எஃப்சிஆர்ஏ மசோதாவுக்கு எதிராக தமிழக சட்டப்பேரவையில் தீர்மானம் நிறைவேற்றம்!

எஃப்சிஆர்ஏ மசோதாவுக்கு எதிராக தமிழக சட்டப்பேரவையில் தீர்மானம் நிறைவேற்றம்!
Updated on
2 min read

சென்னை: வெளிநாட்டு நன்கொடைகளுக்கு கட்டுப்பாடு விதிக்கும் எஃப்சிஆர்ஏ மசோதாவுக்கு எதிராக தமிழக சட்டப்பேரவையில் அரசு கொண்டு வந்த தனித் தீர்மானம் நிறைவேறியது. இதற்கு பாஜக தவிர பிற கட்சிகள் அனைத்தும் ஆதரவு தெரிவித்தன.

வெளிநாட்டு நன்கொடை ஒழுங்குமுறை சட்ட (எஃப்சிஆர்ஏ) திருத்த மசோதாவை மத்திய அரசு திரும்பப் பெறக் கோரி, தமிழக சட்டப்பேரவையில் பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் ராஜ்மோகன் இன்று தனித் தீர்மானம் கொண்டு வந்தார்.

இந்தத் தீர்மானத்தை அமைச்சர் ராஜ்மோகன் முன்மொழிந்து பேசும்போது, “எஃப்சிஆர்ஏ விதிமுறைகள் தொண்டு நிறுவனங்களின் தன்னாட்சியையும், சிறுபான்மையினர் கல்வி நிறுவனங்களின் செயல்பாட்டையும் பாதிக்கும். இந்தச் சட்டத்தால் சிறுபான்மையினர் பாதிக்கப்படுவர். இந்த மசோதாவை மத்திய அரசு திரும்பபெற வேண்டும். இந்த மசோதா தொடர்பாக மாநில அரசுகளுடன் மத்திய அரசு விரிவாக ஆலோசனை நடத்த வேண்டும்” என்றார்.

இதைத் தொடர்ந்து, அமைச்சர் ஏ.எம்.ஷாஜகான், “தொண்டு நிறுவனங்கள், ஆதரவற்றோர் இல்லங்கள் நடத்தப்படுவது பாதிக்கப்படும். இந்த சட்டம், சிறுபான்மையினரை முடக்கும் முயற்சியாகும்” என்றார்.

அமைச்சர் வன்னியரசு பேசும்போது, “முதலில் சிஏஏ கொண்டுவந்து முஸ்லிம்களை 2-ம் தர குடிமக்கள் ஆக்கினார்கள். தற்போது எஃப்சிஆர்ஏ மூலம் கிறிஸ்தவர்களை குறிவைத்துள்ளனர். கிறிஸ்தவ கல்வி நிறுவனங்களை அபகரிக்க மத்திய அரசு முயற்சி செய்கிறது” என்றார்.

திமுக உறுப்பினர் எஸ்.ஆஸ்டின், “இந்த சட்ட மசோதாவை மத்திய அரசு திரும்பப் பெற வேண்டும் என்று எங்கள் கட்சியின் தலைவர் ஸ்டாலின் ஆரம்பத்தில் இருந்தே வலியுறுத்தி வருகிறார். இந்த சட்டத்தால், சிறுபான்மையினரின் சொத்துகளை பறிமுதல் செய்ய முடியும். தொண்டு நிறுவனங்களின் உரிமை பறிபோகும்” என்றார்.

அதிமுகவின் அக்ரி கிருஷ்ணமூர்த்தி, “எஃப்சிஆர்ஏ சட்டத்தை வரவேற்கும் அதேநேரத்தில், சிறுபான்மையினரை பாதுகாக்க தேவையான திருத்தங்களை செய்து இந்த மசோதவை நிறைவேற்ற வேண்டும். வெளிநாட்டு நிதி மீதான கட்டுப்பாடுகளை வரவேற்கிறோம்” என்றார்.

அதேநேரத்தில் பாஜக உறுப்பினர் எம்.போஜராஜன், “தற்போது இருக்கும் சட்டத்தில் சில திருத்தங்கள், மாற்றங்களை செய்ய வேண்டியுள்ளது. தேசத்துக்கு எதிரான செயல்களைத் தடுக்கும் நோக்கில்தான் இந்த சட்டம் கொண்டுவரப்படுகிறது. எனவே. எப்ஃசிஆர்ஏ அவசியம் தேவை” என்றார்.

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் உறுப்பினர் ஆர்.செல்லசுவாமி, “சிறுபான்மையின மக்கள் வெளிநாட்டு நிதி பெறக்கூடாது என்பதற்காக கொண்டுவரப்படும் சட்டம் இது” என்றார். இந்திய கம்யூனிஸ்ட் உறுப்பினர் கே.மாரிமுத்து, “எஃப்சிஆர்ஏ என்பது ஒடுக்கப்பட்ட மக்கள், குழந்தைகள், முதியோர் நலன்களுக்காக பாடுபடும் தொண்டு நிறுவனங்கள், மருத்துவமனைகள் அனைத்தையும் ஒடுக்கும் சட்டம். சமூக சேவை சங்கங்களை தடுக்கும் ஆயுதமாக இந்த சட்டம் பயன்படுத்தப்படும்” என்றார்.

தேமுதிக உறுப்பினர் பிரேமலதா விஜயகாந்த், “வெளிநாடுகளில் இருந்து வரும் தவறான நிதியை தடுக்க வேண்டும். வெளிநாட்டு நிதி தவறான செயல்களுக்கு செல்லக்கூடாது” என்றார்.

மமக உறுப்பினர் எம்.எச்.ஜவாஹிருல்லா, “வெளிநாடுகளில் இருந்து பணம் வருகிறது என்றால் அது பிரத்யேக வங்கிக்கணக்கு வாயிலாகத்தான் வரும். எனவே, இந்த நிதியை கண்காணிக்கலாம். எஃப்சிஆர்ஏ சட்டம் சிறுபான்மையின மக்களை மட்டுமல்ல; கல்வி, மருத்துவ சேவையில் ஈடுபட்டுள்ள அனைத்து தரப்பினரையும் பாதிக்கும்” என்றார்.

இந்தத் தீர்மானத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து பாஜக உறுப்பினர் வெளிநடப்பு செய்தார். அதைத் தொடர்ந்து, குரல் வாக்கெடுப்பு நடத்தப்பட்டு இந்தத் தீர்மானம் ஒருமனதாக நிறைவேறியதாக பேரவைத் தலைவர் ஜேசிடி.பிரபாகர் அறிவித்தார்.

எஃப்சிஆர்ஏ மசோதாவுக்கு எதிராக தமிழக சட்டப்பேரவையில் தீர்மானம் நிறைவேற்றம்!
“சமூக நீதிக்கு நீட் தேர்வு தடையல்ல” - தமிழிசை விரிவான கருத்து

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in