

கோவை கல்லூரி மாணவர் அமுதனின் பெற்றோர் சுமதி- கென்னடி.
கள்ளக்குறிச்சி: கோவையில் கொடூரமாக நடந்த கல்லூரி மாணவர் கொலை பற்றி, வேறு தகவல்களை கூறி பள்ளி கல்வித் துறை அமைச்சர் ராஜ்மோகன் திசை திருப்புகிறார் என்று, அந்த மாணவரின் பெற்றோர் கடு மையான கண்டனத்தை தெரி வித்துள்ளனர்.
கள்ளக்குறிச்சி வள்ளலார் வீதியைச் சேர்ந்தவர் கென்னடி. இவரது மகன் அமுதன் (19). இவர், கோவையில் உள்ள ஒரு தனியார் பொறியியல் கல்லூரியில் 3-ம் ஆண்டு படித்து வந்தார். கடந்த ஆக. 10-ம் தேதி மலுமிச்சம்பட்டி பகுதியில் தன் நண்பருடன் நடந்து சென்ற அமுதனை கார் மற்றும் டூவீலர் களில் வந்த சிலர் கொடூரமாக தாக்கி, கொலை செய்தனர்.
கல்லூரியில் மாணவர்களி டையே இருந்த கஞ்சா புழக்கத்தை மாணவன் அமுதன் கல்லூரி நிர்வாகத்திடம் சொன்னதால் மாணவர்களில் ஒரு பிரிவினர் கடும் ஆத்திரத்தில் இருந்தனர். இந்தச் சூழலில் அவரை 20 பேர் கொண்ட கும்பல் அடித்துக் கொலை செய்ததாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
இதுதொடர்பான விவாதம் நேற்று முன்தினம் சட்டப் பேரவையில் எழுந்து, பெரும் அதிர்வை ஏற்படுத்தியது. அப்போது பேசிய பள்ளிக்கல்வித் துறை அமைச்சர்ராஜ்மோகன், “மாணவர்களுக் கிடையேயான முன்விரோதம் மற்றும் கோஷ்டி மோதலே இந்த கொலைக்கு காரணம்” என்று தெரிவித்திருந்தார்.
“போதைப் பொருட்கள் நடமாட்டம் குறித்து காவல்துறைக்கு மாணவன் அமுதன் தகவல் தெரிவித்ததே இந்தக் கொலைக்கு காரணம்” என்று எதிர்க்கட்சிகள் குற்றம் சாட்டின. இந்தச் சூழலில், இப்பிரச் சினை தொடர்பாக மாணவர் அமுதனின் பெற்றோர் கென்னடி - சுமதி ஆகியோர் நேற்று கள்ளக்குறிச்சியில் செய்தி யாளர்களைச் சந்தித்தனர்.
அப்போது அவர்கள் கூறுகையில், “இச்சம்பவத்தை பற்றி பேசிய பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் ராஜ்மோகன், இந்த சம்பவம் கோஷ்டி மோதலில் நடந்ததாக கூறி திசை திருப்புகி றார். அவருக்கு எங்களது கடுமையான கண்டனத்தை தெரிவிக்கி றோம். கல்லூரிக்குள் நடந்த போதைப் பொருள் நடமாட்டத்தை காட்டிக் கொடுத்த தால்தான் எனது மகன், கொடூர மாக தாக்கப்பட்டு கொலை செய்யப்பட்டுள்ளார்.
கல்லூரி விடுதியில் தான் எனது மகன் தங்கி படித்து வந்தார். எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி உள்ளிட்டோர் எனது மகன் கொலைக்கு நியாயம் பெற்றுத் தர வேண்டும்.20 பேர் கொண்ட கும்பல் வந்து, திட்டமிட்டு, எனது மகனை கடுமையாகதாக்கி கொலை செய்துள்ளது.
இது எப்படி கோஷ்டி மோத லாகும்? பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் இவ்வாறு கூறுவது சரியல்ல. எங்களது கடுமையான கண்டனங்களை தெரிவித்துக் கொள்கிறோம்” என்று தெரிவித்தனர்.
மேலும் 4 மாணவர்கள் கைது
மாணவர் அமுதன் கொலை சம்பவம் தொடர்பாக, கோவை மாவட்டம் செட்டிபாளையம் போலீஸாா் கொலை வழக்குப்பதிந்து, நேற்று முன்தினம் 5 மாணவர்களை கைது செய்தனர். இவ்வழக்கில் தொடர்புடைய மேலும் 4 பேரை நேற்று கைது செய்தனர்.
இதுதொடர்பாக போலீஸார் கூறும்போது, ‘‘மாணவர் கொலை வழக்கு தொடர்பாக மதுரை ஒத்தக்குடியைச் சேர்ந்த ஸ்ரீராம்(21), லலித் ஆதித்யா(20), சந்தோஷ்(20), திருநகரைச் சேர்ந்த ஹரிஷ் பாண்டியன்(20) ஆகிய நால்வர் நேற்று கைது செய்யப்பட்டனர். இதில், ஹரிஷ் பாண்டியன், லலித் ஆதித்யா இருவரும் வேறு கல்லூரியைச் சேர்ந்தவர்கள்’’ என்றனர்.
“கல்லூரியில் மாணவர்களிடையே அடிக்கடி கோஷ்டி மோதல் ஏற்பட்டு வந்தது. கடந்த 10-ம் தேதி அமுதன் உள்ளிட்ட 6 பேர் ஒத்தக்கால் மண்டபத்தில் தங்கியிருந்த மாணவர் தீபக்கின் அறைக்குச் சென்று, அவர்களை தாக்கி செல்போனை பறித்துள்ளனர். அன்றைய தினம் அமுதனை எதிர்தரப்பினர் பிடித்து தாக்கியதால் உயிரிழந்தார்” என்றும் கோவை போலீஸார் தரப்பில் தெரிவிக்கின்றனர்.
இதற்கிடையே, செல்போன் பறித்தது தொடர்பான புகாரின் பேரில், அமுதனின் நண்பர்களான பெரம்பலூர் ஹரிதாஸ்(18), விருதுநகர் உதயகுமார்(18) ஆகியோர் மீதும் போலீஸார் வழக்குப்பதிந்து விசாரித்து வருகின்றனர்.