

கும்பகோணம்: “உணவுத்துறை அமைச்சரே விவசாயிகளை தூண்டிவிட்டு, பணியாளர்களை பழிவாங்க வேண்டும் என்ற நோக்கத்தில் செயல்படுகிறாரா என சந்தேகம் எழுகிறது” என காலவரையற்ற உள்ளிருப்புப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள நேரடி நெல் கொள்முதல் நிலைய பணியாளர்கள் தொழிற்சங்கங்களின் கூட்டுக் குழு தெரிவித்துள்ளது.
கும்பகோணம் நுகர்பொருள் வாணிபக்கழக துணை மேலாளர் அலுவலகத்திற்குள், அனைத்து தொழிற்சங்கங்களின் கூட்டுக் குழு மற்றும் அனைத்து நெல் கொள்முதல் நிலையப் பணியாளர்கள் அமைப்பின் சார்பில் நேரடி நெல் கொள்முதல் நிலைய பணியாளர்கள் பணி புறக்கணித்து காலவரையற்ற உள்ளிருப்புப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
கும்பகோணம் கோட்டத்துக்கு உட்பட்ட கும்பகோணம், பாபநாசம், திருவிடைமருதூர் ஆகிய 3 வட்டங்களில் குறுவை அறுவடை பணி தொடங்கி உள்ள நிலையில், மொத்தம் 230 நேரடி நெல் கொள்முதல் நிலையம் திறக்கப்பட்டு நெல் மூட்டைகள் கொள்முதல் செய்யப்பட்டு வருகிறது.
இந்நிலையில் அண்மைக்காலமாக கொள்முதல் செய்யப்பட்ட நெல் மூட்டைகளை இயக்கம் செய்யாததால் ஒவ்வொரு கொள்முதல் நிலையங்களிலும் பல ஆயிரத்திற்கும் மேற்பட்ட நெல் மூட்டைகள் தேக்கம் அடைந்துள்ளன.
இதனால் எடை குறைவு, நெல் மணிகள் சேதம், மழையினால் நெல் மணிகள் வீணாவது உள்ளிட்ட பல்வேறு காரணங்களால், கொள்முதல் நிலையப் பணியாளர்களிடம் இழப்பீடு வாங்குவது, அவர்களை தற்காலிக பணி நீக்கம் செய்வது போன்ற பல்வேறு காரணங்களால் பணியாளர்கள் பாதிக்கப்படுவது வழக்கமாக உள்ளது.
இந்நிலையில், கும்பகோணம் கோட்டத்தில் உள்ள 230 நெல் கொள்முதல் நிலையத்தில் பணியாற்றும் பட்டியல் எழுத்தர், உதவுபவர், பாதுகாவலர் உள்ளிட்ட சுமார் 500-க்கும் மேற்பட்டோர், பணியை புறக்கணித்து திடீரென துணை மேலாளர் அலுவலகத்துக்குள் வந்து தரையில் அமர்ந்து உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இதையறிந்த துணை மேலாளர் மெய்கண்டமூர்த்தி, அவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தியும், கொள்முதல் நிலையங்களில் இயக்கம் செய்யப்படாமல் உள்ள நெல் மூட்டைகளை உடனடியாக இயக்கம் செய்யும் வரை காலவரையற்ற உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபடப்போவதாக போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் தெரிவித்துள்ளனர்.
இது தொடர்பாக நுகர்பொருள் வாணிபக்கழக பாரதிய தொழிலாளர்கள் சங்க மாநில பொதுச் செயலாளர் நாகராஜன் கூறியது: கும்பகோணம் கோட்டத்தில் உள்ள அனைத்து நெல் கொள்முதல் நிலையங்களில் கொள்முதல் செய்யப்பட்ட சுமார் 10 ஆயிரம் முதல் 15 ஆயிரம் நெல் மூட்டைகள் திறந்த வெளியில் போதிய பாதுகாப்பின்றி இயக்கம் செய்யப்படாமல் 15 நாட்களாக தேங்கி உள்ளன.
இயற்கை இடர்பாடுகள் போன்ற பல்வேறு காரணங்களால் சேதமடையும் நெல் மூட்டைகளுக்கான இழப்பீட்டை, கொள்முதல் பணியாளர்கள் பருவம் தோறும் பல லட்சம் ரூபாய் அவர்கள் செலுத்த வேண்டி உள்ளது.
இதனால் பெரும்பாலான பணியாளர்கள் பணிக்கு வராமல் உள்ளனர். எனவே, தேங்கி உள்ள நெல் மூட்டைகளை போர்க்கால அடிப்படையில் இயக்கம் செய்ய வேண்டும். உடனடியாக இயக்கம் செய்யாவிட்டால் கொள்முதல் பணியை நிறுத்தி பல்வேறு தொடர் போராட்டங்களை முன்னெடுப்போம். இதே போல் அதிகாரிகள் தமிழக அரசுக்கு அவப்பெயரை ஏற்படுத்த வேண்டும் என்ற நோக்கத்தில் செயல்பட்டு வருகின்றனர்.
உணவுத்துறை அமைச்சர் கடலூர் வட்டாரத்தில் உள்ள மருவாய் கொள்முதல் நிலையத்தில் அண்மையில் ஆய்வு மேற்கொண்டார். அவர், கொள்முதல் நிலைய பணியாளர்களுக்கு என்ன தேவை என்று கேட்காமல், 15 நாட்களுக்கு முன் நெல் விற்பனை செய்த விவசாயிடம், ரூ. 50, ரூ.60 தொகை கேட்டார்களா என கேட்கின்றார். இது தவறான முன்னுதாரணம், அமைச்சரே விவசாயிகளை தூண்டிவிட்டி, பணியாளர்களை பழிவாங்க வேண்டும் என்ற நோக்கத்தில் செயல்படுகிறாரா என சந்தேகம் எழுகிறது.
எனவே, அமைச்சர் இது போன்ற தவறான ஆய்வு முறையை கைவிட வேண்டும், நெல் கொள்முதல் நிலைய பணியாளர்களுக்கு ரூ.30 ஆயிரம் ஊதியம் வழங்கி, பணி நிரந்தரம் செய்ய வேண்டும், 3 ஆயிரம் காலிப்பணியிடங்களை நிரப்பி, அவர்களது இடர்பாடுகளை களைய வேண்டும். எனத் தெரிவித்துள்ளார்.