நவோதயா பள்ளிகள் வழக்கு: தமிழக அரசுக்கு 3 வார அவகாசம் - உச்ச நீதிமன்றம் உத்தரவு

நவோதயா பள்ளிகள் வழக்கு: தமிழக அரசுக்கு 3 வார அவகாசம் - உச்ச நீதிமன்றம் உத்தரவு
Updated on
2 min read

சென்னை/புதுடெல்லி: தமிழகத்தில் மாவட்டம் தோறும் ஜவஹர் நவோதயா வித்யாலயா பள்ளிகளை நிறுவுவது குறித்த தமிழ்நாடு அரசின் நிலைப்பாட்டை 3 வார காலத்துக்குள் தெரிவிக்க வேண்டுமென உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது தமிழகத்தில் மாவட்டம் தோறும் ‘ஜவஹர் நவோதயா வித்யாலயா’ பள்ளியை நிறுவ வேண்டுமென தமிழக அரசுக்கு உத்தரவிடக்கோரி குமரி மகாசபா என்ற அமைப்பு சார்பில் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது.

அந்த வழக்கை விசாரித்த சென்னை உயர்நீதிமன்றம், ஜவஹர் நவோதயா பள்ளிகளை திறப்பதற்கு தமிழக அரசு அனுமதி வழங்க உத்தரவிட்டது.

இதை எதிர்த்து தமிழக அரசு உச்சநீதிமன்றத்தில் கடந்த 2017-ம் ஆண்டு மேல்முறையீடு செய்தது. இதை தொடர்ந்து, அந்த வழக்கு கடந்த 2017 டிசம்பர் 11-ம் தேதி விசாரணைக்கு வந்தபோது, சென்னை உயர் நீதிமன்ற ஆணைக்கு இடைக் கால தடை விதித்து, வழக்கை உச்சநீதிமன்றம் ஒத்திவைத்தது.

இதற்கிடையே முந்தைய திமுக அரசு கடந்த மார்ச் மாதம் தாக்கல் செய்திருந்த பிரமாணப் பத்திரத்தில் ‘தமிழகத்தில் நவோதயா பள்ளிகள் இல்லாம லேயே தமிழகக் கல்வித் தரம் சிறப்பாக உள்ளது.

எனவே ஜவஹர் நவோதயா போன்ற புதிய பள்ளிகளைத் திறப்பதற்குப் பதிலாக, சமக்ர சிக் ஷா திட்டத்தின் கீழ் தமிழகத்துக்கு வழங்க வேண்டிய நிலுவைத் தொகையான ரூ.3,548.22 கோடி கல்வி நிதியை மத்திய அரசு உடனே விடுவிக்க வேண்டும்’ என்று தெரிவித்திருந்தது.

ஆனால் உச்சநீதிமன்றம், நவோதயா பள்ளிகளை தமிழகத்தில் நிறுவுவது தொடர்பாக இடங்களை கண்டறிந்து தெரிவிக்க வேண்டுமென தமிழக அரசுக்கு அறிவுறுத்தியிருந்தது.

இந்நிலையில், இந்த வழக்கு உச்சநீதிமன்ற நீதிபதிகள் பி.வி.நாகரத்னா, ஆர்.மகாதேவன் அடங்கிய அமர்வில் மீண்டும் நேற்று விசாரணைக்கு வந்தது.

அப்போது ஆஜரான தமிழக அரசின் கூடுதல் தலைமை வழக்கறிஞர் ஹரிப்ரியா, ஜவஹர் நவோதயா பள்ளி விவகாரம் தொடர்பாக தமிழக அரசு ஆலோசனை நடத்தி வருவதாக தெரி வித்தார்.

அதற்கு நீதிபதி பி.வி.நாகரத்னா, ‘‘உங்களிடம் பள்ளிகள் அமைப்பதற்கான நிலத்தை தானே கண்டறிய கூறுகிறோம், உடனடியாக நவோதயா பள்ளிகளை நிறுவுங்கள் என்றா கூறுகிறோம்?’’ என கேள்விகளை எழுப்பினார்.

அதற்கு பதிலளித்த தமிழக அரசு கூடுதல் தலைமை வழக்கறிஞர், “தமிழக அரசு நவோதயா பள்ளிகள் தொடர்பாக பதிலை தெரிவிக்க 12 வாரம் கால அவகாசம் வழங்க வேண்டும்” என கோரிக்கை வைத்தார்.

இதனை தொடர்ந்து வாதிட்ட எதிர்மனுதாரரான குமரி மகாசபா தரப்பு வழக்கறிஞர் ப்ரியதர்ஷினி, “தமிழகத்தில் ஏற்கெனவே 1500 சிபிஎஸ்இ பள்ளிகள் செயல்பட்டு வருகின்றன, ஆனால் நவோதயா பள்ளிகளை நிறுவுவதற்கு மட்டும் தமிழக அரசு மும்மொழிக் கொள்கையை காரணம் காட்டுகிறது.

ஏற்கெனவே பல பள்ளிகளில் மூன்று மொழிகள் கற்பிக்கப்பட்டு வருகிறது, இந்தியும் கற்றுக் கொடுக்கப்பட்டு வருகிறது, ஆனால் தமிழக அரசு இந்தி மொழி எதிர்ப்பை காரணம் காட்டி நவோதயா பள்ளிகளை நிறுவ மறுக்கிறார்கள்” என வாதிட்டார்.

அப்போது குறுக்கிட்டு பேசிய நீதிபதி ஆர்.மகாதேவன், “தமிழ்நாட்டைப் பொறுத்த வரை அவர்கள் இந்தியை எதிர்க்கவில்லை; இந்தி திணிப்பையே எதிர்க்கிறார்கள்” என கூறினார்.

இதனைதொடர்ந்து பேசிய நீதிபதி பி.வி.நாகரத்னா, ‘‘மும்மொழிக் கொள்கை என்பது இந்தி மட்டும் கிடையாது. வேறு எந்த மொழியையும் கூட தேர்ந்தெடுத்துக் கொள்ளலாமே’’ என்றார்.

அப்போது குறுக்கிட்டு பேசிய தமிழ்நாடு அரசு தரப்பு வழக்கறிஞர், “தற்போது மும்மொழி கொள்கையை மத்திய அரசு கொண்டு வந்துள்ளது, 9-ம் வகுப்பு மாணவர்களுக்கு அது கட்டாயமாக்கப்பட்டுள்ளது” என சுட்டிக்காட்டினார்.

அதற்கு பதிலளித்த நீதிபதி பி.வி.நாகரத்னா, “மும்மொழி கொள்கை என்பது இருக்கலாம், ஆனால் அது 6-ம் வகுப்பு முதலே

அமல்படுத்தப்பட வேண்டும். அதேவேளையில், 9-ம் வகுப்பு மாணவர்களுக்கு மூன்று மொழிக் கொள்கையை கட்டாயமாக்கு வது மிகுந்த மன அழுத்தத்தை ஏற்படுத்தும்” என கூறினார்.

இதைத்தொடர்ந்து நீதிபதிகள் பிறப்பித்த உத்தரவில், “தமிழகத்தில் ஜவஹர் நவோதயா பள்ளிகள் அமைப்பதற்கு இடங்களை கண்டறிவது தொடர்பாக 3 வாரகாலத்துக்குள்ளாக தமிழக அரசின் நிலைப்பாட்டை விளக்கமாகப் பெற்று நீதிமன்றத்தில் தெரிவிக்க வேண்டும். அடுத்த விசாரணை ஆகஸ்ட் 11-ம் தேதி நடைபெறும்” என உத்தரவிட்டனர்.

நவோதயா பள்ளிகள் வழக்கு: தமிழக அரசுக்கு 3 வார அவகாசம் - உச்ச நீதிமன்றம் உத்தரவு
குன்னூர் சிம்ஸ் பூங்காவில் அரிய வகை பச்சை ரோஜா சீசன் தொடக்கம்

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in