

கும்பகோணம்: “பெற்றோர்களுடன் துணை நில்லுங்கள். அவர்களது விருப்பத்திற்கு மதிப்பளித்து நடந்து கொள்ளுங்கள்” என மாணவர்களுக்கு பரிசளிக்கும் விழாவில் கலந்துகொண்ட பாமக செயல் தலைவர் ஸ்ரீகாந்தி ராமதாஸ் கூறினார்.
கும்பகோணம் கல்வி மாவட்ட அளவில் 10 மற்றும் பிளஸ் 2 அரசு பொதுத்தேர்வுகளில் முதல் 3 இடங்கள் பெற்ற மாணவ, மாணவிகள் மற்றும் 100 சதவீதம் தேர்ச்சி பெற்ற பள்ளி தலைமையாசிரியர்களுக்கு பாராட்டு விழா பாட்டாளி மக்கள் கட்சி சார்பில் நடைபெற்றது.
இந்த நிகழ்ச்சிக்கு மாவட்டச் செயலாளர் ஸ்டாலின் தலைமை வகித்தார். பாட்டாளி மக்கள் கட்சி செயல் தலைவர் ஸ்ரீகாந்தி ராமதாஸ் சிறப்பு விருந்தினராக பங்கேற்று, கும்பகோணம் கல்வி மாவட்ட அளவில் 10 மற்றும் பிளஸ் 2 வகுப்பில் அரசு பொதுத்தேர்வில் முதல் 3 இடங்கள் பெற்ற மற்றும் 100 சதவீதம் தேர்ச்சி பெற்ற பள்ளி தலைமையாசிரியர்கள் உள்பட மொத்தம் 398 பேருக்கு பாராட்டு சான்றிதழ், பரிசுகள் மற்றும் மரக்கன்றுகளை வழங்கி பேசியது:
மாணவர்களுக்கான சவால்கள் தற்காலிகமானது தான். எனினும் உங்களது உறுதி, முயற்சி வெற்றி பெறச்செய்யும். மாணவர்களாகிய உங்களை நல்ல நிலைக்கு கொண்டு வருவதற்கு பாடுபடும் பெற்றோர்களுடன் துணை நில்லுங்கள். அவர்களது விருப்பத்திற்கு மதிப்பளித்து நடந்து கொள்ளுங்கள். இதே போல் அரசியலில் ஈடுபடாவிட்டாலும், அரசியலை தெரிந்து கொள்ள வேண்டும்.
இன்று அனைத்திலும் அரசியல் குறுக்கீடுகள் இருக்கின்றன. வாக்களிக்க போகும் நீங்கள், சரியான தலைவரையும், கட்சியையும் தேர்ந்தெடுங்கள். இப்போது எல்லாம் தலைவர்கள் ஒர்க் ப்ர்ம் ஹோம் என வீட்டில் இருந்தபடியே பணி செய்வதாக கூறுகிறார்கள். ஆனால் இதற்கு நேர்மாறான தலைவர், வன்னியர் சங்கம், பாமகவை தொடங்கிய ராமதாஸ் தான்.
மாணவர்களாகிய நீங்கள் ஒருபுறம் அரசியல் பழகுங்கள் மறுபுறம் கனவுகளை நனவாக்குங்கள். இதே போல் சமூகத்தையும், நாட்டையும் மாற்றுங்கள். உங்களது எதிர்காலத்திற்கு வாழ்த்துகள். இவ்வாறு அவர் தெரிவித்தார்.