

புதுடெல்லி/சென்னை: கடந்த 1996-2001 திமுக ஆட்சிக் காலத்தில் பொதுப்பணித் துறை அமைச்சராகப் பதவி வகித்த துரைமுருகன், வருமானத்துக்கு அதிகமாக ரூ.3.92 கோடி சொத்து குவிப்பில் ஈடுபட்டதாக துரை முருகன், அவரது மனைவி சாந்தகுமாரி, மகன் கதிர் ஆனந்த், மருமகள் சங்கீதா, சகோதரர் துரை சிங்காரம் ஆகியோருக்கு எதிராக லஞ்ச ஒழிப்புத்துறை போலீஸார் கடந்த 2002-ம் ஆண்டு வழக்குப் பதிவு செய்தனர்.
இந்த வழக்கிலிருந்து துரைமுருகன் உள்ளிட்டோரை விடுவித்து, வேலூர் சிறப்பு நீதிமன்றம் 2007-ல் உத்தரவிட்டது. இதை எதிர்த்து லஞ்ச ஒழிப்புத்துறை தாக்கல் செய்த மேல்முறையீட்டு மனுவை விசாரித்த சென்னை உயர்நீதிமன்றம், துரைமுருகன் உள்ளிட்டோரை விடுவித்த உத்தரவை ரத்து செய்ததோடு, அவர்கள் மீதான குற்றச்சாட்டுகளைப்பதிவு செய்து விசாரணையை 6 மாதங்களுக்குள் முடிக்க வேலூர் சிறப்பு நீதிமன்றத்துக்கு 2025-ம் ஆண்டு உத்தரவிட்டது.
இந்த உத்தரவை எதிர்த்து துரைமுருகன் தாக்கல் செய்த மேல் முறையீட்டு மனுவை விசாரித்த உச்ச நீதிமன்றம், துரைமுருகன் தொடர்பாக வேலூர் நீதிமன்றத்தில் நடைபெறும் சொத்து குவிப்பு வழக்கு விசாரணைக்கு தடை விதித்தது.
இந்நிலையில் இதே வழக்கில் தொடர்புடைய துரைமுருகனின் மனைவி சாந்தகுமாரி, மகனும் திமுக எம்.பி.யுமான கதிர் ஆனந்த், மருமகள் சங்கீதா, சகோதரர் துரை சிங்காரம் ஆகியோர் கீழமை நீதிமன்றத்தில் நடைபெறும் வழக்கு விசாரணைக்கு தடை கேட்டு உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்திருந்தனர்.
இந்த மனுக்கள் நீதிபதிகள் பி.வி.நாகரத்னா, ஆர்.மகா தேவன் ஆகியோர் அமர்வில் விசாரணைக்கு வந்தது. அப்போது மனுதாரர்கள் சார்பில் மூத்த வழக்கறிஞர்கள் முகுல்ரோத்தஹி, பி.வில்சன் ஆகியோர் ஆஜராகி, ‘‘துரைமுருகன் தொடர்பான வழக்கு விசாரணைக்கு ஏற்கெனவே தடை விதிக்கப்பட்டதோடு, வழக்கு தொடர்வதற்கான அனுமதி மற்றும் குடும்ப உறுப்பினர்களின் சொத்துகளை இணைப்பது குறித்த விவகாரங்களை எழுப்பிய மனுக்கள் உச்ச நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளன.
எனவே, அதே வழக்கில் தொடர்புடைய கதிர் ஆனந்த் உள்ளிட்ட மனுதாரர்கள் மீதான கீழமை நீதிமன்ற விசாரணை நடவடிக்கைகளுக்கு தடை விதிக்கவேண்டும்’’ என கோரிக்கை வைத்தனர்.
அந்த வாதத்தை ஏற்றுக் கொண்ட நீதிபதிகள், இந்த வழக்கில் உச்ச நீதிமன்றத்தின் முன்பு எழுப்பப்பட்டுள்ள விவகாரங்கள் பரிசீலனையில் இருப்பதால், சொத்து குவிப்பு தொடர்பாக வேலூர் சிறப்பு நீதிமன்றத்தின் அடுத்த கட்ட நடவடிக்கைகளுக்கு இடைக்கால தடை விதிப்பதாக உத்தர விட்டனர்.
மேலும், இதே சாராம்சத்தை உள்ளடக்கி நிலுவையில் உள்ள பிற வழக்குடன் இந்த மனுவை இணைத்தும் நீதிபதிகள் உத்தர விட்டனர்.