

சென்னை: ‘உதயநிதி ஸ்டாலின் ரசிகர் மன்ற முழு நேர தலைவராக அமைச்சர் அன்பில் மகேஸ் செயல்பட்டு வருவதால் பள்ளிக் கல்வித் துறை சீரழிந்து வருகிறது’ என தமிழக பாஜக செய்தி தொடர்பாளர் ஏ.என்.எஸ்.பிரசாத் கடுமையாக விமர்சித்துள்ளார்.
இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், “முதல் தலைமுறை மாணவராக, கனவுகளுடன் லட்சியங்களுடன் பள்ளிக்குச் சென்று படித்து வந்த திருவள்ளூர் மாவட்டம், ஆர்.கே.பேட்டை, கொண்டாபுரம் காலனியைச் சேர்ந்த 7-ம் வகுப்பு படிக்கும் மாணவர் மோஹித் பள்ளிச் சுவர் இடிந்து உயிரிழந்துள்ள விவகாரத்தை தேசிய பட்டியல் என ஆணையம் தானாக முன்வந்து விசாரித்து கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
தமிழக அரசின் மக்கள் விரோத போக்கால், கல்வித் துறையின் நிர்வாக சீர்கேட்டால், மாவட்ட ஆட்சித் துறையின் அலட்சியத்தால், மிக முக்கியமாக தமிழக பள்ளிக் கல்வித் துறையை மறந்துவிட்டு, துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் ரசிகர் மன்ற முழு நேர தலைவராக அமைச்சர் அன்பில் மகேஸ் செயல்பட்டு வருவதால் கல்வித் துறை சீரழிந்து வருகிறது.
கல்வித் துறையை சீர்கெடச் செய்து, தொடர் நிர்வாக சீர்கேட்டால், பலியாகி உள்ள ஏழை பட்டியல் இன மாணவரின் மரணத்துக்கு தானும் மறைமுகமாக முக்கியமான காரணமாக இருந்துள்ளார் என்பதை யாரும் மறுக்க முடியாது. எனவே, அமைச்சர் அன்பில் மகேஸ் உடனடியாக தார்மிக பொறுப்பேற்று பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் பொறுப்பில் இருந்து ராஜினாமா செய்ய வேண்டும்.
மாவட்டங்களில் உள்ள பள்ளி கட்டிடங்கள், சுற்று சுவர்கள், போதிய அடிப்படை வசதிகள் குறித்து ஆய்வு செய்து மேம்படுத்தாத திருவள்ளூர் மாவட்ட ஆட்சித் தலைவர் மற்றும் மாவட்ட கல்வித்துறை அதிகாரி மற்றும் உயிரிழந்த மாணவர் படித்த கொண்டாபுரம் பள்ளி தலைமையாசிரியர் உள்ளிட்டவர்கள் மீது காவல்துறை சட்டப்படி கிரிமினல் வழக்கை பதிவு செய்ய வேண்டும்” என்று அதில் கூறப்பட்டுள்ளது.