புறம் காத்தது போதும்... அகம் காக்க வா! - கனிமொழியை மாநில அரசியலுக்கு இழுக்கும் விசுவாசிகள்

புறம் காத்தது போதும்... அகம் காக்க வா! - கனிமொழியை மாநில அரசியலுக்கு இழுக்கும் விசுவாசிகள்
Updated on
1 min read

திமுக துணை பொதுச் செயலாளரும், திமுக நாடாளுமன்றக் குழு தலைவருமான கனிமொழி நேற்று தனது பிறந்த நாளை கொண்டா டினார். இதையொட்டி சென்னையில் திமுக-வினர் 20 கிலோ எடையுள்ள கேக்கை வெட்டி கொண்டாடினர். இது வழக்கமானது தான். ஆனால், ‘புறம் காத்தது போதும்... அகம் காக்க வா’ என்று கேக்கில் இருந்த வாசகங்கள் தான் அனைவரையும் அர்த்தத்துடன் யோசிக்க வைத்திருக்கிறது.

தேர்தல் காலம் என்பதால் இம்முறை சென்னையில் கனிமொழியின் பிறந்த நாள் கொண்டாட்டங்கள் வழக்கத்தை விட களைகட்டியிருந்தன. கட்சியின் தென்மண்டல பொறுப்பாளராகவும் அவர் நியமிக்கப்பட்டுள்ளதால் தென்மாவட்ட திமுக பிரமுகர்கள் பலரும் கனிமொழிக்கு வரிசைகட்டி வந்து நின்று வாழ்த்துச் சொல்லிச் சென்றனர். அதிலும் குறிப்பாக, தேர்தலில் சீட் கேட்கும் திட்டத்துடன் இருப்பவர்கள் ஆதரவாளர்களையும் திரட்டிக் கொண்டு வந்து வாழ்த்துச் சொன்னார்கள்.

சென்னை மட்டுமல்லாது தென் மாவட்டங்களிலும் கனிமொழியின் பிறந்த நாளை பல்வேறு இடங்களில் திமுக-வினர் கேக் வெட்டி கொண்டாடினர். ஆரம்பத்தில் இருந்து டெல்லி அரசியலை மையப்படுத்தியே கனிமொழி செயல்பட்டு வரும் நிலையில், தமிழக அரசியலில் அவர் தடம் பதிக்க வேண்டும் என்ற எதிர்பார்ப்பும் ஏக்கமும் கனிமொழி ஆதரவாளர்களுக்கு இருக்கிறது. அதற்கு கட்டியம் கூறும் விதமாக, அவரது பிறந்த நாள் கேக்கில் ‘புறம் காத்தது போதும், அகம் காக்க வா’ என்ற வாசகங்களை போட்டு தலைமையையும் திரும்பிப் பார்க்க வைத்திருக்கிறார்கள்.

இது குறித்து நம்மிடம் பேசிய தென் மாவட்ட திமுக நிர்வாகி ஒருவர், “திமுக-வுக்கு பெண்களின் ஆதரவை திரட்டுவதற்காக கனிமொழியை கட்சி தலைமை முன்னிலைப்படுத்தி வருகிறது. உதயநிதியை முதல்வராக்க கனிமொழி ஆட்சேபம் செய்துவிடக் கூடாது என்பதாலோ என்னவோ, தற்போது அவருக்கும் மாநில அரசியலில் முக்கியத்துவம் அதிகரிக்கப்பட்டுள்ளது. இந்த வாய்ப்பைப் பயன்படுத்திக் கொண்டு கனிமொழி தமிழக அரசியலுக்கு திரும்பி தனக்கான இடத்தைத் தக்கவைக்க வேண்டும் என்பதையே அவரது ஆதரவாளர்கள் கேக் வாசகங்கள் மூலம் சூசகமாக உணர்த்தி இருக்கிறார்கள்” என்றார்.

புறம் காத்தது போதும்... அகம் காக்க வா! - கனிமொழியை மாநில அரசியலுக்கு இழுக்கும் விசுவாசிகள்
“தேர்தலில் எதிரி, துரோகி எல்லாம் என் கண்களுக்குத் தெரியாது” - டிடிவி.தினகரன் ‘புதிர்’ பேச்சு

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in