

புதுடெல்லி: அமைச்சர் துரைமுருகனுக்கு எதிரான சொத்துக் குவிப்பு வழக்கின் மறுவிசாரணைக்கு உச்ச நீதிமன்றம் இடைக்காலத் தடை விதித்துள்ளது.
கடந்த 1996-2001 திமுக ஆட் சிக் காலத்தில் பொதுப்பணித் துறை அமைச்சராகப் பதவி வகித்த அமைச்சர் துரைமுருகன், வருமானத்துக்கு அதிகமாக ரூ.3.92 கோடி அளவுக்குச் சொத்துக் குவிப்பில் ஈடுபட்டதாக துரை முருகன், அவரது மனைவி சாந்த குமாரி, மகன் கதிர் ஆனந்த் எம்.பி.
மருமகள் சங்கீதா, அமைச்சரின் சகோதாரர் துரை சிங்காரம் ஆகியோருக்கு எதிராக அதிமுக ஆட்சிகாலத்தில் லஞ்ச ஒழிப்புத்துறை போலீஸார் கடந்த 2002-ம் ஆண்டு நவ.11-ம் தேதி வழக்குப்பதிவு செய்தனர்.
இந்த வழக்கில் இருந்து அமைச்சர் துரைமுருகன் உள்ளிட்டோரை விடுவித்து, வேலூர் சிறப்பு நீதிமன்றம் கடந்த 2007-ல் உத்தரவிட்டது. இதை எதிர்த்து லஞ்ச ஒழிப்புத்துறை தாக்கல் செய்த மேல்முறையீடு மனுவை விசாரித்த சென்னை உயர் நீதிமன்றம், சொத்துக் குவிப்பு வழக்கில் துரைமுருகன் உள்ளிட்டோரை விடுவித்த உத்தரவை ரத்துச் செய்தது.
அவர்கள் மீதான குற்றச்சாட்டுகளைப் பதிவு செய்து தினமும் விசாரணை நடத்தி வழக்கை 6 மாதங்களுக்குள் முடிக்க வேலூர் சிறப்பு நீதிமன்றத்துக்குக் கடந்த ஆண்டு ஏப்.24-ல் உத்தரவிட்டது.
இந்த உத்தரவை எதிர்த்து துரை முருகன் சார்பில் தாக்கல் செய்த மேல்முறையீடு மனுவை, உச்ச நீதிமன்ற நீதிபதிகள் பி.வி.நாகரத்னா, உஜ்ஜல் புயன் அடங்கிய அமர்வு விசாரித்தது.
மனுதாரர் தரப்பில் மூத்த வழக்கறிஞர் அபிஷேக் சிங்வி ஆஜராகி முன்வைத்த வாதத்தை ஏற்ற உச்ச நீதிமன்றம், சொத்துக் குவிப்பு வழக்கு மறுவிசாரணைக்கு இடைக்காலத் தடை விதித்ததுடன், பதில் அளிக்க லஞ்ச ஒழிப்புத்துறை பதிலளிக்க உத்தரவிட்டு விசாரணையை ஏப்.20-ம் தேதிக்கு தள்ளிவைத்தது.