

திருவள்ளூர் / காஞ்சிபுரம்: தொடர் மழையால் பூண்டி ஏரி முழு கொள்ளளவை எட்டும் வாய்ப்புள்ளதால், மீண்டும் உபரி நீர் திறக்கப்பட்டுள்ளது; புழல் ஏரியிலிருந்து வெளியேற்றப்படும் உபரிநீரின் அளவு விநாடிக்கு 2,500 கனஅடியாக அதிகரிக்கப்பட்டுள்ளது.
இந்திய வானிலை ஆய்வு மையம், திருவள்ளூர் மாவட்டத்துக்கு கனமழைக்கான எச்சரிக்கையை தொடர்ந்து விடுத்து வருகிறது. இதனால், சென்னை குடிநீர் ஏரிகளில் முக்கிய ஏரியான பூண்டி ஏரியிலிருந்து கடந்த நவ.27-ம் தேதி முதல் உபரிநீர் வெளியேற்றப்பட்டு வந்தது. சில நாட்கள் கழித்து நீர்ப்பிடிப்பு பகுதிகளில் இருந்து நீர்வரத்து படிப்படியாக குறைந்ததால், உபரிநீர் வெளியேற்றம் நிறுத்தப்பட்டது.
இந்நிலையில், திருவள்ளூர் மாவட்டத்தில் பெய்து வரும் தொடர் மழையால், பூண்டி ஏரிக்கு தொடர்ந்து நீர்வரத்து உள்ளது. நேற்று காலை 6 மணியளவில் விநாடிக்கு 2,540 கனஅடி நீர்வரத்து இருந்தது. இதனால், 3,231 மில்லியன் கனஅடி கொள்ளளவு மற்றும் 35 அடி உயரம் கொண்ட பூண்டி ஏரியின் நீர் இருப்பு 2,851 மில்லியன் கனஅடியாகவும், நீர்மட்ட உயரம் 34.09 அடியாகவும் இருந்தது.
ஆகவே, பூண்டி ஏரி முழு கொள்ளளவை எட்டும் நிலையில் உள்ளதால் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக, நேற்று காலை 8 மணியளவில் பூண்டி ஏரியிலிருந்து மீண்டும் உபரிநீர் திறக்கப்பட்டது.
திருவள்ளூர் மாவட்டத்தில் பெய்து வரும் தொடர் மழையால் புழல் ஏரி, முழு கொள்ளளவை எட்டும் நிலையில் இருந்ததால், நேற்று முன் தினம் மதியம் முதல், புழல் ஏரியிலிருந்து உபரிநீர் வெளியேற்றப்பட்டு வருகிறது.
நேற்று மாலை 5 மணி முதல், 2,500 கனஅடி உபரிநீர் திறக்கப்படுகிறது. சோழவரம் ஏரியிலிருந்து தற்போது விநாடிக்கு 500 கனஅடி உபரிநீர் வெளியேற்றப்பட்டு வருகிறது.
ஊத்துக்கோட்டை அருகே ஆந்திர மாநில பகுதியில் ஆரணி ஆற்றின் குறுக்கே உள்ளது பிச்சாட்டூர் அணை. 1.85 டி.எம்.சி. கொள்ளளவு கொண்ட இந்த அணை, மழையால் முழு கொள்ளளவை எட்டும் நிலையில் உள்ளது. தற்போது விநாடிக்கு 800 கனஅடி உபரிநீர் வெளியேற்றப்பட்டு வருகிறது.
பிச்சாட்டூர் அணையிலிருந்து திறக்கப்பட்டுள்ள உபரிநீர் இன்று தமிழக எல்லையான ஊத்துக்கோட்டை பகுதிக்கு வந்தடையும் என, எதிர்பார்க்கப்படுவதாக நீர்வள ஆதாரத் துறையினர் தெரிவித்துள்ளனர்.
காஞ்சிபுரம் மாவட்டம், குன்றத்தூர் வட்டத்தில் அமைந்துள்ள செம்பரம்பாக்கம் ஏரியின் மொத்த கொள்ளளவு 3.645 டிஎம்சி (3645 மில்லியன் கன அடி) மற்றும் அதன் மொத்த ஆழம் 24 அடி ஆகும்.
இந்த ஏரியில் நேற்றைய நிலவரப்படி ஏரியில் 3.135 டிஎம்சி நீர் இருப்பு உள்ளது, இது 22.06 அடி ஆழமாகும். மேலும், ஏரிக்கு நீர்வரத்து விநாடிக்கு 1,400 கனஅடியாக உள்ளது. விநாடிக்கு 200 கனஅடி வீதம் உபரிநீர் வெளியேற்றப்பட்டு வருகிறது.செம்பரம்பாக்கம் ஏரியில் ஆட்சியர் கலைச்செல்வி ஆய்வு செய்தார்.
இந்த ஆய்வின்போது, ஸ்ரீபெரும்புதூர் வருவாய் கோட்டாசியர் சி.பாலாஜி, குன்றத்தூர் வட்டாட்சியர் சேரன்தயன், நீர்வளத் துறை உதவி பொறியாளர் தனசேகரன் உடன் இருந்தனர். காஞ்சிபுரத்தில் பெய்த தொடர் மழை காரணமாக காஞ்சிபுரம் மாவட்டத்தில் 14 ஏரிகள் நிரம்பியுள்ளன.