‘மழை பாதிப்பு புகார்கள் மீது துரித நடவடிக்கை’ - அதிகாரிகளுக்கு முதல்வர் விஜய் அறிவுறுத்தல்

சென்னை மாநகராட்சியின் ரிப்பன் மாளிகையிலுள்ள ஒருங்கிணைந்த கட்டளை மற்றும் கட்டுப்பாட்டு மையத்தில் முதல்வர் விஜய் ஆய்வு

சென்னை மாநகராட்சியின் ரிப்பன் மாளிகையிலுள்ள ஒருங்கிணைந்த கட்டளை மற்றும் கட்டுப்பாட்டு மையத்தில் முதல்வர் விஜய் ஆய்வு

Updated on: 
3 min read

சென்னை: வடகிழக்குப் பருவமழையினை முன்னிட்டு பெருநகர சென்னை மாநகராட்சியில் மேற்கொள்ளப்பட்டுள்ள முன்னெச்சரிக்கை நடவடிக்கை குறித்தும் ஒருங்கிணைந்த கட்டளை மற்றும் கட்டுப்பாட்டு மையத்தினைப் பார்வையிட்டும் ஆய்வு மேற்கொண்ட முதல்வர் விஜய், மழை பாதிப்புகள் தொடர்பாக பொதுமக்கள் அளிக்கும் புகார்கள் மீது உடனுக்குடன் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட வேண்டும் என்று அறிவுறுத்தினார்.

இது தொடர்பாக தமிழக அரசு வெளியிட்டுள்ள அறிக்கை: முதல்வர் விஜய் இன்று (18.10.2026) பெருநகர சென்னை மாநகராட்சியின் ரிப்பன் மாளிகையில், வடகிழக்குப் பருவமழையினை முன்னிட்டு பெருநகர சென்னை மாநகராட்சியில் மேற்கொள்ளப்பட்டுள்ள முன்னெச்சரிக்கை நடவடிக்கை குறித்து அமைச்சர்கள் மற்றும் உயர் அலுவலர்களுடன் ஆய்வு மேற்கொண்டார்.

முதல்வர் விஜய், பெருநகர சென்னை மாநகராட்சியில் உள்ள ரிப்பன் மாளிகை கட்டிட வளாகத்தில் அமைந்துள்ள ஒருங்கிணைந்த கட்டளை மற்றும் கட்டுப்பாட்டு மையத்தினைப் பார்வையிட்டு, நேற்று முதல் பெய்த மழை அளவு விவரங்கள், சுரங்கப்பாதைகள், கால்வாய்கள், மற்றும் ஆறுகளின் முகத்துவாரங்களில் கண்காணிப்பு நடவடிக்கைகள், மக்கள் அளிக்கும் புகார்கள் மீது மேற்கொள்ளப்பட்டுள்ள நடவடிக்கைகள் குறித்து பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

இந்த கட்டுப்பாட்டு மையத்திற்கு பொதுமக்களிடமிருந்து வரப்பெறும் புகார்கள் குறித்து கேட்டறிந்து, அதன் மீது உடனுக்குடன் துரித நடவடிக்கை மேற்கொள்ள அலுவலர்களுக்கு அறிவுறுத்தினார். நேற்று பெய்த கனமழையினைத் தொடர்ந்து சிறப்பாக பணியாற்றிய மாநகராட்சி அலுவலர்கள் மற்றும் இதர துறைகளைச் சேர்ந்த அலுவலர்களுக்கு தனது பாராட்டுகளைத் தெரிவித்தார்.

இதனைத் தொடர்ந்து, கட்டுப்பாட்டு அறையில் அமைச்சர்கள் மற்றும் உயர் அலுவலர்களுடன் பெருநகர சென்னை மாநகராட்சியில் மேற்கொள்ளப்பட்டுள்ள வடகிழக்குப் பருவமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் தொடர்பாக ஆய்வு மேற்கொண்டார்.

பெருநகர சென்னை மாநகராட்சி ஆணையாளர், வடகிழக்குப் பருவமழையினை முன்னிட்டு மேற்கொள்ளப்பட்டுள்ள நடவடிக்கைகள் குறிப்பாக நேற்று பெய்த கனமழையினைத் தொடர்ந்து மேற்கொள்ளப்பட்ட மீட்பு நடவடிக்கைகள் குறித்தும், பொதுமக்களுக்கு வழங்கப்பட்ட உணவு விவரங்கள் குறித்தும் விரிவாக எடுத்துரைத்தார்.

17.10.2026 அன்று இரவு பெருநகர சென்னை மாநகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் குறைந்த நேரத்தில் இயல்பைவிட அதிக அளவில் கனமழை பெய்தது. குறிப்பாக பாரிமுனை பகுதியில் 36 செ.மீ மழையும், கத்திவாக்கம் பகுதியில் 34 செ.மீ மழையும், மணலி மற்றும் எண்ணூர் ஆகிய பகுதிகளில் 21 செ.மீ மழையும் பதிவாகியுள்ளது.

மழைநீர் அகற்றம்: குறைந்த நேரத்தில் இயல்பைவிட அதிகமான மழை பெய்ததன் காரணமாக மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் 35 இடங்களில் மழைநீர் தேக்கம் இருந்தது. பெருநகர சென்னை மாநகராட்சியின் முன்னெச்சரிக்கை நடவடிக்கை காரணமாக மழை பெய்த இடங்களில் ஏற்கனவே தயார் நிலையில் இருந்த மோட்டார் பம்புகளின் மூலமாக அனைத்து இடங்களிலும் மழைநீர் விரைந்து வெளியேற்றப்பட்டது. மழைநீர் தேங்கிய 35 இடங்களிலும் மழைநீர் முற்றிலும் அகற்றப்பட்டுள்ளது.

மரம் மற்றும் மரக்கிளைகள் அகற்றம்: நேற்று இரவு பெய்த மழை காரணமாக மாநகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் 22 இடங்களில் மரங்கள் சாலையில் விழுந்தன. அனைத்து இடங்களிலும் மரங்கள் உடனடியாக மாநகராட்சி பணியாளர்களால் அகற்றப்பட்டு, போக்குவரத்து சீர் செய்யப்பட்டுள்ளது.

நிவாரண மையங்கள்: பெருநகர சென்னை மாநகராட்சியில் தாழ்வான பகுதிகளில் மழைநீர் தேங்கும் போது அப்பகுதியில் வசிக்கும் பொதுமக்களை தங்க வைப்பதற்காக 227 தற்காலிக நிவாரண மையங்கள் தயார் நிலையில் உள்ளன. மழைநீர் தேங்கிய ஒரு சில பகுதிகளில் பொதுமக்களுக்கு மாநகராட்சியின் சார்பில் இன்று காலை 13,500 நபர்களுக்கு உணவு வழங்கப்பட்டது.

சுரங்கப்பாதைகள்: பெருநகர சென்னை மாநகராட்சியில் உள்ள 22 சுரங்கபாதைகளில் மழைநீர் உடனுக்குடன் அகற்றப்பட்டு, சீரான போக்குவரத்து உறுதி செய்யப்பட்டது.

இயந்திரங்கள் மற்றும் மீட்பு உபகரணங்கள்: மீட்பு மற்றும் நிவாரணப் பணிகளுக்காக 1,189 வாகனங்கள் மற்றும் இயந்திரங்கள் தயார்நிலையில் வைக்கப்பட்டுள்ளன. தாழ்வான பகுதிகளில் மழைநீரை உடனுக்குடன் வெளியேற்றுவதற்காக, அதிகத் திறன்கொண்ட மாநகராட்சியின் 676 மோட்டார் பம்புகள் மற்றும் வாடகைக்கு கொள்முதல் செய்யப்பட்ட 100 எச்.பி. திறன் கொண்ட 134 மோட்டார் பம்புகள் மற்றும் 648 டிராக்டர்களில் பொருத்தப்பட்ட மோட்டார் பம்புகளும், மழைநீர் சேகரித்து வெளியேற்றும் 109 நீர் சேகரிப்புத் தொட்டிகளும், தாழ்வான பகுதிகளில் உள்ள பொதுமக்களை மீட்பவதற்காக மாநகராட்சியின் 36 படகுகளும், மீன்வளத்துறை சார்பில் 97 படகுகளும் தயார்நிலையில் வைக்கப்பட்டுள்ளன.

மேலும், மீட்பு மற்றும் நிவாரணப் பணிகளுக்காக 15 சக்திமான மர அறுவை இயந்திரங்கள். 231 பவர்சா மர அறுவை இயந்திரங்கள், 52 டெலஸ்கோபிக் மர அறுவை இயந்திரங்கள், 5 வாகனங்களில் மர அறுவை இயந்திரங்கள் தயார்நிலையில் வைக்கப்பட்டுள்ளன.

தாழ்வான பகுதிகளில் உள்ள பொதுமக்களை தங்க வைப்பதற்காக 227 நிவாரண முகாம்கள் மற்றும் உணவு தயாரித்து வழங்குவதற்காக தேவையான உணவுப் பொருட்களின் இருப்புடன் 112 மைய சமையல் கூடங்கள் தயார்நிலையில் வைக்கப்பட்டுள்ளன.

மேற்குறிப்பிட்ட விவரங்களை கேட்டறிந்த முதல்வர் விஜய், தற்போது தெரிவிக்கப்பட்டுள்ள அதிகனமழை எச்சரிக்கையை முன்னிட்டு அனைத்து துறைகளும் ஒருங்கிணைந்து மேலும் சிறப்பாக பணிகளை மேற்கொள்ள அறிவுறுத்தினார்.

இந்த ஆய்வுக்கூட்டத்தில், பொதுப்பணி மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத் துறை அமைச்சர் ஆதவ் அர்ஜுனா, மருத்துவம், மருத்துவக் கல்வி மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் அருண்ராஜ், வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத் துறை அமைச்சர் கே.ஏ. செங்கோட்டையன், உணவு மற்றும் உணவுப் பொருள் வழங்கல் துறை அமைச்சர் ப. வெங்கடரமணன், பள்ளிக்கல்வி, தமிழ் வளர்ச்சி, செய்தி மற்றும் விளம்பரத் துறை அமைச்சர் ராஜ்மோகன், இந்து சமய அறநிலையத் துறை அமைச்சர் ரமேஷ், செயற்கை நுண்ணறிவு, தகவல் தொழில்நுட்பவியல் மற்றும் டிஜிட்டல் சேவைகள் துறை அமைச்சர் குமார் ஆகியோர் கலந்து கொண்டனர்.

மேலும், தலைமைச் செயலாளர் சாய்குமார், தமிழ்நாடு மின்சார வாரியத் தலைவர் மற்றும் மேலாண்மை இயக்குநர் ராஜேஷ் லக்கானி, நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறை கூடுதல் தலைமைச் செயலாளர் ககன்தீப் சிங் பேடி, வருவாய் நிருவாக ஆணையர் பி. சந்தர மோகன், காவல்துறை தலைமை இயக்குநர் மகேஷ் குமார் அகர்வால், நெடுஞ்சாலைகள் மற்றும் சிறு துறைமுகங்கள் துறை முதன்மைச் செயலாளர் சுன்சோங்கம் ஜடக் சிரு, நீர்வளத்துறை செயலாளர் பிரசாந்த் மு. வடநெரே, பெருநகர சென்னை மாநகராட்சி ஆணையர் ஜி.எஸ். சமீரன், சென்னை பெருநகர காவல் ஆணையர் அமல்ராஜ், வாரியத் தலைவர்கள் மற்றும் அரசு உயர் அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

<div class="paragraphs"><p>சென்னை மாநகராட்சியின் ரிப்பன் மாளிகையிலுள்ள ஒருங்கிணைந்த கட்டளை மற்றும் கட்டுப்பாட்டு மையத்தில் முதல்வர் விஜய் ஆய்வு</p></div>
கிருஷ்ணகிரி அணையில் 2,415 கனஅடி நீர் திறப்பு - 3 மாவட்ட மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in