“உயர் மட்டத்தில் ‘வாக்குத் திருட்டு’ நடக்கிறது” - ஞானேஷ் குமார் மீது ராகுல் காந்தி சாடல்

“உயர் மட்டத்தில் ‘வாக்குத் திருட்டு’ நடக்கிறது” - ஞானேஷ் குமார் மீது ராகுல் காந்தி சாடல்
Updated on: 
1 min read

புதுடெல்லி: ‘வாக்குத் திருட்டு’ குறித்து காங்கிரஸ் கட்சி நீண்ட காலமாக பேசி வருகிறது. ஆனால், இப்போதுதான் ‘வாக்குத் திருட்டு’ என்பது உயர் மட்டத்தில் இருந்து நடக்கிறது என்பதை ஒட்டுமொத்த நாடும் உணர்ந்து வருகிறது என்று ராகுல் காந்தி தெரிவித்துள்ளார்.

வாக்காளர் பட்டியலில் இருந்து முறைகேடாக பெயர்கள் நீக்கப்படுவதை ‘வாக்குத் திருட்டு’ என குறிப்பிடும் காங்கிரஸ் கட்சி, நீக்கப்பட்ட பெயர்களை வாக்காளர் பட்டியலில் மீண்டும் சேர்க்க வேண்டும், தலைமைத் தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமார் பதவி விலக வேண்டும் என வலியுறுத்தி தொடர் பிரச்சாரங்களை மேற்கொண்டு வருகிறது.

இந்நிலையில், இந்தக் கோரிக்கைகளை வலியுறுத்தி வரும் நவம்பர் 1-ம் தேதி டெல்லி ராம்லீலா மைதானத்தில் மாபெரும் பேரணிக்கு காங்கிரஸ் தலைமையிலா இண்டியா கூட்டணி அழைப்பு விடுத்துள்ளது.

இந்த பேரணியை வெற்றிகரமாக்கும் முயற்சியின் ஒரு பகுதியாக, டெல்லி திரிலோக்புரி பகுதியில் ‘வாக்களிக்கும் உரிமை - வாழ்வதற்கான உரிமை’ என்ற பெயரில் நடைபெற்ற கலந்துரையாடல் நிகழ்ச்சியில் பங்கேற்று வாக்காளர்களின் குறைகளைக் கேட்டறிந்தார்.

அப்போது பேசிய ராகுல் காந்தி, “வாக்களிப்பது ஒவ்வொரு இந்திய குடிமகனின் உரிமை. ஆனால், இன்று கோடிக்கணக்கான வாக்காளர்களின் உரிமைகள் பறிக்கப்பட்டுள்ளன.

இந்தப் பிரச்சினையை நாங்கள் நீண்ட காலமாக எழுப்பி வருகிறோம். ஆனால், இப்போதுதான் ‘வாக்குத் திருட்டு’ மேல் மட்டத்தில் இருந்து நடக்கிறது என்பதை நாடு முழுவதும் உணர்ந்து வருகிறது. ஏழை மக்கள் வாக்காளர் பட்டியலில் இருந்து நீக்கப்படுகிறார்கள். நரேந்திர மோடி பணக்காரர்களுக்கு மட்டுமேயான இந்தியாவை உருவாக்குவதில் தீவிரமாக இருக்கிறார்.

இன்றைய கூட்டத்தில் 4 வாக்குச்சாவடிகளில் இருந்து 416 வாக்காளர்களின் பெயர்கள் சட்டவிரோதமாக நீக்கப்பட்டதை அனைவரும் பார்த்தனர். இது குறித்து நாங்கள் ஞானேஷ் குமாரிடம் கேள்வி எழுப்பும்போதெல்லாம் அவர் எந்த பதிலும் அளிப்பதில்லை.

ஞானேஷ் குமார் ராஜினாமா செய்யும் வரை ஒட்டுமொத்த எதிர்க்கட்சிகளும் ஒன்றுபட்டு இந்த அநீதிக்கு எதிராக தொடர்ந்து குரல் எழுப்பும். மக்களின் வாக்குரிமையை நாங்கள் பாதுகாப்போம்” எனத் தெரிவித்தார்.

“உயர் மட்டத்தில் ‘வாக்குத் திருட்டு’ நடக்கிறது” - ஞானேஷ் குமார் மீது ராகுல் காந்தி சாடல்
பிரதமர் மோடியுடன் லிச்சென்ஸ்டைன் இளவரசர் அலாய்ஸ் பேச்சுவார்த்தை

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in