

சென்னை: தவெகவுக்கு ஆதரவு அளிப்பதாக காங்கிரஸ் கட்சி அறிவித்துள்ளது. அக்கட்சி வெளியிட்டுள்ள அறிக்கையில், மதவாத சக்திகளுக்கு ஆதரவாக செயல்படக்கூடாது என்ற நிபந்தனையுடன் ஆதரவு அளிப்பதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனால் தமிழகத்தில் திமுகவுடனான காங்கிரஸ் கூட்டணி முடிவுக்கு வந்துள்ளது.
நடந்து முடிந்த சட்டப்பேரவைத் தேர்தலில் தனிப்பெரும் கட்சியாக தவெக உருவெடுத்துள்ளது. அக்கட்சி 108 இடங்களில் வெற்றி பெற்றுள்ளது. எனினும், இரண்டு தொகுதிகளில் வெற்றி பெற்றுள்ள விஜய் அதில் ஒரு தொகுதியை ராஜினாமா செய்ய வேண்டிய கட்டாயம் உள்ளது. எனவே, தவெகவின் பலம் 107 ஆக குறையும்.
சட்டப்பேரவையில் பெரும்பான்மையை நிரூபிக்க 118 எம்எல்ஏக்களின் ஆதரவு தேவை எனும் நிலையில் தவெகவுக்கு கூடுதலாக 11 எம்எல்ஏக்களின் ஆதரவு தேவை. தற்போது காங்கிரஸ் தரப்பிலிருந்து 5 எம்எல்ஏக்கள் ஆதரவு கிடைத்துள்ள நிலையில், இன்னும் 6 எம்எல்ஏக்கள் தேவைப்படுகின்றனர். இந்தச் சூழலில் அடுத்த ஆதரவு விசிக, கம்யூனிஸ்ட் கட்சிகளா என்ற எதிர்பார்ப்பும் எழுந்துள்ளது.
அதேபோல் தேசிய அளவில் இண்டியா கூட்டணியில் காங்கிரஸ், திமுக இருக்கும் நிலையில், அடுத்துவரும் உள்ளாட்சி தொடங்கி மக்களவை தேர்தல் வரை தவெகவுடனான கூட்டணி தொடரும் என்று காங்கிரஸ் அறிவித்துள்ளதால் இண்டியா கூட்டணியில் அடுத்து என்ன நடக்கும் என்பது குறித்த விவாதங்கள் எழுதுள்ளன.
இதன் காரணமாக, 5 இடங்களில் வெற்றி பெற்ற காங்கிரஸ் கட்சியின் ஆதரவை தவெக தலைவர் விஜய் கோரியிருந்ததாகக் கூறப்பட்டது.
இது தொடர்பாக டெல்லியில் செய்தியாளர்களிடம் பேசிய அகில இந்திய காங்கிரஸ் அமைப்புப் பொதுச் செயலாளர் கே.சி.வேணுகோபால், “தமிழகத்தில் ஆட்சியமைக்க ஆதரவு கோரி இந்திய தேசிய காங்கிரஸிடம் தவெக தலைவர் விஜய் கோரிக்கை விடுத்துள்ளார். தமிழகத்தில் அரசியலமைப்பை அதன் உணர்வின்படி பாதுகாக்க உறுதிபூண்ட ஒரு மதச்சார்பற்ற அரசாங்கத்துக்கே மக்கள் அதிகாரம் அளித்துள்ளனர். இதில் காங்கிரஸ் தெளிவாக இருக்கிறது.
எந்த வகையிலும் பாஜகவும், அதன் கைப்பாவைகளும் தமிழக அரசை நடத்துவதை காங்கிரஸ் அனுமதிக்காது என்பதிலும் உறுதியாக உள்ளது. அதன்படி, தேர்தல் தீர்ப்பில் பிரதிபலித்துள்ள மாநிலத்தின் உணர்வுகளைக் கருத்தில் கொண்டு, விஜய்யின் கோரிக்கை மீது இறுதி முடிவு எடுக்குமாறு தமிழக காங்கிரஸ் கமிட்டிக்கு காங்கிரஸ் தலைமை உத்தரவிட்டுள்ளது” என தெரிவித்திருந்தார்.
இந்நிலையில், இது தொடர்பாக நடத்தப்பட்ட ஆலோசனைக் கூட்டத்துக்குப் பிறகு தமிழ்நாடு காங்கிரஸ் பொறுப்பாளர் கிரிஷ் சோடங்கர் வெளியிட்டுள்ள அறிக்கையில், “தமிழ்நாட்டில் ஆட்சி அமைப்பதற்கு ஆதரவை வழங்குமாறு இந்திய தேசிய காங்கிரஸ் கட்சிக்கு தவெக தலைவர் விஜய் முறைப்படி கோரிக்கை விடுத்திருந்தார். அரசியலமைப்பு கோட்பாடுகளில் நம்பிக்கை கொண்ட, மதச்சார்பற்ற, முற்போக்கான, மக்கள் நலன் சார்ந்த அரசாங்கத்தை அமைப்பதற்கான மிகத் தெளிவான, வலுவான, மகத்தான தீர்ப்பை தமிழ்நாட்டு மக்கள், குறிப்பாக இளைஞர்கள் வழங்கியுள்ளனர். அடுத்த அரசாங்கத்தை அமைப்பதற்கு விஜய் தலைமையில் இயங்கும் தமிழக வெற்றி கழகத்தையே அவர்கள் தேர்ந்தெடுத்துள்ளனர்.
இந்திய தேசிய காங்கிரஸ் கட்சி, இந்தியாவில் மதச்சார்பற்ற, முற்போக்கான, மக்கள் நலன் சார்ந்த அரசியலின் அடித்தளமாகத் திகழ்வதுடன், அத்தகைய அரசியலுக்காகவே உறுதியாக நிற்கிறது. தமிழ்நாட்டு மக்கள் வழங்கிய இந்தத் தேர்தல் ஆணையை மதிப்பதும், அதனை நிலைநிறுத்துவதும், அதனைச் செயல்படுத்த உதவுவதும் நமது அரசியலமைப்பு கடமையாகும். அதற்கிணங்க, தமிழக காங்கிரஸ் கமிட்டியும், காங்கிரஸ் சட்டமன்றக் கட்சியும், தமிழக வெற்றி கழகம் ஆட்சி அமைப்பதற்குத் தங்களது முழு ஆதரவை வழங்க முடிவெடுத்துள்ளன.
இந்திய அரசியலமைப்பின் மீது நம்பிக்கை இல்லாத எந்தவொரு வகுப்புவாத சக்தியையும் இந்த கூட்டணியில் சேர்க்காமல் தமிழக வெற்றி கழகம் விலக்கி வைப்பதை அடிப்படையாகக் கொண்டே எங்களது ஆதரவு வழங்கப்படும்.
தமிழக வெற்றி கழகத்திற்கும் தமிழக காங்கிரஸுக்கும் இடையிலான இந்தக் கூட்டணி, வரும் பல பத்தாண்டுகளுக்கு தந்தை பெரியாரின் சமூக நீதி கொள்கைகள், பி.ஆர். அம்பேத்கரின் அரசியலமைப்பு கொள்கைகள் மீது உறுதியான பற்றுறுதியுடன் செயல்பட்டு, பெருந்தலைவர் காமராஜரின் பொற்காலத்தை தமிழ்நாட்டில் மீண்டும் கொண்டுவரப் பாடுபடும்.
இரு கட்சிகளுக்கும் இடையிலான பரஸ்பர மரியாதை, உரிய பங்களிப்பு மற்றும் பகிரப்பட்ட பொறுப்பு ஆகியவற்றின் அடிப்படையில் அமைந்த இந்தக் கூட்டணி, தற்போதைய அரசாங்கத்தை அமைப்பதற்கு மட்டுமல்லாமல், எதிர்காலத்தில் நடைபெறவுள்ள உள்ளாட்சி அமைப்புகள், மக்களவை மற்றும் மாநிலங்களவை தேர்தல்களுக்கும் பொருந்தும்.
ஒரு மதச்சார்பற்ற மற்றும் முற்போக்கான அரசாங்கத்தை அமைப்பதற்காக தமிழ்நாட்டு மக்கள் வழங்கிய இந்த வரலாற்றுச் சிறப்புமிக்க தீர்ப்பை மதித்து நடப்போம் என்றும்; தமிழ்நாட்டு மக்களின், குறிப்பாக இளைஞர்களின் கனவுகளையும் வாக்குறுதிகளையும் நிறைவேற்றுவோம் என்றும் விஜய் மற்றும் ராகுல் காந்தி ஆகியோர் கூட்டாக உறுதியளிக்கின்றனர்” எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
‘முதுகில் குத்தும் செயல்’ - இதனிடையே, தவெகவுக்கு ஆதரவு அளிப்பது என காங்கிரஸ் எடுத்துள்ள முடிவு, திமுகவின் முதுகில் குத்தும் செயல் என்று அக்கட்சியின் செய்தித் தொடர்பாளர் சரவணன் அண்ணாதுரை விமர்சித்திருந்தார். செய்தி நிறுவனம் ஒன்றுக்கு பேட்டி அளித்த சரவணன் அண்ணாதுரை, “தவெகவுக்கு ஆதரவு அளிப்பது என்ற முடிவை காங்கிரஸ் கட்சி எடுத்துள்ளது. காங்கிரஸ் கட்சியின் இந்த நிலைப்பாடு மிகவும் குறுகிய பார்வை கொண்டது; தொலைநோக்கு அற்றது.
இப்படி ஒரு முடிவை எடுப்பதற்காக அவர்கள் வருந்த நேரிடும். 2029 நாடாளுமன்றத் தேர்தல் நெருங்கிக் கொண்டிருக்கிறது. அந்த தேர்தலில் பாஜகவை ஆட்சியில் இருந்து அகற்றிவிட முடியும் என நாங்கள் மிகுந்த நம்பிக்கை கொண்டிருந்தோம்.
ஆனால், காங்கிரஸ் இப்போது எடுத்துள்ள இந்த முடிவு காரணமாக, அவர்கள் ஒரு நிலையற்ற கூட்டணி கட்சியாக மாறிவிட்டார்கள். காங்கிரஸ் கட்சியை நம்ப முடியாது என்ற ஒரு கருத்து நாடு முழுவதும் பரவியுள்ளது.
தேர்தல் முடிவுகள் வெளியாகி ஒரு நாள்தான் ஆகிறது. அதற்குள் காங்கிரஸ் தவெகவுக்கு ஆதரவு அளிக்க முடிவு செய்திருப்பது, முதுகில் குத்தும் செயல்.” என தெரிவித்திருந்தார்.
‘திமுக பேச்சு புலம்பல்’ - தவெகவுடன் காங்கிரஸ் கூட்டணி அமைப்பது குறித்து மாணிக்கம் தாகூர், “திமுக, அதிமுக முன்வைக்கும் அதே அரசியல் கருத்துகளைத்தான், கொள்கைகளைத்தான் தவெகவும் முன்வைக்கிறது. எம்ஜிஆர், கருணாநிதி என்ன அரசியலை பேசினார்களோ அதே அரசியலைத்தான் விஜய்யும் பேசுகிறார். எங்களைப் பொருத்தவரை, இந்த மண் பாஜகவுக்கு எதிரான மண்; ஆர்எஸ்எஸ் அமைப்புக்கு எதிரான மண்; இந்த மண் வெறுப்பு அரசியலுக்கு எதிரான மண் என்பதில் நாங்கள் தெளிவாக இருக்கிறோம்.
எங்களைப் பொருத்தவரை காங்கிரஸ் கட்சியின் நிலைப்பாடு என்ன என்பது குறித்து அரசியல் விவகாரக் குழு முடிவெடுத்திருக்கிறது. அந்த முடிவை கிரிஷ் சோடங்கர் அறிவிப்பார். திமுகவின் சரவணன் போன்றவர்கள் கூறி இருப்பது புலம்பல்.” என்றார்.