

சென்னை: “சட்டம் - ஒழுங்கு குறித்த தகவல்களை தகவல் பெறும் உரிமைச் சட்டத்தின் கீழ் பெற தடை விதிப்பதா? அரசின் தோல்விகளை ஆர்.டி.ஐ தடை மூலம் மறைக்க முடியாது” என பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் மற்றும் அமமுக பொதுச்செயலாளர் டிடிவி.தினகரன் கண்டனம் தெரிவித்துள்ளனர்.
இதுகுறித்து அன்புமணி வெளியிட்ட அறிக்கையில், “தமிழ்நாட்டில் பொது ( சட்டம் -ஒழுங்கு) துறையை நுண்ணறிவு மற்றும் பாதுகாப்பு அமைப்பாக வகைப்படுத்தி, தகவல் பெறும் உரிமைச் சட்டத்தின் 24 (4) பிரிவின் கீழ் வழங்கப்பட்டுள்ள அதிகாரத்தைப் பயன்படுத்தி தமிழக ஆளுநர் ஆணை பிறப்புத்திருப்பதாகவும், அதன்படி இனி சட்டம் - ஒழுங்கு குறித்த தரவுகள் தகவல் பெறும் உரிமைச் சட்டத்தின் கீழ் வழங்கப்படாது என்றும் தமிழக அரசு அறிவித்திருக்கிறது.
ஒரு மாநிலத்தின் அமைதிக்கும், பாதுகாப்புக்கும் சட்டம் - ஒழுங்கு மிகவும் முக்கியமானது என்ற வகையில், அது குறித்த தகவல்களை பெறும் அடிப்படை உரிமையை மக்களிடமிருந்து தமிழக அரசு பறித்திருப்பது கண்டிக்கத்தக்கது.
தமிழக அரசு பிறப்பித்துள்ள அரசாணையின்படி, சட்டம் - ஒழுங்கின் கூறுகளாகக் கருதப்படும் சாதி, மத மோதல்கள், தடுப்புக்காவல் சட்டத்தின்படியான கைது நடவடிக்கைகள், சட்டம் - ஒழுங்கு குறித்த விசாரணை ஆணையத்தின் பரிந்துரைகள், கைதிகளின் மரணம், காவல்துறை விசாரணை அறிக்கைகள் ஆகியவை இனி தகவல் பெறும் உரிமைச் சட்டத்தின்படி வழங்கப்படாது.
மக்களவை மற்றும் மாநிலங்களவைகளில் சட்டம் மற்றும் ஒழுங்கு தொடர்பான கேள்விகளுக்கு அளிக்கப்படும் பதில்கள், மாணவர், விவசாயி மற்றும் அரசியல் கட்சியினர் உள்ளிட்டோரின் போராட்டம் குறித்த தரவுகளைப் பெறவும் தடை விதிக்கப்பட்டிருக்கிறது. இது மிகவும் அபத்தமானது ஆகும்.
தமிழ்நாடு அரசுக்கு இப்படி ஓர் அறிவுரையை யார் வழங்கினார்கள் என்பது தெரியவில்லை. இந்த அரசாணை நடைமுறைக்கு வந்தால் சட்டம் - ஒழுங்கு பாதுகாப்பு என்ற பெயரில் காவல்துறையினர் அரங்கேற்றும் அத்துமீறல்கள் குறித்த உண்மைகள் மறைக்கப்படும்.
தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு தொடர்பான விசாரணை ஆணையம், சாத்தான்குளம் காவல் நிலைய மரணம் குறித்த தகவல்கள் மற்றும் இதே போன்று இனிவரும் காலங்களில் நிகழும் அத்துமீறல்கள் குறித்த தகவல்கள் எதுவுமே இனி வெளிவராமல் மூடி மறைக்கப்படும். இதிலிருந்தே யாரைப் பாதுகாப்பதற்காக இப்படி ஓர் அரசாணை வெளியிடப்பட்டுள்ளது என்பதை புரிந்து கொள்ள முடியும்.
ஒரு நாட்டில் அல்லது மாநிலத்தில் நிகழும் கொலைகள், கொள்ளைகள், பாலியல் வன்கொடுமைகள், வழிப்பறிகள் உள்ளிட்ட அனைத்தையும் மக்களுக்குத் தெரிவிக்க வேண்டியது மத்திய, மாநில அரசுகளின் கடமை ஆகும். அந்தக் கடமையை நிறைவேற்றுவதற்காகத் தான் தேசிய குற்ற ஆவணக் காப்பகம் அமைக்கப்பட்டு, அதன் மூலம் ஆண்டு தோறும் அறிக்கைகள் வெளியிடப்பட்டு வருகின்றன.
தமிழக அளவிலும் இது போன்ற தகவல்களை மாநில குற்ற ஆவணக் காப்பகம் வெளியிட்டு வந்தது. கடந்த 2013-14 ஆம் ஆண்டில் நிறுத்தப்பட்ட இந்த நடைமுறையை மீண்டும் தொடங்க வேண்டும் என்று அண்மையில் நிறைவடைந்த சட்டப்பேரவைக் கூட்டத் தொடரில் கூட பாட்டாளி மக்கள் கட்சி வலியுறுத்தியது. அதை செய்வதற்கு பதிலாக தகவல் அறியும் உரிமைச் சட்டத்தில் கூட தரவுகளைப் பெற அரசு தடை விதித்திருப்பதை ஏற்றுக் கொள்ள முடியாது.
சட்டம் - ஒழுங்கு தொடர்பான அரசின் தோல்விகளை மூடி மறைப்பது தான் இந்த அரசாணையின் நோக்கம் ஆகும். இது தவறு. இந்த தகவல்கள் தான் ஒரு மாநிலத்தில் சட்டம் - ஒழுங்கு எவ்வாறு பாதுகாக்கப்படுகிறது என்பதை அளவிடுவதற்கான கருவி ஆகும். தரவுகளை வெளியிட தடை விதிப்பதற்கு பதிலாக சட்டம் - ஒழுங்கை மேம்படுத்துவதற்காக இந்த தரவுகளை பயன்படுத்திக் கொள்ள வேண்டும். இது தொடர்பான அரசாணையை தமிழக அரசு உடனடியாக திரும்பப் பெற வேண்டும்.” எனத் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அமமுக பொதுச்செயலாளர் டிடிவி.தினகரன் வெளியிட்ட அறிக்கையில், “தமிழ்நாடு அரசின் பொதுத்துறையின் சட்டம் ஒழுங்கு பிரிவின் கீழ் வரும் சமுதாய மற்றும் சாதிய மோதல்கள், சட்டம் ஒழுங்கு தொடர்பான விசாரணைக் குழுக்களின் பரிந்துரைகள், காவல் மரணங்கள், துப்பாக்கிச் சூடு தொடர்பான விசாரணைகள், அரசியல் காரணங்களுக்காகப் பதிவு செய்யப்பட்ட வழக்குகள் மாணவர்கள், விவசாயிகள் போராட்டங்கள் தொடர்பான விவரங்களுக்குத் தகவல் அறியும் உரிமைச் சட்டத்தில் விலக்கு அளிக்கும் வகையில் அரசிதழ் பிறப்பித்திருப்பது கடும் கண்டனத்திற்குரியது.
தமிழகத்தின் அன்றாடம் அரங்கேறும் கொலை, கொள்ளை, பெண்களுக்கு எதிரான பாலியல் வன்கொடுமைச் சம்பவங்கள் மற்றும் போதைப் பொருள் தாராளப்புழக்கத்தை கட்டுப்படுத்த எந்தவித நடவடிக்கையும் எடுக்காத காவல்துறை, அதற்கு மாறாக பொதுத்துறையின் சட்டம் ஒழுங்கு பிரிவில் இருக்கும் அனைத்து தகவல்களும் Intelligence உடன் தொடர்புடையது என வகைப்படுத்தி மூடி மறைக்க முயல்வது தன் நிர்வாகத் தடுமாற்றத்தையே வெளிப்படுத்துகிறது.
வெளிப்படையான நிர்வாகத்தை வழங்குவோம் என மேடைக்கு மேடை முழங்கிவிட்டு, பொதுமக்களின் அடிப்படை உரிமைகள் மற்றும் அரசின் அதிகார பயன்பாட்டுடன் தொடர்புடைய விவகாரங்களை மக்களின் பார்வைக்கு எட்டாத வகையில் மறைத்து வைப்பது எந்த வெளிப்படைத்தன்மையில் வருகிறது என்பதை முதல்வர் விஜய் விளக்க வேண்டும்.
ஆட்சிக்கு வந்த ஆறு மாதங்கள் கூட நிறைவடையாத நிலையில் அரசின் கோப்புகளைப் பொதுமக்களின் பார்வையிலிருந்து மறைக்க முயலும் தவெக அரசு, தனது ஆட்சிக்காலம் நிறைவடைவதற்குள் அரசுக்கும் மக்களுக்குமான தொடர்பை முழுமையாகத் துண்டித்தாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை என்ற விமர்சனம் பொதுமக்கள் மத்தியில் எழுந்துள்ளது.
எனவே, மக்களின் கேள்விகளுக்குப் பதிலளிக்க முடியாத அரசு நிர்வாகம் வெளிப்படையான நிர்வாகமாக இருக்கவே முடியாது என்பதை உணர்ந்து, தகவல் அறியும் உரிமைச் சட்டத்திலிருந்து பொதுத்துறையின் சட்டம் ஒழுங்கு பிரிவுக்கு விலக்கு அளிக்கும் அரசிதழை உடனடியாக ரத்து செய்திட வேண்டும் என முதலமைச்சர் விஜய்யை வலியுறுத்துகிறேன்” எனத் தெரிவித்துள்ளார்.