

சென்னை: ‘சீர்காழியில் முதியவரை காரில் வைத்து தாக்கிய தவெக நிர்வாகி மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். ‘பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும்’ என்று சமத்துவம் பேசும் தவெகவின் கொள்கை வெறும் முழக்கம் மட்டும் தானா?’ என பாஜக தேசிய மகளிரணி தலைவர் வானதி சீனிவாசன் கேள்வி எழுப்பியுள்ளார்.
இது குறித்து அவர் வெளியிட்ட எக்ஸ் பதிவில், ‘மயிலாடுதுறை மாவட்டம், சீர்காழியில் தமிழக வெற்றிக் கழகத்தின் ஒன்றிய துணைச் செயலாளராக உள்ள 'ஜில்லா மணி' என்பவர் முதியவர் ஒருவரை காரில் வைத்து தாக்கும் வீடியோவானது சமூக வலைதளங்களில் பரவி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ஆனால், அது பழைய வீடியோ என்று விளக்கம் அளிப்பதால் மட்டும் இந்த மனிதாபிமானமற்ற செயல் நியாயமாகிவிடாது.
தந்தை வயதுள்ள முதியவரை ஆபாச வார்த்தைகளால் திட்டி, காரில் வலுக்கட்டாயமாக அழைத்துச் சென்று தாக்கி அதனை செல்போனில் வீடியோ எடுத்திருப்பது கடுமையாகக் கண்டிக்கத்தக்கது.
‘பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும்’ என்று சமத்துவம் பேசும் தவெகவின் கொள்கை வெறும் முழக்கம் மட்டும் தானா?
தவெக தலைமை உடனடியாக 'ஜில்லா மணி' மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்க வேண்டும். மேலும், தமிழக அரசு முதியவர்களின் பாதுகாப்பை உறுதி செய்யும் வகையில் கூடுதல் கவனம் செலுத்தி கடுமையான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என வலியுறுத்துகிறேன்’ எனத் தெரிவித்துள்ளார்.