

சென்னை கீழ்ப்பாக்கம் பகுதியில் நேற்று பலத்த காற்றுடன் மழை பெய்தது. | படம்: ம.பிரபு |
சென்னை: நள்ளிரவு மற்றும் காலையில் சென்னை, புறநகரில் பெய்த திடீர் மழையால் வெப்பம் தணிந்து குளிர்ந்த சூழல் நிலவியது. சென்னை, புறநகரில் கடந்த இரு வாரங்களாக கடும் வெயில் வாட்டி வதைத்து வந்தது.
இதன் காரணமாக பகல் மற்றும் இரவு நேரங்களில் கடும் புழுக்கம் நிலவியது. கடந்த சில தினங்களாக சென்னையில் 100 டிகிரி ஃபாரன்ஹீட் அளவுக்கு மேல் வெப்பநிலை பதிவாகி வந்தது.
இதனால் பொதுமக்கள் பகல் நேரங்களில் வெளியில் செல்ல முடியாமலும், இரவில் புழுக்கத்தால் தூங்க முடியாமலும் அவதிப்பட்டு வந்தனர். இந்நிலையில் நேற்று முன்தினம் நள்ளிரவு மற்றும் நேற்று காலை சென்னை, புறநகர் பகுதிகளில் பலத்த காற்று, இடி, மின்னலுடன் கூடிய திடீர் மழை பெய்தது.
இதனால் நேற்று மாநகர், புறநகரில் வெப்பம் தணிந்து ரம்மியமான குளிர்ந்த சூழல் நிலவியது.
நேற்று காலை 8.30 மணியுடன் நிறைவடைந்த 24 மணி நேரத்தில் பதிவான மழை அளவுகளின்படி அதிகபட்சமாக புறநகர் பகுதியான முகலிவாக்கம், சென்னை ஆர்.ஏ.புரம், சைதாப்பேட்டை உள்ளிட்ட இடங்களில் தலா 1 செமீ மழை பதிவாகியுள்ளது.
வரும் நாட்களிலும் சென்னை, புறநகர் பகுதிகளில் லேசானது முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.