சென்னை வானிலை ஆய்வு மைய தலைவராக சிவானந்த பை பொறுப்பேற்பு

சென்னை வானிலை ஆய்வு மைய தலைவராக சிவானந்த பை பொறுப்பேற்பு
Updated on
1 min read

சென்னை: சென்னை வானிலை ஆய்வு மையத்தின் தலைவராக சிவானந்த பை நேற்று பொறுப்பேற்றுக் கொண்டார். இந்திய வானிலை ஆய்வு மையத்தின் தென் மண்டல அலுவலகம் (சென்னை வானிலை ஆய்வு மையம்) சென்னையில் இயங்கி வருகிறது.

இதன் தலைவராக இருந்த எஸ்.பாலசந்திரன் கடந்த ஆண்டு ஓய்வு பெற்றார். இதைத் தொடர்ந்து, கருவிகள் பராமரிப்புப் பிரிவு தலைமை பொறுப்பில் இருந்த ‘எஃப்’ நிலை விஞ்ஞானி பி.அமுதாவுக்கு கூடுதல் பொறுப்பாக, தென் மண்டலத் தலைவர் பதவி வழங்கப்பட்டது.

இந்நிலையில், ‘ஜி’ நிலை விஞ்ஞானியான சிவானந்த பை, தற்போது இந்திய வானிலை ஆய்வு மையத்தின் தென் மண்டலத் தலைவராக நியமிக்கப்பட்டுள்ளார். அவர் நேற்று பொறுப்பேற்றுக் கொண்டார்.

இவர் கேரள மாநிலம் கோட்டயத்தில் உள்ள மகாத்மா காந்தி பல்கலைக்கழகத்தில் இயற்பியலில் முதுநிலை பட்டமும், டெல்லி ஐஐடியில் முதுநிலை தொழில்நுட்ப பட்டமும், புனே பல்கலைக்கழகத்தில் வளிமண்டல அறிவியலில் முனைவர் பட்டமும் பெற்றவர்.

கடந்த 1992 நவம்பரில் இந்திய வானிலை ஆய்வுத் துறையில் விஞ்ஞானியாக சேர்ந்தார். அத்துறையில் ஆராய்ச்சி, செயல்பாட்டு வானிலை, காலநிலை சேவைகள், கல்வி உள்ளிட்ட பல்வேறு பிரிவுகளில் 34 ஆண்டுகளுக்கு மேலாகப் பணியாற்றி வருகிறார்.

கடந்த 2018-2022 காலகட்டத்தில் புனேயில் உள்ள காலநிலை ஆய்வு மற்றும் சேவைகள் அலுவலகத்தில் கூடுதல் தலைமை இயக்குநராகவும், 2022-23 காலகட்டத்தில் கேரள அரசின் காலநிலை மாற்ற ஆய்வுகள் நிறுவனத்தின் இயக்குநராகவும் பணியாற்றினார்.

டெல்லியில் உள்ள புவி அறிவியல் அமைச்சகத்தில் திட்ட இயக்குநராகவும், இந்திய வானிலை ஆய்வுத் துறையின் வேளாண் வானிலை ஆலோசனைப் பிரிவின் தலைவராகவும் பணியாற்றி வந்தார்.

சுமார் 80 ஆய்வுக் கட்டுரைகள், 25 தொழில்நுட்ப அறிக்கைகளை வெளியிட்டுள்ளார். பருவமழை, வெப்பநிலை முன்னறிவிப்புகளுக்கான செயல்பாட்டு கணினி மாதிரிகள் உருவாக்கம், கேரளாவில் தென்மேற்கு பருவமழை தொடக்க கால கணிப்பு உள்ளிட்டவை அவரது முக்கிய பங்களிப்புகள் ஆகும். இவர் இந்திய வானிலை ஆய்வு மையத்தின் சிறந்த சேவை விருதையும் பெற்றுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

சென்னை வானிலை ஆய்வு மைய தலைவராக சிவானந்த பை பொறுப்பேற்பு
250 கம்பெனி துணை ராணுவப் படை விரைவில் வருகை: அர்ச்சனா பட்நாயக் தகவல்

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in