

சிவகாசி: நிபந்தனைகளுக்கு உட்பட்டு அடுத்த தலைமுறை பசுமை இணைப்பு பட்டாசு (சரவெடி) உற்பத்திக்கு உச்ச நீதிமன்றம் அனுமதி வழங்கியுள்ளதால் மகிழ்ச்சி அடைந்துள்ள சிவகாசி பட்டாசு உற்பத்தியாளர்கள், இந்தத் தீர்ப்பு பட்டாசு தொழிலில் ஏற்பட்டு வரும் தொழில்நுட்ப முன்னேற்றம் மற்றும் ஆராய்ச்சிக்கு கிடைத்த அங்கீகாரம் என தெரிவித்துள்ளனர்.
இந்தியாவின் மொத்த பட்டாசு தேவையில் 90 சதவீதத்துக்கும் அதிகமான பட்டாசுகள் சிவகாசி பகுதியில் உள்ள தொழிற்சாலைகளில் உற்பத்தி செய்யப்படுகிறது. விற்பனை மதிப்பில் ஆண்டுக்கு ரூ.6 ஆயிரம் கோடி அளவுக்கு சிவகாசியில் பட்டாசுகள் உற்பத்தி செய்யப்படுகிறது.
சுற்றுச்சூழலுக்கு மாசு ஏற்படுவதால் பட்டாசு உற்பத்தி, விற்பனை மற்றும் வெடிக்க தடை கோரி 2015-ம் ஆண்டு தொடரப்பட்ட வழக்கை விசாரித்த உச்ச நீதிமன்றம், பேரியம் நைட்ரேட் மற்றும் சரவெடி பட்டாசுக்கு தடை விதித்து, சுற்றுச் சூழலுக்கு உகந்த பசுமை பட்டாசுகள் மட்டுமே தயாரிக்க வேண்டும் என இடைக்கால தீர்ப்பளித்தது.
அதன்படி, இந்திய அறிவியல் மற்றும் தொழில் ஆராய்ச்சி கவுன்சில், தேசிய சுற்றுச்சூழல் பொறியியல் ஆய்வு நிறுவனம் (நீரி) மற்றும் பெட்ரோலியம் மற்றும் வெடிப்பொருள்கள் பாதுகாப்பு அமைப்பு (பெசோ) ஆகிய அமைப்புகளால் குறைந்த அளவில் பேரியம் நைட்ரேட் பயன்படுத்தி பசுமை பட்டாசு தயாரிப்பதற்கான விதிகள் உருவாக்கப்பட்டு, சிவகாசியில் பட்டாசு ஆராய்ச்சி மையம் தொடங்கப்பட்டது.
சிவகாசியில் உள்ள பட்டாசு ஆலைகளில் சுற்றுச்சூழலுக்கு உகந்த பசுமை பட்டாசுகள் உற்பத்தி செய்யப்பட்டு வருகிறது. அடுத்த தலைமுறை பட்டாசுகள் ஆய்வு மற்றும் சோதனை முயற்சியில் உள்ளன.
பட்டாசு தொடர்பான வழக்கில் மத்திய அரசு தாக்கல் செய்த அறிக்கையின் அடிப்படையில் தகுதி வாய்ந்த அதிகாரிகளால் விதிக்கப்படும் நிபந்தனைகளுக்கு உட்பட்டு அடுத்த தலைமுறை இணைப்பு பசுமை பட்டாசுகள் (ஜாயின்ட் கிராக்கர்ஸ்) உற்பத்திக்கு உச்ச நீதிமன்றம் அனுமதி வழங்கியுள்ளதால் பட்டாசு உற்பத்தியாளர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
இது குறித்து தமிழ்நாடு பட்டாசு மற்றும் கேப் வெடி உற்பத்தியாளர்கள் சங்கம் (டான்பாமா) தலைவர் கணேசன், செயலாளர் சங்கர் கதிரேசன் கூறுகையில், “சுற்றுச்சூழலுக்கு உகந்த பசுமை பட்டாசுகள் உற்பத்தி செய்யும் வகையில் பட்டாசு உற்பத்தியில் செய்த ஆராய்ச்சி மற்றும் தொழில்நுட்ப முன்னேற்றத்துக்கு அங்கீகாரம் அளிக்கும் வகையில் அடுத்த தலைமுறை இணைப்பு பசுமை பட்டாசு (சரவெடி) உற்பத்திக்கு உச்ச நீதிமன்றம் அனுமதி வழங்கியுள்ளது.
இதன்மூலம் பட்டாசு உற்பத்தியாளர்கள் மற்றும் தொழிலாளர்களுக்கு புதிய நம்பிக்கை கிடைத்துள்ளது. அடுத்த தலைமுறை பசுமை பட்டாசுகள் தொடர்பான தொழில்நுட்ப ஆய்வுகள் மற்றும் சோதனை நடைபெற்று வருகிறது. இந்த வழக்கில் அடுத்த விசாரணை அக்டோபர் 15-ம் தேதி உச்ச நீதிமன்றத்தில் விசாரணைக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.
அதில் மேலும் தெளிவான முடிவுகள் வரும் என நம்புகிறோம். பட்டாசு தொழிலுக்கு சாதகமான முன்னேற்றம் ஏற்பட பல்வேறு நிலைகளில் ஆதரவு வழங்கிய பிரதமர் நரேந்திர மோடி, மத்திய சுற்றுச்சூழல் துறை அமைச்சர் பூபேந்தர் யாதவ் ஆகியோருக்கும், அடுத்த தலைமுறை பசுமை பட்டாசுகள் தொடர்பான அறிவியல் ஆய்வுகள், சோதனை, அறிக்கை சமர்ப்பிப்பதில் பங்காற்றிய ஆராய்ச்சி அமைப்புகள் மற்றும் விஞ்ஞானிகளுக்கு நன்றி” என்று தெரிவித்தார்.