

சென்னை: கரோனா தொற்றால் உயிரிழந்த அரசு மருத்துவர் விவேகானந்தனின் மனைவிக்கு அரசு வேலை மற்றும் நிவாரணம் கோரி புதிதாக தொடரப்பட்ட வழக்கில் ஜன.20-ம் தேதிக்குள் பதில் மனு தாக்கல் செய்ய தமிழக அரசுக்கு உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
கரோனா காலகட்டத்தில் பணியாற்றிய அரசு மருத்துவர் விவேகானந்தன், தொற்று காரணமாக உயிரிழந்தார். இந்நிலையில், தனக்கு கருணை அடிப்படையில் அரசுப் பணி வழங்கக் கோரியும், ரூ.25 லட்சம் நிவாரணம் வழங்கக்கோரியும் அவரது மனைவி திவ்யா, சென்னை உயர் நீதிமன்றத்தில் புதிதாக வழக்கு தொடர்ந்திருந்தார்.
நீதிமன்றம் ஏற்கெனவே உத்தரவு: இந்த வழக்கு விசாரணை நீதிபதி எம்.தண்டபாணி முன்பாக நேற்று நடந்தது. அப்போது மனுதாரர் தரப்பில் வழக்கறிஞர் ஆர்.சங்கரசுப்பு ஆஜராகி, “ஏற்கெனவே இதே கோரிக்கையை வலியுறுத்தி தொடரப்பட்ட வழக்கில் உயர் நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்தும் அதை தமிழக அரசு அமல்படுத்த வில்லை” என்றார்.
அப்போது நீதிபதி, “அப்படியென்றால் அவமதிப்பு வழக்கு தொடர்ந்து இருக்க லாமே, எதற்காக புதிதாக வழக்கு தொடர்ந்துள்ளீர்கள்” என கேள்வி எழுப்பினார்.
அரசின் மீது நம்பிக்கை: அதற்கு மனுதாரர் தரப்பு வழக்கறிஞர் , “இத்தனை நாட்களாக கரோனா தொற்றில் உயிரிழந்த அரசு மருத்துவரின் மனைவிக்கு எப்படியும் வேலையும், நிவாரணமும் கிடைத்துவிடும் என்ற எண்ணத்தில் தமிழக அரசு மீது நம்பிக்கை வைத்து காத்திருந் தோம்.
அதன்காரணமாக அவமதிப்பு வழக்கு தொடரவில்லை.. நாட்கள் கடந்து விட்டதால் தற்போது புதிதாக வழக்கு தொடர்ந்துள்ளோம்” என வாதிட்டார். அதையடுத்து இந்த மனுவுக்கு அரசு தரப்பில் பதில்மனு தாக்கல் செய்ய உத்தரவிட்ட நீதிபதி, வழக்கு விசாரணையை ஜன.20-ம் தேதிக்கு தள்ளி வைத்துள்ளார்.