

சென்னை: தகவல் அறியும் உரிமைச் சட்டத்திலிருந்து தமிழக அரசின் பொது சட்டம் ஒழுங்கு துறைக்கு விலக்கு அளித்து தமிழக அரசு வெளியிட்ட அரசாணை விலக்கிக் கொள்ளப்பட்டுள்ளது.
இது தொடர்பாக தமிழக சட்டத்துறை அமைச்சர் நிர்மல் குமார் வெளியிட்ட எக்ஸ் பதிவில், “தகவல் அறியும் உரிமைச் சட்டம், 2005, பிரிவு 24 உட்பிரிவு (4)-ன் கீழ், தமிழக அரசின் பொது சட்டம் - ஒழுங்கு துறைக்கு விலக்கு அளித்து, மனிதவள மேலாண்மை துறையால் வெளியிடப்பட்டிருந்த அரசாணை விலக்கிக் கொள்ளப்பட்டுள்ளது.” எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
முன்னதாக, “சட்டம்-ஒழுங்கு தொடர்பான பல முக்கிய விவரங்கள் தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் கீழ் வழங்கப்படாது என்று தமிழ்நாடு அரசு அரசாணை வெளியிட்டது. அதன்படி தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் வரம்பிலிருந்து பொது சட்டம்-ஒழுங்கு துறைக்கு அரசு விலக்கு அளித்துள்ளது. எனவே, தகவல் அறியும் உரிமைச் சட்டம், 2005-ன் கீழ், தமிழ்நாடு அரசின் உளவு மற்றும் பாதுகாப்பு அமைப்பான ‘பொது (சட்டம் மற்றும் ஒழுங்கு)த் துறை’ குறித்து கேட்கப்படும் கேள்விகளுக்கு இனி பதில் அளிக்கப்படாது,” என அந்த அரசாணையில் தெரிவிக்கப்பட்டது.
தமிழக அரசின் இந்த அரசாணைக்கு பாமக, அமமுக, திமுக உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் மட்டுமின்றி, தவெகவுக்கு ஆதரவளிக்கும் விசிக, இடதுசாரிகள் உள்ளிட்ட கட்சிகளும் எதிர்ப்பு தெரிவித்தன.
இதுகுறித்து சிபிஎம் மாநில செயலாளர் பெ.சண்முகம் வெளியிட்ட அறிக்கையில், “தமிழ்நாடு அரசு தகவல் பெறும் உரிமைச் சட்டத்தின் கீழ் சட்டம் ஒழுங்கு தொடர்பான தகவல்களை தர வேண்டியதில்லை என தமிழ்நாடு அரசு அரசாணை வெளியிட்டுள்ளது. தமிழக அரசின் இந்த செயல் வன்மையான கண்டனத்துக்குரியது.
தமிழ்நாட்டின் பொது (சட்டம் - ஒழுங்கு) துறை இந்த சட்டத்தில் இருந்து விதி விலக்கு பெறுவது காவல் நிலைய உயிரிழப்புகள் தொடர்பான விசாரணை அறிக்கைகள் மக்களின் கவனத்திற்கு வருவதை தடுக்கும்; இது மனித உரிமைகளுக்கு பேரபாயத்தை உருவாக்குவது ஆகும். மாணவர்கள் மற்றும் விவசாயிகளின் போராட்டங்கள் உள்ளிட்ட தகவல்களும் இதில் அடங்குமெனில், அது அரசியல் சாசனம் உறுதி செய்துள்ள போராட்ட உரிமைகளை நசுக்க முயற்சிப்பது ஆகும்.
தேசியப் பாதுகாப்பு சட்டத்தின் கீழான தடுப்பு நடவடிக்கைகளுக்கும் பொருந்துமென்பது ஏற்கெனவே எதேச்சாதிகார ஆயுதமாக பயன்படும் அச்சட்டத்தை மேலும் கூர்தீட்டவே செய்யும். மத, சாதி மோதல்கள் குறித்த தகவல்களுக்கு விலக்கு அளிக்கப்படுவது பிற்போக்கான சக்திகளால் பயன்படுத்தப்படக் கூடும். எதை வேண்டுமானாலும் சட்டம் - ஒழுங்கு என்ற வரையறுக்குள் கொண்டு வந்து தகவல்களை மறுக்க முடியும். இது எதேச்சதிகாரமானதும், சட்டத்தின் ஆட்சிக்கும் எதிரானதாகும்.
அண்மைக் காலங்களில் மாணவர்கள், இளைஞர்கள் போராட்டங்களில் காவல்துறை அத்துமீறல்கள் மிகக் கடுமையாக வெளிப்பட்டன. கல்லூரி மற்றும் பள்ளி வளாகங்களுக்குள் காவல்துறை நுழைந்து அராஜகத்தில் ஈடுபட்டது. "கண்காணிப்பு அரசாக" பலப்படுத்துவதற்கான நடவடிக்கைகளும் முடுக்கி விடப்படுகிற நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்பட்டன. மக்களின் போராட்ட உரிமைகள் ஒடுக்கப்படுவதன் நீட்சியாகவே இந்த அரசாணையும் அமைந்திருக்கிறது.
தகவல் பெறும் உரிமைச் சட்டத்தின் அடிப்படையே அரசு நிர்வாகத்தில் வெளிப்படைத்தன்மையை உறுதி செய்வதே ஆகும். சாமானிய மக்களின் கைகளில் ஆயுதமாக திகழக் கூடிய தகவல் பெறும் உரிமைச் சட்டத்தின் முனையை மழுங்கச் செய்யும் இத்தகைய அரசாணை உடனடியாக திரும்பப் பெறப்பட வேண்டும்” எனத் தெரிவித்திருந்தார்.
இதுபோல் பல்வேறு அரசியல் கட்சிகளும் எதிர்ப்பு தெரிவித்திருந்த நிலையில், தகவல் அறியும் உரிமைச் சட்டத்திலிருந்து தமிழக அரசின் பொது சட்டம் ஒழுங்கு துறைக்கு விலக்கு அளித்து தமிழக அரசு வெளியிட்ட அரசாணை விலக்கிக் கொள்ளப்பட்டுள்ளது.