

சென்னை: சென்னை புறநகர் பகுதிகளில் வழக்கத்துக்கு மாறாக நேற்று அதிகாலையில் இடி, மின்னலுடன் கூடிய கனமழை பெய்தது.
தமிழகத்தில் மார்ச் மாத தொடக்கத்திலேயே வெப்பநிலை அதிகரித்து வந்தது. சென்னை, புறநகரில் கடந்த சில நாட்களாகவே அவ்வப்போதும் வானம் மேகமூட்டத்துடன் காணப்பட்டது. இடையிடையே கடும் வெயில் வாட்டி வந்தது.
நேற்று முன்தினம் பகல் நேரத்தில் கடும் வெயில் சுட்டெரித்தது. பின்னர் மாலை மற்றும் இரவில் கடும் புழுக்கம் நிலவியது. இதனைத் தொடர்ந்து நேற்று அதிகாலை 2 மணியளவில் திடீரென சென்னை, புறநகர் பகுதிகளில் பலத்த காற்று வீசியது.
இடி, மின்னலுடன் லேசான மழையாக தொடங்கி பலத்த மழை பெய்தது. மாநகரப் பகுதியில் பரவலாக லேசானது முதல் மிதமான மழை பெய்தது. புறநகர் பகுதிகளில் மழை வெளுத்து வாங்கியது.
வழக்கத்துக்கு மாறாக மார்ச் மாதம் மழை பெய்ததால், நேற்று காலை முதலே சென்னை, புறநகரில் குளிர்ச்சியான சூழல் நிலவியது.
நேற்று காலை 8.30 மணியுடன் நிறைவடைந்த 24 மணி நேரத்தில் அதிகபட்சமாக பள்ளிக்கரணையில் 10 செமீ, மேடவாக்கத்தில் 9 செமீ, ஒக்கியம் துரைப்பாக்கத்தில் 7 செமீ, சோழிங்கநல்லூரில் 6 செமீ, நாராயணபுரம் ஏரி, கண்ணகி நகரில் தலா 4 செமீ, நீலாங்கரை, ஈஞ்சம்பாக்கம், தாம்பரம், அடையாரில் தலா 3 செமீ மழை பதிவாகியுள்ளது.