

மு.வீரபாண்டியன் | கோப்புப் படம்
சென்னை: பல்கலைக்கழக வேந்தர் விவகாரத்தில் தமிழக உயர்கல்வி அமைச்சர் தவறான தனது நிலைபாட்டை கைவிட வேண்டும் என இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் மு.வீரபாண்டியன் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
இது குறித்து அவர் வெளியிட்ட அறிக்கையில், ‘கடந்த ஆட்சியின்போது பல்கலைக்கழகங்களின் வேந்தராக ஆளுநருக்குப் பதிலாக மாநில முதல்வர் இருக்க வேண்டும் என்பதற்காக தமிழ்நாடு சட்டப்பேரவையில் மசோதா நிறைவேற்றப்பட்டது. அதை அன்றைய ஆளுநர் கிடப்பில் போட்டார். அதை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் அன்றைய அரசு வழக்கு தொடுத்தது. உச்ச நீதிமன்ற தீர்ப்பின் அடிப்படையில் அந்த மசோதா சட்டமானது. அந்தச் சட்டப் போராட்டத்தின் மூலம் மாநில உரிமை நிலைநாட்டப்பட்டது.
இந்த நிலையில் தற்போது பொறுப்பேற்றுள்ள தமிழ்நாடு உயர் கல்வித் துறை அமைச்சர், இது குறித்த முந்தைய அரசின் நிலைபாட்டை பின்பற்ற வேண்டிய கட்டாயம் இல்லை என கூறியுள்ளார்.
அவரது இந்தக் கருத்து ஒன்றிய பாஜக அரசின் மாநில உரிமைப் பறிப்புக்கு வலு சேர்க்கிறது. எனவே, அவர் தனது தவறான கருத்தியல் நிலைபாட்டை கைவிட வேண்டும் என இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ்நாடு மாநில செயற்குழு வலியுறுத்திக் கேட்டுக் கொள்கிறது’ எனத் தெரிவித்துள்ளார்.