மதுரை: மின்வாரிய ஒப்பந்த தொழிலாளர்களை பணிநிரந்தரம் செய்யும் தொழிலாளர் ஆய்வாளரின் உத்தரவுக்கு எதிராக மின்வாரியம் தாக்கல் செய்த மேல்முறையீடு மனுக்களை உயர் நீதிமன்றம் தள்ளுபடி செய்து உத்தரவிட்டது. நீதிமன்றத்தின் இந்த உத்தரவால் தொழிலாளர் ஆய்வாளர் வழங்கிய பணிநிரந்தர ஆணைகள் உறுதி செய்யப்பட்டுள்ளன.
மதுரை, தேனி, தூத்துக்குடி, விருதுநகர், திண்டுக்கல் உள்ளிட்ட மாவட்டங்களில் மின்சார வாரியத்தில் குழி தோண்டுதல், மின்கம்பிகள் அமைத்தல், பழுது நீக்குதல் உள்ளிட்ட அத்தியாவசியப் பணிகளில் 1998 முதல் 2014 வரை ஈடுபடுத்தப்பட்ட ஒப்பந்தத் தொழிலாளர்கள் பணிநிரந்தரம் கோரி தொழிலாளர் ஆய்வாளரிடம் மனு அளித்தனர்.
இதை விசாரித்த தொழிலாளர் ஆய்வாளர், ஒப்பந்தத் தொழிலாளர்கள் மின்வாரியத்தில் 24 மாதங்களில் 480 நாட்கள் தொடர்ந்து பணியாற்றி இருப்பதால் அவர்களை பணி நிரந்தரம் செய்ய வேண்டும் என உத்தரவிட்டது.
இதை எதிர்த்து, மின்வாரியம் சார்பில் உயர் நீதிமன்ற மதுரை அமர்வில் மேல்முறையீடு மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன. மனுக்களை நீதிபதி பி.புகழேந்தி விசாரித்தார். மின்சார வாரியம் சார்பில், ஒப்பந்தத் தொழிலாளர்கள் நேரடியாக வாரியத்தால் பணியமர்த்தப்படவில்லை.
அவர்கள் ஒப்பந்ததாரர்கள் மூலமே நியமிக்கப்பட்டனர். பணிநிரந்தரம் கோரும் தொழிலாளர்கள் தொழிலாளர் நீதிமன்றத்தை தான் அணுக வேண்டும். தொழிலாளர் ஆய்வாளருக்கு இதற்கு அதிகாரம் இல்லை.
இவர்கள் கட்டுமானப் பணிகளில் ஈடுபட்டதால் இவர்களுக்கு பணிநிரந்தரச் சட்டம் பொருந்தாது என தெரிவிக்கப்பட்டது. பின்னர் நீதிபதி பிறப்பித்த உத்தரவு: பணிநிரந்தரச் சட்டத்தின்படி, ஒரு தொழிலாளர் 480 நாட்கள் பணியாற்றினாரா என்பதை ஆய்வு செய்து, அவருக்குப் பணி நிரந்தரம் வழங்கத் தொழிலாளர் ஆய்வாளருக்கு முழு அதிகாரம் உண்டு.
தொழிலாளர்கள் மேற்கொண்ட குழி தோண்டுதல், மின் கம்பம் நடுதல் உள்ளிட்ட பணிகள் கட்டுமானப் பணிகள் அல்ல, அவை மின்வாரியத்தின்நிரந்தரமான மற்றும் அத்தியாவசியப் பணிகள் ஆகும்.
ஏற்கெனவே இதேபோன்ற சூழலில் இருந்த ஒப்பந்தத் தொழிலாளர்களுக்கு உச்ச நீதிமன்றம் மற்றும் உயர் நீதிமன்ற உத்தரவுப்படி பணிநிரந்தரம் வழங்கப்பட்டது.
எனவே, இந்தத் தொழிலாளர்களுக்கும் அதே பலனை வழங்குவது அவசியமானது என தெரிவித்து, மேல்முறையீட்டு மனுக்கள் தள்ளுபடி செய்யப்படுகின்றன. தொழிலாளர் ஆய்வாளர் வழங்கிய பணிநிரந்தர ஆணைகள் உறுதி செய்யப்படுகின்றன. இவ்வாறு நீதிபதி உத்தரவில் குறிப்பிட்டுள்ளார்.