

சென்னை: நவம்பர் 1ஆம் நாள் “தமிழ்நாடு நாள்” விழாவாக சென்னை எழும்பூரில் உள்ள அரசு அருங்காட்சியகக் கலையரங்கில் இன்று (01.11.2026) அமைச்சர் ஆனந்த் தலைமையில் கொண்டாடப்பெற்றது.
இதுகுறித்து தமிழக அரசு வெளியிட்ட அறிக்கையில், ‘மெட்ராஸ் மாநிலமாக உருவான நவம்பர் 1-ஆம் நாளையும், 'தமிழ்நாடு' எனும் பெயர் சூட்டிய அண்ணா சட்டமன்றத்தில் வரலாற்றுச் சிறப்புமிக்க தீர்மானம் முன்மொழியப்பட்டு நிறைவேற்றப்பட்ட ஜூலை 18-ஆம் நாளையும் இந்த அரசு கொண்டாடும் என்பதை மகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறேன் என முதல்வர் விஜய்யால் அறிவிக்கப்பட்டது.
அவ்வகையில், ஜூலை 18ம் நாள் தமிழ்நாடு அரசு தமிழ் வளர்ச்சித் துறையால் தமிழ்நாடு நாள் விழா சிறப்பாக கொண்டாடப்பெற்றது. தற்போது தமிழ்நாட்டின் எல்லைகளை நிர்ணயம் செய்ய அர்ப்பணிப்பு உணர்வோடு போராடிய சிலம்புச் செல்வர் ம.பொ.சிவஞானம், தளபதி விநாயகம், மங்கலங்கிழார். மார்ஷல் நேசமணி. திருவாலங்காடு திருமலைப்பிள்ளை, திருத்தணி ரஷீத், பி.எஸ். மணி, சாம் நத்தாணியேல், தோழர் ஜீவா உள்ளிட்ட பலரது போராட்ட வரலாற்றை நினைவுகூரவும், போற்றவும் நவம்பர் 1ஆம் நாள் “தமிழ்நாடு நாள்” விழாவாக சென்னை எழும்பூரில் உள்ள அரசு அருங்காட்சியகக் கலையரங்கில் இன்று (01.11.2026) அமைச்சர் ஆனந்த் தலைமையில், அமைச்சர்கள் ஆதவ் அர்ஜுனா, ராஜ்மோகன், வன்னி அரசு, விஜயலட்சுமி ஆகியோர் முன்னிலையில் கொண்டாடப்பெற்றது.
இவ்விழாவில் வாழும் தமிழறிஞர் கவிஞர் கே. ஜீவபாரதி மற்றும் நினைவில் வாழும் தமிழறிஞர்கள் பேராசிரியர் ராஜ் கௌதமன், சாரணபாஸ்கரன் (எ) டி.எம்.எம். அகமது, சா. கந்தசாமி, டி.எம். பீர் முகமது ஆகியோரின் நூல்கள் நாட்டுடைமையாக்கம் செய்யப்பட்டு ஒவ்வொருவருக்கும் தலா ரூ.10 லட்சம் நூலுரிமைத் தொகை வழங்கப்பெற்றது.
தமிழ்நாட்டின் எல்லைக்காக பாடுபட்ட எல்லைக் காவலர்களுக்கு உதவித்தொகை ரூ.7500/-லிருந்து ரூ.10000/-ஆக உயர்த்தப்பட்டதற்கான அரசாணை 5 பேருக்கு வழங்கப்பட்டது. 2024 மற்றும் 2025 ஆம் ஆண்டிற்கான தமிழ்ச்செம்மல் விருதாளர்கள் 76 பேருக்கு ரூ.25,000/-மும் தகுதியுரையும், பொன்னாடையும் வழங்கப்பெற்றது. 1330 திருக்குறளையும் முற்றோதல் செய்த 179 மாணாக்கர்களுக்கு குறள் பரிசுத்தொகை ரூ.15,000/-ம் பாராட்டுச் சான்றிதழும் வழங்கப்பெற்றது.
இவ்விழாவில் சட்டமன்ற உறுப்பினர்கள் இரா. விஜய் சரவணன், வெ. நாராயணன், தமிழ்நாடு இயல், இசை, நாடக மன்றத்தின் தலைவர் புஷ்பவனம் குப்புசாமி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்’ எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.