

கூடுவாஞ்சேரி: மதசார்பற்ற முற்போக்கு கூட்டணி வேட்பாளர்கள் அறிமுக கூட்டத்தில் கடுமையாக உழைப்போம், ஒற்றுமையாக உழைப்போம் என அமைச்சர் தா.மோ.அன்பரசன் வேண்டுகோள் விடுத்தார்.
காஞ்சிபுரம் வடக்கு மாவட்டத்தில் உள்ள 6 தொகுதிகளில் போட்டியிடும் வேட்பாளர்கள் அறிமுக கூட்டம், மாவட்ட செயல் வீரர்கள் கூட்டம் கூடுவாஞ்சேரியில் நேற்று முன் தினம் நடைபெற்றது.
காஞ்சிபுரம் வடக்கு மாவட்ட திமுக செயலாளர் தா.மோ.அன்பரசன் தலைமையில் நடைபெற்ற கூட்டத்தில் மண்டல தேர்தல் பொறுப்பாளர் ஆ.ராசா கலந்துகொண்டு ஆலந்தூர் வேட்பாளர் தா.மோ.அன்பரசன், செங்கல்பட்டு வேட்பாளர் எம்.கே.டி.கார்த்திக் தண்டபாணி, ஸ்ரீபெரும்புதூர் காங்கிரஸ் வேட்பாளர் செல்வப்பெருந்தகை, பல்லாவரம் தே.மு.தி.க வேட்பாளர் அனகை முருகேசன், தாம்பரம் திமுக வேட்பாளர் ஆர்.எஸ்.கிருத்திகாதேவி, திருப்போரூர் வி.சி.க வேட்பாளர் பன்னீர்தாஸ் ஆகியோரை அறிமுகம் செய்துவைத்து பேசினார்.
அமைச்சர் தா.மோ.அன்பரசன் பேசியது: தமிழகம் சமச்சீரான வளர்ச்சியை அடைந்துள்ளது, 50 ஆண்டுகளில் செய்ய வேண்டிய சாதனைகளை 5 ஆண்டுகளில் செய்த அரசாக திராவிட மாடல் அரசு திகழ்கிறது.
கடந்த தேர்தலில் கொடுத்த வாக்குறுதிகளை நிறைவேற்றி அந்த திட்டங்களை மக்களிடம் சேர்த்தவர் நமது தலைவர் என்றும், 1974-ம் ஆண்டு 184 இடங்களில் வெற்றி பெற்றோம்.
75 ஆயிரம் வாக்குகள்..
அதுபோல வரும் தேர்தலில் அதை மிஞ்சக்கூடிய வெற்றி அமையவேண்டும். வரும் 20 நாள் கடுமையாக உழைக்கவேண்டும், ஆகையால் கடுமையாக உழைப்போம், ஒற்றுமையாக உழைப்போம் ஒவ்வொரு தொகுதியிலும் 75 ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றிபெற அதற்கான பணிகளை செய்ய வேண்டும் என்று தா.மோ.அன்பரசன் அறிவுறுத்தினார்.