

மதுரை மாவட்ட நீதிமன்றம் முன் ஆர்ப்பாட்டம் நடத்திய பாஜகவினர்.| படங்கள்: எஸ்.கிருஷ்ணமூர்த்தி |
மதுரை: திருப்பரங்குன்றம் விவகாரம் தொடர்பாக மாவட்ட நீதிமன்ற நுழைவாயிலில் பாஜக மற்றும் விடுதலை சிறுத்தைகள் கட்சி வழக்கறிஞர்கள் ஒரே நேரத்தில் ஆர்ப்பாட்டம் நடத்தியதால் பரபரப்பு ஏற்பட்டது.
திருப்பரங்குன்றம் கார்த்திகை தீபம் வழக்கில் நீதிமன்ற உத்தரவை நிறை வேற்ற மறுக்கும் தமிழக அரசை கண்டித்து மதுரை மாவட்ட நீதிமன்றத்தில் பாஜக வழக்கறிஞர்கள் நேற்று ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
மாவட்ட வழக்கறிஞர் பிரிவு தலைவர் குருரமேஷ்குமார் தலைமை வகித்தார். மாநில துணைத் தலைவர் நிரஞ்சன்குமார், இந்து பரிவார் அமைப்புகளின் நிர்வாகிகள் பரமசிவம், சுந்தரவடிவேல் முன்னிலை வகித்தனர்.
பாஜக மாநில பொதுச் செயலாளர் ராம சீனிவாசன், மாநகர் மாவட்ட தலைவர் மாரிசக்கரவர்த்தி, அய்யப்ப ராஜா, முத்துக்குமார், தங்கதுரை, ஜெயசிங், ஜீவானந்தம், கணேஷ்குமார், கேசவராஜ், ரமேஷ் குமரவேல் உட்பட பலர் பங்கேற்றனர்.
விடுதலை சிறுத்தைகள் கட்சியினர்
ஆர்ப்பாட்டத்தில் நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதனுக்கு ஆதரவாகவும், தமிழக அரசை கண்டித்தும் கோஷம் எழுப்பப் பட்டது.
விசிக ஆர்ப்பாட்டம் திருப்பரங்குன்றம் தீபம் வழக்கில் சமூக நல்லிணக்கத்தை பேணும் வகையில் பேசிய மக்களவை உறுப்பினர்கள் தொல் திருமாவளவன், சு.வெங்கடேசன் ஆகியோரை அவதூறாக பேசி வருவோரை கைது செய்ய வலியுறுத்தி விடுதலை சிறுத்தைகள் கட்சி வழக்கறிஞர்கள் அணி சார்பில் மதுரை மாவட்ட நீதிமன்ற நுழைவு வாயிலில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
வழக்கறிஞர்கள் அருள் ஜோசப், சரவணன் உட்பட பலர் பங்கேற்றனர். மதுரை மாவட்ட நீதிமன்றத்தில் திருப்பரங் குன்றம் வழக்கின் தீர்ப்புக்கு எதிராகவும், ஆதரவாகவும் அடுத்தடுத்து நடைபெற்ற ஆர்ப்பாட்டங்களால் நேற்று பரபரப்பு நிலவியது.
விடுதலை சிறுத்தைகள், பாஜக வழக்கறிஞர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஒருவருக்கு ஒருவர் எதிர்ப்பு கோஷங்கள் எழுப்பினர். இதனால் இருதரப்பு இடையே மோதல் ஏற்படும் சூழல் உருவானது. இதையடுத்து 50-க்கும் மேற்பட்ட போலீஸார் பாதுகாப்புக்காக குவிக்கப்பட்டனர்.