

சென்னை: “மத்திய அரசுடன் இணக்கமாக செல்வது வேறு, இணங்கிச் செல்வது வேறு. ஆளுநரின் அத்துமீறல்களை தமிழக அரசு கண்டுகொள்ளாமல் இருப்பது இணங்கிச் செல்வதைப் போன்று தோற்றமளிக்கிறது” என தமிழக வாழ்வுரிமைக் கட்சியின் தலைவர் வேல்முருகன் குற்றம்சாட்டியுள்ளார்.
இதுகுறித்து அவர் வெளியிட்ட அறிக்கையில், “அண்மையில் மதுரையில் பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்ற தமிழ்நாடு பொறுப்பு ஆளுநர் ராஜேந்திர விஸ்வநாத் அர்லேகர் பேசும்போது, “மதுரை வைகை ஆற்றைப் பார்த்தேன். ஆறு உள்ளது, நீர் எங்கே? இதற்கு நாம்தான் பொறுப்பேற்க வேண்டும். துப்பாக்கி எடுத்து போருக்குச் செல்வது மட்டுமல்ல, நதிகளை மீட்பதும் தேசப்பற்று தான்.
மதுரை இளைஞர்கள் இதை ஒரு இலக்காக மாற்றி வைகையை மீட்டெடுக்க முன்வர வேண்டும். வைகை ஆற்றை யாரும் சீரமைக்காவிட்டால், ஆளுநர் மாளிகையே களமிறங்கும்” எனக் கூறியுள்ளார். இதைத் தொடர்ந்து மதுரை மாவட்ட ஆட்சியர் நிசாந்த் கிருஷ்ணா உள்ளிட்ட அரசு அலுவலர்களுடன் ஆய்வுக் கூட்டம் நடத்தினார். அதில் வைகை ஆற்றை பற்றியும் விசாரித்தறிந்தார்.
இதன் தொடர்ச்சியாக நேற்று ஆளுநர் மாளிகையில் நடைபெற்ற புத்தக வெளியீட்டு விழாவில் உரையாற்றிய போது, “மக்கள் பிரச்சினைகளுக்காக போராடுபவர்கள் ஆளுநர் மாளிகையை அணுகலாம். என்னிடம் அளிக்கும் கோரிக்கைகளை தமிழக அரசிடம் கொண்டு சென்று தீர்வு காண அறிவுறுத்துவேன். ஒன்றிணைந்து மக்களுக்காகச் செயல்படுவோம். வாக்களித்த மக்களால் பிரச்சினைகளை உணர முடியும். தீர்வு சொல்லவும் முடியும். என்னிடம் தீர்வுகளை சொன்னால் நான் புதிதாகத் தேர்வு செய்யப்பட்ட முதல்வரிடம் சொல்வேன்” என்று கூறியுள்ளார்.
“ஆளுநர் என்பதை மறந்தும், தன் அதிகாரம் எதுவரை என்பதை உணராமலும், மக்களால் தேர்வு செய்யப்பட்டவர் போல ஆய்வுக் கூட்டம் நடத்துவதும், ‘என்னிடம் கோரிக்கைகளை சொல்லுங்கள், நான் தமிழக அரசிடம் கொண்டு சென்று தீர்வு காண அறிவுறுத்துவேன்’ என்பதும் ஏற்றுக்கொள்ள முடியாதது. ஆளுநரின் செயல்பாடுகளுக்கு கடும் கண்டனத்தை தெரிவித்துக் கொள்கிறேன்.
மாநில உரிமைகளை விட்டுக் கொடுக்காமல் சுயசார்புடன் தமிழ்நாடு அரசு ஆட்சி புரிய வேண்டும். கடந்த காலங்களில் மாநில உரிமைகள் பாதுகாக்கப்பட்டன. ஒன்றிய அரசுடன் இணக்கமாக செல்வது வேறு, இணங்கிச் செல்வது வேறு. ஆளுநரின் அத்துமீறல்களை தமிழ்நாடு அரசு கண்டுகொள்ளாமல் இருப்பது இணங்கிச் செல்வதைப் போன்று தோற்றமளிக்கிறது. மத்தியில் கூட்டாட்சி, மாநிலத்தில் சுயாட்சி என்ற கடந்த கால வரலாறுகளை தமிழக முதல்வர் கவனத்தில் கொள்ள வேண்டும். ஒன்றிய அரசு மாநிலத்திலும் கூட்டாட்சியை நிலைநாட்டும் முயற்சியின் ஒரு பகுதியே ஆளுநரின் இந்தச் செயல்பாடுகள் என குற்றம் சாட்டுகிறேன்’ எனத் தெரிவித்துள்ளார்.