

சென்னை: சந்தைகள், சுற்றுலா தலங்கள், பொருட்காட்சிகள், பொது இடங்களில் ரசாயன நிறமூட்டிகளைப் பயன்படுத்தி தயாரிக்கப்படும் கலர் அப்பளங்கள் விற்பனைக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.
தமிழகத்தில் பல்வேறு சுற்றுலா தலங்கள், பொருட்காட்சிகளில் குழந்தைகளைக் கவரும் வகையில் விதவிதமான வண்ணங்களில் விற்கப்படும் கலர் அப்பளங்களில் தடைசெய்யப்பட்ட ரசாயன நிறமூட்டிகள் பயன்படுத்தப்படுவதாக தொடர்ச்சியாக புகார்கள் எழுந்தன. இதைத் தொடர்ந்து, உணவு பாதுகாப்புத் துறை அதிகாரிகள் பல இடங்களில் சோதனை மேற்கொண்டு மாதிரிகளை சேகரித்தனர். ஆய்வகங்களில் அவற்றை பரிசோதனை செய்ததில், பெரும்பாலான கலர் அப்பள மாதிரிகள் பாதுகாப்பற்றவை என கண்டறியப்பட்டுள்ளது.
இதுதொடர்பாக உணவு பாதுகாப்புத் துறை வெளியிட்ட உத்தரவு: நிறம் சேர்க்கப்பட்ட அப்பளம், வடாம் ஆகியவற்றை அடிக்கடி சாப்பிட்டால் புற்றுநோய் வருவதற்கும் வாய்ப்பு உள்ளது. செயற்கை நிறமிகள் பயன்படுத்தப்படும் உணவுப் பொருட்களை நீண்ட காலம் உட்கொள்வதால் புற்றுநோய் கட்டிகள் ஏற்படும் அபாயம் கணிசமாக அதிகரிக்கிறது.
இவை செரிமான மண்டலத்தை பாதித்து, வயிற்றுப் புண், குடல் பாதிப்புகளை உண்டாக்குகின்றன. தரம் குறைந்த இந்த ரசாயனங்கள் உடலில் இருந்து எளிதில் வெளியேறாமல் கல்லீரல், சிறுநீரகங்களில் தங்கி, அவற்றின் செயல்பாட்டை பாதிக்கின்றன. குழந்தைகளுக்கு அலர்ஜி, கவனச் சிதறலை உண்டாக்கும் ஆபத்தும் உள்ளது.
எனவே, மக்கள் அதிகம் கூடும் பொது இடங்களான வாராந்திர சந்தைகள், புகழ்பெற்ற சுற்றுலா தலங்கள், பொருட்காட்சி வளாகங்களில் கலர் அப்பளங்களை விற்பனை செய்யக்கூடாது. தயாரிப்பாளர்கள், வியாபாரிகளுக்கும் இந்த உத்தரவு பொருந்தும். விதிகளுக்குப் புறம்பாக நிறமூட்டிகளைப் பயன்படுத்தி அப்பளம் தயாரித்து, விற்றால் சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
பெற்றோரும் குழந்தைகளுக்கு கலர் அப்பளங்களை வாங்கித் தரவேண்டாம். செயற்கை நிறம் சேர்க்கப்பட்ட அப்பளங்களை தவிர்த்து, இயற்கையான முறையில் உளுந்து, அரிசியைப் பயன்படுத்தி தயாரிக்கப்படும் அப்பளத்தை வாங்கி பயன்படுத்தலாம். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.