

சென்னை: மத்திய பாஜக அரசுக்கு சாதகமாக, எஸ்ஐஆர் என்ற போர்வையில் ஜனநாயகத்தை தலைமை தேர்தல் ஆணையர் ஞானேஷ்குமார் படுகொலை செய்துவிட்டதாக குற்றஞ்சாட்டி, அவர் பதவி விலக வலியுறுத்தி தமிழ்நாடு காங்கிரஸ் சார்பில், அதன் தலைவர் மாணிக்கம் தாகூர் தலைமையில் சென்னை அண்ணா சாலை, தாராப்பூர் டவர் அருகில் இன்று ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
இதில் முன்னாள் மாநிலத் தலைவர் கே.வி.தங்கபாலு, எம்.பிக்கள் விஜய் வசந்த், சசிகாந்த் செந்தில், முன்னாள் எம்.பி செல்லக்குமார், தேசிய செயலாளர் அறிவழகன், மாநில பொருளாளர் ரூபி மனோகரன், பொது செயலாளர் எம்.சிரஞ்சீவி உள்ளிட்டோர் கலந்துகொண்டு கண்டன உரையாற்றினர்.
பின்னர் ஆர்ப்பாட்டத்தில் மாணிக்கம் தாகூர் பேசியதாவது: எஸ்ஐஆர் மூலம் தலைமைத் தேர்தல் ஆணையர் ஞானேஷ்குமார் மிகப்பெரிய மோசடியை நிகழ்த்தியுள்ளார். இதை காங்கிரஸ் மட்டுமே எதிர்த்து வருகிறது. மகாத்மா காந்தி பல்வேறு போராட்டங்களை தமிழகத்திலிருந்து தான் தொடங்கினார். அவர் வழியில் ராகுல் காந்தியும் தமிழகத்தை மையமாக வைத்து பல போராட்டங்களை முன்னெடுத்து வருகிறார். தலைமைத் தேர்தல் ஆணையர் பதவி விலகும் வரை போராட்டம் தொடரும். இவ்வாறு அவர் பேசினார்.
பின்னர் அவர் செய்தியாளர்களிடம் கூறியதாவது: தலைமைத் தேர்தல் ஆணையராக ஞானேஷ்குமார், 2024-ம் ஆண்டு ஜனவரியில் நியமிக்கப்பட்ட பிறகு, நடைபெற்ற அனைத்து தேர்தல்களிலும் பாஜகவுக்கு எப்படி உதவி செய்யலாம் என திட்டமிட்டு அவர் பணியாற்றியுள்ளார். பாஜக வெற்றி பெறாத இடங்களில் ஞானேஷ் குமாருக்கு வேலையே கிடையாது. குறிப்பாக தமிழகத்துக்கு அவர் தேர்தல் நேரத்தில் ஒரே ஒருமுறை மட்டும் தான் வந்து சென்றார். ஏனென்றால் இங்கு பாஜகவால் வெற்றி பெற முடியாது என்பது நன்றாக தெரியும்.
ஜனநாயகத்தை குழி தோண்டி புதைப்பதில் ஞானேஷ் குமாரும், அமித்ஷாவும் ஒரு தாய் வயிற்று பிள்ளைகள். மக்களவை, சட்டப்பேரவைத் தேர்தல்களில் அவர்கள் பல சதி வேலைகளில் ஈடுபட்டனர். மகாராஷ்டிரா, பிஹார், மேற்கு வங்கம், அசாம் உள்ளிட்ட எல்லா தேர்தல்களிலும் அவர்கள் இப்படித்தான் நடத்தி இருக்கின்றனர், தொடர்ந்து ஜனநாயகத்தின் குரல்களை நசுக்கி வருகின்றனர். இன்று நடைபெற்ற ஆர்ப்பாட்டம் என்பது தொடக்கம் தான்.
இது போன்ற ஆர்ப்பாட்டங்கள் நாடு முழுவதும் எல்லா மாவட்டங்களிலும் நடைபெறும். செப்.29-ம் தேதி நடைபெறும் காங்கிரஸ் காரிய கமிட்டி கூட்டத்தில் அடுத்தகட்ட நடவடிக்கை குறித்து முடிவெடுக்கப்படும்.
இவ்வாறு அவர் கூறினார். இந்த ஆர்ப்பாட்டத்தில், சென்னை மாவட்ட தலைவர்கள் கராத்தே செல்வம், எம்எம்டிஏ கோபி, ஜோதி, பொன்னம்பலம், திலகர், விஜய் தனசேகர் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.