

புதுடெல்லி/சென்னை: ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கின் புலன் விசாரணை நிலை குறித்து விரிவான புதிய அறிக்கையை தாக்கல் செய்ய சிபிஐ-க்கு உத்தரவிட்ட உச்ச நீதிமன்றம், குற்றம் சாட்டப்பட்டவர்களின் ஜாமீனை ரத்து செய்த சென்னை உயர்நீதிமன்ற உத்தரவுக்கு விதிக்கப்பட்ட தடையை நீட்டித்தும் உத்தரவிட்டுள்ளது.
பகுஜன் சமாஜ் கட்சியின் தமிழக மாநில தலைவராக இருந்த ஆம்ஸ்ட்ராங் கடந்த 2024 ஜூலை மாதம் 5-ம் தேதி கொலை செய்யப்பட்டதையடுத்து, இதில் தொடர்புடைய 27 பேர் கைது செய்யப்பட்டனர்.
ஆனால் கொலை வழக்கு விசாரணையை தமிழ்நாடு காவல்துறை நியாயமாக மேற்கொள்ளவில்லை, எனவே வழக்கை சிபிஐ-க்கு மாற்ற வேண்டுமென்ற ஆம்ஸ்ட்ராங்கின் சகோதரர் இமானுவேலின் மனுவை சென்னை உயர்நீதிமன்றம் ஏற்று சிபிஐ-க்கு மாற்றி உத்தரவிட்டது.
இந்த உத்தரவுக்கு எதிராக தி.மு.க தலைமையிலான அப்போதைய தமிழக அரசு உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தது. அந்த மனுவை ஏற்று ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கை சிபிஐ விசாரணைக்கு மாற்றிய உத்தரவுக்கு உச்சநீதிமன்றம் இடைக்கால தடை விதித்தது.
இந்நிலையில் தமிழகத்தில் ஆட்சி மாற்றம் ஏற்பட்டதையடுத்து, ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கை சிபிஐ விசாரிக்க ஆட்சேபனை இல்லை என அரசு தெரிவித்து மேல்முறையீட்டு மனுவை திரும்பப் பெற்றது. இதைதொடர்ந்து ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கு விசாரணையின் நிலை குறித்த அறிக்கையை சிபிஐ தாக்கல் செய்ய உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டது.
அதன்படி விசாரணை நிலை குறித்த அறிக்கையை சிபிஐ தாக்கல் செய்தது. இந்நிலையில் இவ்வழக்கு உச்சநீதிமன்றத்தில் நீதிபதிகள் கே.வி.விஸ்வநாதன் மற்றும் அருண் பள்ளி ஆகியோர் அடங்கிய அமர்வு முன்பாக மீண்டும் விசாரணைக்கு வந்தபோது, சிபிஐ தரப்பில் விசாரணையை முடித்து இறுதி அறிக்கை தாக்கல் செய்ய மேலும் 3 மாத அவகாசம் தேவை எனவும், சுதந்திரமான விசாரணைக்காக குற்றம்சாட்டப்பட்ட நபர்களின் ஜாமீனை ரத்து செய்ய வேண்டுமென வலியுறுத்தப்பட்டது.
அதற்குக் கடும் எதிர்ப்பு தெரிவித்த குற்றம்சாட்டப்பட்டவர்கள் தரப்பு மூத்த வழக்கறிஞர் சித்தார்த் தவே, சாட்சிகளை அச்சுறுத்துவதாகவும், தலைமறைவாகி விடுவர் என எவ்வித ஆதாரமும் இன்றிப் பொதுவான குற்றச்சாட்டுகளையே சிபிஐ முன்வைப்பதாக வாதிட்டார்.
அனைத்துத் தரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதிகள், ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கின் விசாரணை நிலை குறித்து விரிவான புதிய அறிக்கையை 2 வாரங்களுக்குள் சிபிஐ தாக்கல் செய்ய உத்தரவிட்டனர்.
மேலும், சி.பி.ஐ அறிக்கைக்குப் பிறகு அனைத்து தரப்பினரும் அடுத்த 2 வாரங்களில் பதிலளிக்கவும் உத்தரவிட்ட நீதிபதிகள், ஜாமீன் ரத்து உத்தரவுக்கு விதிக்கப்பட்ட இடைக்காலத் தடையை நீட்டித்து விசாரணையை நவம்பர் 3-ம் தேதிக்கு ஒத்திவைத்தனர்.