

புதுடெல்லி: மாம்பழம் சின்னத்தை முடக்க கோரி உயர் நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்ய பாமக நிறுவனர் ராமதாஸுக்கு உச்ச நீதிமன்றம் அறிவுறுத்தியுள்ளது.
மாம்பழம் சின்னத்தை முடக்ககோரும் பாமக நிறுவனர் ராமதாஸின் மனுவை மூன்று நாள்களுக்குள் விசாரித்து தீர்ப்பு அளிக்க சிவில் நீதிமன்றத்துக்கு உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டதை தொடர்ந்து, பாமக நிறுவனரின் மனுவை விசாரித்த சென்னை பெருநகர சிவில் நீதிமன்றம் மனுவை தள்ளுபடி செய்து, தேர்தல் ஆணையத்தை நாட கடந்த 27-ம் தேதி அறிவுறுத்தியது.
இந்த உத்தரவை எதிர்த்த பாமக நிறுவனர் ராமதாஸின் சார்பில் தாக்கல் செய்த மேல்முறையீடு மனுவை உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி சூர்யகாந்த், ஜோய்மால்யா, பக்சி அடங்கிய அமர்வு விசாரித்தது. பாமக நிறுவனர் ராமதாஸ் தரப்பில் மூத்த வழக்கறிஞர் விகாஸ் சிங் ஆஜராகி, சிவில் நீதி மன்றம் மாம்பழம் சின்னத்தை முடக்க மறுத்துவிட்டது, தேர்தல் ஆணையத்தை நாட அறிவுறுத்தியுள்ளது. தேர்தல் ஆணையம் ராமதாஸையோ, அன்புமணியையோ பாமகவின் தலைவராக அங்கீகரிக்கவில்லை என்பதை டெல்லி உயர் நீதிமன்ற தீர்ப்பில் குறிப்பிட்டுள்ளது. வேட்பாளர்களுக்கு சின்னம் ஒதுக்குவதற்கு முன் தீர்வு காணவேண்டும். தேர்தல் ஆணையம் நாளையே முடிவு எடுக்க வேண்டும் என்று வாதிட்டார்.
அன்புமணி தரப்பில் மூத்த வழக்கறிஞர்கள் முகுல் ரோஹ்தகி, மீனாட்சி அரோரா ஆகியோர் ஆஜராகி, மாம்பழம் சின்னத்தை முடக்கி பாமகவை அழிக்க முற்படுகிறார். மாம்பழம் சின்னம் பொதுசின்னம் இல்லை என்று சிவில் நீதிமன்றம் தெரிவித்துள்ளது என்று வாதிட்டனர். முன்னதாக தலைமை நீதிபதி,
எதிர்மனுதாரரான மகன் எப்படி வெற்றி பெறக்கூடாது என்று தந்தை நினைத்தால் அதை வாக்காளர்களிடம் சென்று தெரிவிக்க வேண்டும் என்றார். நீதிபதி ஜோய்மால்யா பக்சி, மனுதாரின் வாதம் அரசியல்ரீதியான அழிவை உருவாக்கும். வெற்றி பெற்றால் மாம்பழம் சின்னம் கிடைக்காமல் போகும் என்று தெரிவித்தார்.
இருதரப்பு வாதங்களுக்கு பிறகு, சென்னை சிவில் நீதிமன்றத்தின் உத்தரவை எதிர்த்து சென்னை உயர் நீதிமன்றத்தில் உரிய மனுவை மனுதாரர் தாக்கல் செய்ய வேண்டும். தேர்தல் அவசரத்தை கருத்தில் கொண்டு தாக்கல் செய்யப்படும் மனுக்களை சென்னை உயர் நீதிமன்றம் விரைந்து விசாரிக்க வேண்டும் என்று குறிப்பிட்டு மேல்முறையீட்டு மனுவை முடித்து வைத்தனர்.