

மருத்துவக் கல்லூரிகளில் பயிற்சி மருத்துவர் இடங்களில் 20 சதவீதம் இடங்களை வெளிநாட்டில் மருத்துவம் பயின்ற மருத்துவப் பட்டதாரிகளுக்கு வழங்க வலியுறுத்தி உண்ணாவிரதப் போராட்டம் எழும்பூர், ராஜரத்தினம் மைதானம் அருகே நேற்று நடைபெற்றது. | படம்: ம.பிரபு |
சென்னை: மருத்துவக் கல்லூரிகளில் பயிற்சி மருத்துவர்களுக்கான இடங்களில் வெளிநாட்டில் மருத்துவம் படித்த மாணவர்களுக்கு 20 சதவீதம் ஒதுக்கக்கோரி சென்னையில் உண்ணாவிரதப் போராட்டம் நடந்தது.
வெளிநாடுகளில் மருத்துவம் படிக்கும் மாணவர்களுக்கு தற்காலிக சான்றிதழ் வழங்குவதற்கு, தமிழ்நாடு மருத்துவ கவுன்சில் காலம் தாழ்த்தி வருவதாக புகார் எழுந்துள்ளது.
மொத்த பயிற்சி இடங்களில், 20 சதவீதம் வெளிநாடுகளில் மருத்துவம் முடித்த மாணவர்களுக்கு ஒதுக்க வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி, சென்னையில் நேற்று மருத்துவ மாணவர்கள் உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
சமூக சமத்துவத்துக்கான டாக்டர்கள் சங்கம், தமிழ்நாடு மருத்துவ மாணவர்கள் சங்கத்துடன், வெளிநாட்டு மருத்துவ பட்டதாரி பிரிவினர் இந்தப் போராட்டத்தில் பங்கேற்றனர்.
இந்த போராட்டத்துக்கு தமிழக காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகை, விசிக தலைவர் திருமாவளவன் ஆகியோர் வந்து ஆதரவு தெரிவித்தனர். அப்போது, திருமாவளவன் பேசும் போது “அரசு மருத்துவக் கல்லுாரிகளில் பயிற்சி இடங்களில் 20 சதவீதம் வெளிநாடு மருத்துவ மாணவர்களுக்கு வழங்க வேண்டும் என்று கடந்த 2022-ல் முதல்வர் ஸ்டாலின், மத்திய அரசுக்கு கடிதம் எழுதியுள்ளார்.
அதனால், தமிழக அரசும் இந்த கோரிக்கையில் உடன்பட் டுள்ளது. அதேநேரம், மாவட்ட அரசு மருத்துவமனைகளில் பயிற்சி பெறலாம் என தேசிய மருத்துவ ஆணையம் அனுமதித்தும் செயல்படுத்தாதது குறித்து தமிழக அரசின் கவனத்துக்கு எடுத்து செல்ல இப்போராட்டம் நடைபெறுகிறது.
தமிழக அரசு விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும். மாணவர்களின் கோரிக்கை தொடர்பாக மக்களவையில் பேசுவதுடன், மத்திய அமைச்சரிடமும் வலியுறுத்துவேன்” என்றார்.