

ஆர்.எஸ்.பாரதி வீட்டை முற்றுகையிட்ட எஸ்.ஆர்.ராஜா ஆதரவாளர்கள்.
தாம்பரம்: தாம்பரம் தொகுதி திமுக வேட்பாளராக மருத்துவர் கிருத்திகா தேவி அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், தற்போதைய எம்எல்ஏ எஸ்.ஆர்.ராஜாவின் ஆதரவாளர்கள் மீண்டும் வாய்ப்பு கோரி டி.ஆர்.பாலு, ஆர்.எஸ்.பாரதி மற்றும் அமைச்சர் அன்பரசனின் வீடுகளை முற்றுகையிட்டுப் போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
தமிழகத்தில் சட்டப்பேரவைத் தேர்தல் களம் சூடுபிடிக்கத் தொடங்கியுள்ள நிலையில், அதிமுக கூட்டணி, திமுக கூட்டணி, தவெக, நாம் தமிழர் கட்சியினர் வேட்பாளர்களை அறிவித்துள்ளனர்.
இதனிடையே திமுகவில் வேட்பாளர் பட்டியல் குறித்த சலசலப்புகள் எழத் தொடங்கியுள்ளன. மேலும், வெற்றி வாய்ப்புள்ள தொகுதி கூட்டணிக்கு அளித்ததும் கடும் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.
இந்நிலையில், தாம்பரத்தில் திமுக சார்பில் மருத்துவர் கிருத்திகா தேவி வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ளார். அந்த அறிவிப்பு சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது. தாம்பரம் தொகுதியில் தற்போது எம்எல்ஏ-வாக இருக்கும் எஸ்.ஆர்.ராஜாவுக்கு மீண்டும் வாய்ப்பளிக்கக் கோரி அவருடைய ஆதரவாளர்கள் கடந்த 2 நாட்களாக தீவிரப் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
ஏற்கெனவே 3 முறை எம்எல்ஏவாகப் பதவி வகித்த அனுபவம் கொண்ட எஸ்.ஆர்.ராஜாவுக்கே மீண்டும் வாய்ப்பு வழங்க வேண்டும் என்பது அவரது ஆதரவாளர்களின் கோரிக்கையாக உள்ளது.
இதனை வலியுறுத்தி, அக்கட்சியின் மூத்த நிர்வாகியான டி.ஆர்.பாலு மற்றும் ஆர்.எஸ்.பாரதி அமைச்சர் அன்பரசன் ஆகியோரின் இல்லத்தை எஸ்.ஆர்.ராஜாவின் ஆதரவாளர்கள் முற்றுகையிட்டனர்.
போராட்டத்தின் போது, அமைச்சர் தா.மோ.அன்பரசனுக்கு எதிராகவும் போராட்டக்காரர்கள் கோஷங்களை எழுப்பியதால் அங்கு பரபரப்பு நிலவியது. வேட்பாளரை மாற்றிவிட்டு, மீண்டும் ராஜாவுக்கே வாய்ப்பு தர வேண்டும் என்று அவர்கள் முழக்கமிட்டனர்.
இதேபோல், தலைமை நிலைய செயலர் ஆர்.எஸ்.பாரதி மற்றும் அமைச்சர் அன்பரசன் ஆகியோர் வீடுகளையும் எஸ்.ஆர்.ராஜா ஆதரவாளர்கள் முற்றுகையிட்டனர். இதனைத் தொடர்ந்து அண்ணா அறிவாலயம் சென்ற அவர்கள் அங்கும் ராஜாவுக்கே வாய்ப்பு தர வேண்டும் எனக் கூறி முழக்கமிட்டனர்.
பின்னர் அ.ராசா அவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினார். இதேபோல், பல்லாவரம் தொகுதி எம்எல்ஏவாக உள்ள இ.கருணாநிதி, 2016, 2021 ஆகிய இருமுறை வெற்றி பெற்றுள்ளார்.
இந்நிலையில், இந்த தேர்தலிலும் இவருக்கே சீட் ஒதுக்கப்படும் என எதிர்பார்த்தனர். ஆனால், திமுக கூட்டணியில் இத்தொகுதி தேமுதிகவுக்கு ஒதுக்கப்பட்டுள்ளது. இதனால், திமுகவினர் கடும் அதிருப்தி அடைந்துள்ளனர்.