

சென்னை: ஓபிசி கிரீமிலேயர் பிரிவினர் நிர்ணயம் தொடர்பான உச்ச நீதிமன்ற தீர்ப்பை வரவேற்பதாகவும், இது அந்த மக்களின் நீதிக்கான போராட்டத்துக்கு கிடைத்த வெற்றி என்றும் முதல்வர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் நேற்று வெளியிட்ட சமூக வலைதளப் பதிவில் கூறியிருப்பதாவது: ஓபிசி மக்களின் நீதிக்கான பல்லாண்டு போராட்டத்துக்கு மாபெரும் வெற்றி. ஓபிசி கிரீமிலேயர் பிரிவினர் நிர்ணயம் தொடர்பாக உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பை வரவேற்கிறேன். கிரீமிலேயர் நிர்ணயத்தின்போது ஊதிய வருமானத்தையும் தொழில் அல்லது சொத்து மூலமாக ஈட்டும் வருமானத்தையும் ஒரே தட்டில் வைத்து பார்க்கக் கூடாது என உச்ச நீதிமன்றம் கூறியுள்ளது.
ஓபிசி மக்களின் நியாயமான உரிமைகள் கிடைக்காமல் போவதில் இருந்து இந்த தீர்ப்பு பாதுகாக்கிறது. குடிமைப் பணித் தேர்வுகளுக்கான தகுதி வரையறை தொடர்பான உயர் நீதிமன்றங்களின் தீர்ப்புகளையும் உறுதி செய்துள்ளது. பல்வேறு துறைகளின் வேலைவாய்ப்புகளில் ஓபிசி மக்களுக்கு எதிராக இருந்த பாகுபாட்டை நிராகரித்திருக்கிறது.
இட ஒதுக்கீடு என்பதே சமூக ரீதியாக பிற்படுத்தப்பட்டவர்களுக்கானது எனும் நோக்கத்தை மீண்டும் உறுதிப்படுத்தியிருக்கிறது. எனினும், இந்த வழக்கில் உண்மையாகவே பிற்படுத்தப்பட்ட ஓபிசி பிரிவினர் பலரின் நியாயமான உரிமையை மறுக்கும் நிலைப்பாட்டை என்டிஏ அரசு எடுத்து வாதாடியது. அது மட்டுமல்லாமல், முன்னேறிய வகுப்பினருக்கான பொருளாதார ரீதியான இடபிள்யூஎஸ் இட ஒதுக்கீட்டைக் கொண்டு வந்து, இட ஒதுக்கீட்டுக்கான அடிப்படையாக அரசியலமைப்புச் சட்டம் வகுத்துத் தந்த வரையறையை மீறியது.
மருத்துவப் படிப்புகளுக்கான அகில இந்திய தொகுப்பில் 27 சதவீத ஓபிசி இட ஒதுக்கீட்டை உறுதி செய்தது உள்ளிட்ட பலவற்றிலும் சமூக நீதிக்காக திமுக தொடர்ச்சியாகப் போராடி வருகிறது. சமூக நீதிக்கான நம் போராட்டம் தொடரும். இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.