

ராஜகோபால்
பழநி: திண்டுக்கல் அருகே காவல் நிலையத்துக்குப் புகார் அளிக்க வந்த பெண்ணுக்கு ஆபாச தகவலை அனுப்பிய சார்பு ஆய்வாளர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டார்.
பழநி அருகேயுள்ள பாப்பம்பட்டியைச் சேர்ந்த பெண் ஒருவர் அடிதடி பிரச்சினை தொடர்பாக நெய்க்காரப்பட்டியில் உள்ள தாலுகா காவல் நிலையத்தில் புகார் அளிக்கச் சென்றார். அப்போது அங்கு பணியில் இருந்த சார்பு ஆய்வாளர் ராஜகோபாலை சந்தித்து புகார் அளித்தார். அதன்பேரில், ராஜகோபால் விசாரணை நடத்தினார். இந்நிலையில், அந்தப் பெண்ணின் வாட்ஸ்அப்பில் ஆபாசமாக ராஜகோபால் தகவல் அனுப்பியுள்ளார். இதனால் அதிர்ச்சி அடைந்த அந்தப் பெண் தனது குடும்பத்தாரிடம் இதுபற்றி தெரிவித்தார்.
இதைத் தொடர்ந்து பெண்ணின் குடும்பத்தினர் திண்டுக்கல் சரக டிஐஜி சசிமோகன், எஸ்பி பிரதீப் மற்றும் பழநி டிஎஸ்பி தனஞ்ஜெயன் ஆகியோரிடம் புகார் அளித்தனர். இது தொடர்பாக காவல்துறை அதிகாரிகள் நடத்திய விசாரணையில் சார்பு ஆய்வாளர் ராஜகோபால், புகார் அளிக்க வந்த பெண்ணுக்கு ஆபாசமாக தகவல் அனுப்பியது உறுதியானது. இதையடுத்து, அவர் ஆயுதப்படைக்கு மாற்றப்பட்டார். இந்நிலையில் டிஐஜி உத்தரவின் பேரில் ராஜகோபால் நேற்று பணியிடை நீக்கம் செய்யப்பட்டார்.