திருப்பரங்குன்றம் தீபத்தூணில் இன்றே தீபம் ஏற்ற வேண்டும்: தலைமைச் செயலர் நேரில் ஆஜராக உச்ச நீதிமன்றம் உத்தரவு

சிஆர்பிஎஃப் கட்டுப்பாட்டில் மலை
திருப்பரங்குன்றம் தீபத்தூணில் இன்றே தீபம் ஏற்ற வேண்டும்: தலைமைச் செயலர் நேரில் ஆஜராக உச்ச நீதிமன்றம் உத்தரவு
Updated on: 
2 min read

புதுடெல்லி: திருப்பரங்குன்றம் சுப்பிரமணிய சுவாமி கோயில் அறங்காவலர் குழுவை கலைத்த உச்ச நீதிமன்றம், மலையை சிஆர்பிஎஃப் கட்டுப்பாட்டுக்குள் எடுக்கவும், மலை உச்சியில் உள்ள தீபத் தூணில் கார்த்திகை தீபத்தை இன்று ஏற்ற வேண்டும் என்றும் உத்தரவிட்டுள்ளது.

திருப்பரங்குன்றம் மலை உச்சியில் அமைந்துள்ள தீபத்தூணில் கார்த்திகை தீபம் ஏற்ற வேண்டும் என்று கடந்த 20-ம் தேதி உச்ச நீதிமன்றம் இடைக்கால உத்தரவு பிறப்பித்தது. ஆனால், கார்த்திகை திருநாளான நவம்பர் 24-ம் தேதி தீபத்தூணில் தீபம் ஏற்றவில்லை. இதையடுத்து உச்ச நீதிமன்ற உத்தரவை செயல்படுத்தாத மதுரை ஆட்சியர், இந்து சமய அறநிலையத் துறை ஆணையர், மதுரை காவல் ஆணையர் உள்ளிட்டோருக்கு எதிராக நீதிமன்ற அவமதிப்பு நடவடிக்கை எடுக்கக் கோரியும், காலம் கடந்தாலும் தீபத் தூணில் தீபம் ஏற்ற உத்தரவிட கோரி ராம ரவிக்குமார், ராமசுப்பு, இந்து தர்ம பரிஷத் அமைப்பு உள்ளிட்டோர் சார்பில் உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது.

இந்த வழக்குகள் உச்ச நீதிமன்ற நீதிபதிகள் அரவிந்த் குமார், விபுல்.எம்.பஞ்சோலி ஆகியோர் அடங்கிய அமர்வு முன்னிலையில் நேற்று விசாரணைக்கு வந்தது. மனுதாரர்கள் சார்பில் மூத்த வழக்கறிஞர்கள் குரு கிருஷ்ணகுமார், சாய் தீபக் ஆகியோரும், தொல்லியல் துறை சார்பில் மத்திய அரசின் சொலிசிட்டர் ஜெனரல் துஷார் மேத்தாவும் ஆஜராகி வாதாடினார்கள்.

அதேவேளையில் மதுரை மாவட்ட ஆட்சியர் நிஷாந்த் கிருஷ்ணா சார்பில் மூத்த வழக்கறிஞர் கோபால் சங்கரநாராயணனும், மதுரை காவல் ஆணையர் தரப்பில் மூத்த வழக்கறிஞர் சித்தார்த் லூத்ராவும், இந்து சமய அறநிலையத் துறை ஆணையர் சார்பில் மூத்த வழக்கறிஞர் அபிஷேக் மனு சிங்வி ஆகியோரும் வாதாடினார்கள்.

அனைத்துத் தரப்பு வாதங்களையும் கேட்ட பிறகு நீதிபதிகள் வெளியிட்ட உத்தரவில் கூறியிருப்பதாவது: நவம்பர் 20-ம் தேதி உச்ச நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவைச் செயல்படுத்தாமல் இருந்தது கடுமையான வேதனையை கொடுக்கிறது.

இதுபோன்ற சூழல்களை இரும்புக்கரம் கொண்டு கையாள வேண்டிய நேரம் வந்துவிட்டது. இல்லையெனில், அது அரசியலமைப்புச் சீர்குலைவுக்கு வழி வகுக்கும். எவ்வளவு உயர்ந்த பதவியில் இருப்பவராக இருந்தாலும், நீதித் துறையை மாசுபடுத்தும், அவமதிக்கும் எந்தவொரு முயற்சியும் சகித்துக் கொள்ளப்படாது என்பதை நாங்கள் தெரிவிக்க விரும்புகிறோம். இந்த நீதிமன்றத்தின் உத்தரவு என்பது தமிழக அரசுடன் பேச்சு வார்த்தைக்கான அழைப்பு அல்ல.

அது மாநில அரசையும், அதன் அதிகாரிகளையும், மாநிலச் சட்டத்தின் கீழ் செயல்படும் ஒவ்வொரு சட்டப்பூர்வ அல்லது மத நிறுவனத்தையும் கட்டுப்படுத்தும். உச்ச நீதிமன்ற உத்தரவை மீறும் வகையில் அறங்காவலர் குழு செயல்பட்டுள்ளது. இது நீதிமன்ற உத்தரவை கறைபடுத்தும் நோக்கமாகவே பார்க்கப்படுகிறது. நவம்பர் 20-ம் தேதி உத்தரவை வேண்டுமென்று மீறியதற்கான அனைத்து சாத்தியக்கூறுகளும் கண்டறியப்பட்டுள்ளன. மதுரை மாவட்டத்தில் நிர்வாகக் குழப்பம் எழுந்துள்ளதை வெளிப்படையாகக் காட்டுகிறது.

கோயில் அறங்காவலர்கள் நீதிமன்ற உத்தரவை செயல்படுத்த மாட்டோம் என திட்டவட்டமாக நிலைப்பாடு எடுத்துள்ளனர். இது ஒரு கடுமையான அவமதிப்பாகும். அறங்காவலரின் நடவடிக்கைக்கு மற்ற அதிகாரிகளும் துணை நின்றுள்ளனர்.எனவே, கோயில் அறங்காவலர் குழு மீது ஏன் நீதிமன்ற அவமதிப்பு நடவடிக்கை எடுக்கக்கூடாது என்பதை விளக்குமாறு அறங்காவலர் குழுவுக்கு நோட்டீஸ் அனுப்ப உத்தரவிடுகிறோம்.

மதுரை மாவட்ட ஆட்சியர் சமர்ப்பித்த அறிக்கையின் மூலம் நீதிமன்றத்தின் உத்தரவு நிறைவேற்றப்படாததற்கான பழியை முழுவதுமாகக் கோயில் நிர்வாகத்தின் மீது சுமத்த முயற்சித்துள்ளார். எனவே, இந்த அறிக்கையை நிராகரிக்கிறோம்.

இந்த வழக்கில், நீதிமன்ற உத்தரவை செயல் படுத்துவதற்காக எடுக்கப்பட்ட நடவடிக்கைகள், அது தொடர்பான ஆவணங்கள், மின்னஞ்சல்கள், தொலைபேசி உரையாடல் விவரங்கள் உள்ளிட்ட அனைத்தையும் தமிழக தலைமைச் செயலர் பிரமாணப் பத்திரமாக தாக்கல் செய்வதோடு நீதிமன்றத்தில் நேரில் ஆஜராக வேண்டும்.

மேலும், கோயில் அறங்காவலர் குழு கலைக்கப்படுகிறது. கோயிலை நிர்வகிக்க உயர் நீதிமன்ற முன்னாள் நீதிபதிகள் வைத்தியநாதன், வி.பார்த்திபன் தலைமையில் கோயில் நிர்வாகக் குழுவை அமைக்கிறோம். அறங்காவலர் குழுவிடம் இருந்து கோயில் நிர்வாகத்தை இருவரும் உடனடியாகத் தங்கள் பொறுப்பில் எடுத்துக் கொள்ள வேண்டும். மேலும், திருப்பரங்குன்றம் மலை அமைந்துள்ள முழு பகுதியையும் சிஆர்பிஎப் கட்டுப்பாட்டில் எடுக்க வேண்டும்.

நாளை (இன்று) 28-ம் தேதி திருப்பரங்குன்றம் மலையில் உள்ள தீபத் தூணில் கார்த்திகை தீபம் ஏற்ற வேண்டும். கடந்த 24-ம் தேதி உச்சிப் பிள்ளையார் கோயிலில் ஏற்றப்பட்ட அந்த தீபத்தில் இருந்து தீபத்தை எடுத்துக் கொண்டு தீபத்தூணில் கார்த்திகை தீபம் ஏற்ற வேண்டும். திருப்பரங்குன்றம் மலையில் ஒவ்வொரு பக்தரும் விளக்கேற்ற அனுமதிக்க வேண்டும். தர்காவுக்கு உரிய பாதுகாப்பு வழங்க வேண்டும். அங்கு நடைபெறும் செயல்களில் இடையூறு ஏற்படுத்தக் கூடாது. தர்கா மற்றும் கோயில் பகுதிகளை வேறுபடுத்தும் விதமாக அந்த பகுதியில் வேலி அமைக்கலாம். இவ்வாறு நீதிபதிகள் உத்தரவிட்டனர்.

இந்நிலையில், தமிழக தலைமைச் செயலர், காவல்துறை தலைவர் ஆகியோர் காணொலி மூலம் ஆஜராக அனுமதிக்க வேண்டும் என்று கோரிக்கை முன்வைக்கப்பட்டது. அதை நிராகரித்த நீதிபதிகள் வழக்கு விசாரணையை டிசம்பர் 15-ம் தேதிக்கு ஒத்திவைத்தனர்.

திருப்பரங்குன்றம் தீபத்தூணில் இன்றே தீபம் ஏற்ற வேண்டும்: தலைமைச் செயலர் நேரில் ஆஜராக உச்ச நீதிமன்றம் உத்தரவு
மும்பை இந்தியன்ஸ் அணியின் கேப்டனாக மீண்டும் ரோஹித் சர்மா நியமனம்

X