

கோவை: நாட்டின் ஒருமைப்பாட்டையும், ஒற்றுமையையும் பாதுகாக்க மாணவர்கள் முன்வர வேண்டும் என, கோவையில் குடியரசு துணைத் தலைவர் சி.பி.ராதாகிருஷ்ணன் தெரிவித்தார்.
கோவை பாப்பநாயக்கன்பாளையத்தில் உள்ள தனியார் மருத்துவமனையின் நர்சிங் கல்லூரி திறப்பு விழாவில் கலந்து கொள்ளவும் திருப்பூர் மாவட்டம் அவிநாசி லிங்கேஸ்வரர் கோயிலில் நடைபெறும் சுந்தரமூர்த்தி நாயனார் குருபூஜை விழாவில் பங்கேற்கவும் குடியரசு துணைத் தலைவர் சி.பி.ராதாகிருஷ்ணன் டெல்லியில் இருந்து விமானம் மூலம் நேற்று கோவை வந்தார்.
விமான நிலையத்தில் அவரை ஆளுநர் ஆர்.வி.அர்லேகர், பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் சம்பத்குமார் ஆகியோர் பூச்செண்டு கொடுத்து வரவேற்றனர். மேலும், மாவட்ட ஆட்சியர் பவன்குமார் கிரியப்பனவர், மாநகர காவல் ஆணையர் என்.கண்ணன், மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பவன்குமார் ரெட்டி, மாநகராட்சி ஆணையர் கட்டா ரவிதேஜா, பாஜக தேசிய மகளிரணி தலைவர் வானதி சீனிவாசன் உள்ளிட்டோர் வரவேற்றனர்.
அவரிடம் செய்தியாளர்கள், டெல்லியில் மாணவர்கள் நடத்தி வரும் போராட்டம் குறித்தும், அரசு பேச்சுவார்த்தை நடத்தாதது குறித்தும் கேள்வி எழுப்பினர். அதற்கு பதில் அளித்து குடியரசு துணைத் தலைவர் சி.பி.ராதாகிருஷ்ணன் கூறியதாவது:
இது ஒரு அரசியல் சார்ந்த கேள்வி. இதற்கு உரிய பதிலை அரசியல் தலைவர்களே அளிப்பார்கள். மேலும், மாணவர்கள் எப்போதும் நாட்டின் ஒருமைப்பாட்டையும், ஒற்றுமையையும் பாதுகாக்க முன்வர வேண்டும்.
இந்திய தேசம் இன்று சர்வதேச சக்திகளுக்கு தகுந்த பதிலடி கொடுக்கும் நிலையில் உள்ளது என்றால், அதற்கு நமது ஒற்றுமையே முக்கியக் காரணம். தமிழ்நாட்டில் தற்போதைய புதிய அரசு செயல்படுவதற்கு சிறிது காலம் அவகாசம் வழங்க வேண்டும்’’ என்றார்.