்த உலகின் அனைத்து படைப்புகளும் ஒன்று என்பது நமது வேதங்களின் அடிப்படையாகும். உலக அளவில் இனம், மதம் காரணமாக பல போர்கள் நடைபெறுகின்றன.

தேசிய குற்ற ஆவணத்தின் விவரப்படி தமிழ்நாட்டில் ஆண்டுதோறும் 20 ஆயிரம் பேர் தற்கொலை செய்து கொள்கின்றனர். நாள் ஒன்றுக்கு 65 பேர் தமிழ்நாட்டில் தற்கொலை செய்து கொள்கின்றனர். இந்தியாவில் தற்கொலை தலைநகரமாக தமிழ்நாடு உள்ளது. மன அழுத்தத்தினாலும், பிரிவினைகளாலும் பல்வேறு பாதிப்புகளை சந்திக்கின்றனர்.

மனித வாழ்க்கையை மேம்படுத்துவதிலும் இவ்வுலகின் அனைத்து உயிர்களும் ஒன்று என்பதை வலியுறுத்தும் பாரதத்தின் உன்னத கலாச்சாரங்களையும், தத்துவங்களையும் நாம் முன்னெடுத்துச் செல்ல வேண்டும். அதைத்தான் பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான அரசு, நாட்டின் வளர்ச்சியோடு, இழந்த நமது கலாச்சாரத்தையும், மறைக்கப்பட்ட தத்துவங்களையும் மீட்டெடுத்து அவற்றுக்கு புது சக்தியை கொடுத்து வருகிறது.

நமது நாடு சர்வதேச அளவில் அறிவியல் மற்றும் தொழில்நுட்பங்கள் மட்டுமின்றி ஆன்மிக ரீதியாகவும், கலாச்சார ரீதியாகவும் பல தடைகளையும் கடந்து வளர்ந்து வருகிறது. ஆரியம், திராவிடம் என பிரிக்க நினைக்கிறார்கள். அவர்கள் தோற்றுப் போவார்கள். ஏனென்றால் அவர்களிடம் பொய் தான் உள்ளது. சரஸ்வதி நதி நாகரிகம் மற்றும் அதன் சிறப்பை இது போன்ற மாநாட்டின் மூலம் எடுத்துரைத்து அனைவருக்கும் கொண்டு சேர்க்க வேண்டியது அவசியமாகும்” என்று அவர் பேசினார்.

இந்நிகழ்வில், கல்லூரியின் செயலாளர் வாசுகி, அறங்காவலர்கள், நிர்வாகிகள், 500-க்கும் மேற்பட்ட கல்லூரி மாணவ, மாணவிகள் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். இந்த இருநாள் மாநாட்டில், சிந்து நதிக்கும் தமிழகத்தின் தாமிரபரணி உள்ளிட்ட பல்வேறு நதிகளுக்கும் இடையிலான ஆன்மிக மற்றும் நாகரிக தொடர்பு குறித்து பல்வேறு ஆராய்ச்சியாளர்கள் கருத்துகளை எடுத்துரைத்து பேசுகின்றனர்.

“இந்தியாவில் தற்கொலை தலைநகரமாக இருக்கிறது தமிழகம்” - ஆளுநர் ஆர்.என்.ரவி பேச்சு
SIR | கடலூர் மாவட்டத்தில் 2.46 லட்சம் வாக்காளர்கள் நீக்கம்

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in