

சென்னை: கோயில் சொத்துகளை ஆக்கிரமிப்பு செய்தவர்களுக்கு ஆதரவாக ஆர்ப்பாட்டம் நடத்தப்படும் என கூறி இருப்பதன் மூலம், தமிழகத்தில் கலவரத்தை ஏற்படுத்தும் விதமாக செயல்படும் கம்யூனிஸ்ட் கட்சியினர் மீது தமிழக அரசு தக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று இந்து முன்னணி வலியுறுத்தியுள்ளது.
இது தொடர்பாக இந்து முன்னணி மாநில தலைவர் காடேஸ்வரா சி. சுப்பிரமணியம் வெளியிட்டுள்ள அறிக்கையில், “கோயில் நிலத்தை ஆக்கிரமித்து குடியிருக்கும் நபர்களுக்கு பட்டா வழங்க வேண்டும், கோயிலுக்குச் சொந்தமான கடைகளில் வாடகை உயர்த்த கூடாது என கோயில் நில ஆக்கிரமிப்பாளர்களின் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கோயில் சொத்து ஆக்கிரமிப்பாளர்களுக்கு ஆதரவாக ஆர்ப்பாட்டம் நடத்தப்படும் என இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் முன்னாள் மாநில செயலாளர் முத்தரசன் அறிவித்திருப்பதற்கு இந்து முன்னணி கடும் கண்டனத்தை தெரிவித்துக்கொள்கிறது.
தமிழ்நாட்டில் மட்டுமல்ல நாடு முழுவதும் மக்களால் புறக்கணிக்கப்பட்டு தூக்கி எறியப்பட்டவர்கள் கம்யூனிஸ்ட் கட்சியினர். தமிழகத்தில் தற்போது நடந்த இடைத்தேர்தலில் மக்கள் இவர்களை புறந்தள்ளி இருக்கிறார்கள்.
கோயில் நிலம் சார்ந்த வழக்கில், கோயில் நிலம் இனாம் நிலமாக இருந்தாலும், அது அந்த கோயிலில் உள்ள கடவுளுக்கே சொந்தமானது என்றும் அரசாங்கம் கோயில் நிலத்தை பாதுகாக்கும் காவலர் மட்டுமே என்றும் உச்ச நீதிமன்றமே சமீபத்தில் ஆணை பிறப்பித்தது.
கோயில் சொத்து ஆக்கிரமிப்பாளர்களுக்கு சொந்தமானதல்ல என்று சட்டபூர்வ ஆணை இருந்தும் கம்யூனிஸ்டு கட்சியினர், தங்கள் இருப்பை காட்டி கொள்ள, தமிழகத்தில் ஒரு பதட்டமான சூழ்நிலையை உருவாக்க கோயில் சொத்துக்கள் விஷயத்தில் ஆக்கிரமிப்பாளர்களுக்கு ஆதரவாக ஆர்ப்பாட்டம் நடத்த முனைவது அவர்கள் நிலையை கேலி கூத்தாக்கியுள்ளது.
கோயில் சொத்து மைனர் சொத்தாகவே கருதப்படுகிறது என்று சென்னை உயர் நீதிமன்றம் தனது தீர்ப்புகளில் சொல்லி இருக்கிறது. ஆகையால் அதை பெயர் மாற்றம் செய்யவோ, விற்கவோ, தங்கள் விருப்பபடி பயன்படுத்தவோ அரசாங்கத்துக்கு உரிமை இல்லை.
கோயில் நிலங்களில் குடியிருப்பவர்கள் பல ஆண்டுகளாக ஆக்கிரமித்து வீடுகட்டி வசித்து வருகிறார்கள் என்பதற்காக கோயில் நில உரிமையையும் கோயில் நிலத்தின் மீது கட்டி உள்ள கட்டிடத்தின் உரிமையையும் ஆக்கிரமிப்பாளர்களுக்கு வழங்க வேண்டும் என்ற கோரிக்கை ஏற்கத்தக்கதல்ல.
தமிழகத்தில் நன்றாக செயல்பட்ட பல ஆலைகளையும் அரசின் பொதுத்துறை நிறுவனங்களையும் போராட்டம் என்ற பெயரில் சின்னாபின்னமாக்கி தொழிலாளர்களின் வாழ்வாதாரத்தை சீரழித்த கம்யூனிஸ்ட் கட்சியினருக்கு, கோயிலையும், கோயில் சொத்துக்களையும் அழித்து ஒழிக்க வேண்டும் என்ற எண்ணம் வந்திருப்பது மிகுந்த கண்டனத்திற்குரியது.
தமிழர் பண்பாட்டின், கலாச்சாரத்தின் கேந்திரமாக விளங்கும் கோயிலை அழித்து ஒழிக்க வேண்டும் என்ற எண்ணத்துடன் கோயிலுக்கு எதிராக தொடர் போராட்டங்களை நடத்தி வரும் கம்யூனிஸ்டு கட்சியினர், தமிழகத்தில் காலம் காலமாக விவசாயிகள் அனுபவித்து வரும் நிலங்களையும் ஆயிரக்கணக்கான வருடங்களாக குடியிருந்து வரும் வீடுகள் மற்றும் சொத்துக்களையும் வக்ஃப் போர்டு என்ற பெயரில் திடீரென்று பெயர் மாற்றம் செய்து அபகரிப்பதை பற்றி இதுவரை வாய் திறக்காதது ஏன்?
ஏழைப் பங்காளன் என்று சொல்லும் கம்யூனிஸ்டு கட்சியினர், உண்மையாகவே ஏழைகளுக்காகவும் தொழிலாளர்களுக்காகவும் போராடுபவர்கள் என்றால் கோடிக்கணக்கான ரூபாய் மதிப்புள்ள தங்கள் கட்சியின் சொத்துக்களை வீடு இல்லாத ஏழைகளுக்கு கொடுக்கலாமே.
கோயில் நில ஆக்கிரமிப்பாளர்கள் மீது தமிழக அரசு தக்க நடவடிக்கை எடுத்து கோயில் சொத்துக்களை மீட்டு அதை பாதுகாக்க வேண்டும். சட்டத்திற்கு புறம்பான இது போன்ற அப்பட்டமான நியாயமற்ற கோரிக்கைகளை தமிழக அரசு புறந்தள்ள வேண்டும்.
கோயில் சொத்துகள் கோயிலுக்கே சொந்தமானவை. அவற்றை பாதுகாப்பது அரசின் கடமை ஆகையால் இந்து சமய அறநிலையத் துறையும், தமிழக அரசும் கோயில் சொத்து மற்றும் நில ஆக்கிரமிப்பாளர்கள் மீது தக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். தமிழகத்தில் வேண்டுமென்றே கலவரம் ஏற்படுத்தும் விதத்தில் செயல்படும் கம்யூனிஸ்ட் கட்சியினர் மீது தக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்” என்று அவர் கூறியுள்ளார்.