

தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பு தலைவர் ஏ.எம்.விக்கிரமராஜா
சென்னை: தமிழகம் முழுவதும் யுபிஐ சேவை கட்டண விதிப்புக்கு எதிர்ப்பு தெரிவித்து நாளை (அக்.12) அறப்போராட்டம் நடத்தப்படும் என தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பு தலைவர் ஏ.எம்.விக்கிரமராஜா அறிவித்துள்ளார்.
இது தொடர்பாக அவர் வெளியிட்ட அறிக்கை: மத்திய அரசு டிஜிட்டல் மயமாக்கல் கொள்கையின்படி, வங்கி பணப் பரிவர்த்தனைகளை இலவச யுபிஐ பணப்பரிவர்த்தனைக்கு மாற்றி, பொது மக்களிடையே டிஜிட்டல் மயமாக்கலை ஊக்கப்படுத்தி வந்தது. இதை பெருவாரியான மக்கள் பயன்படுத்தி வரும் நிலையில், ரூ.2 ஆயிரத்துக்கு மேல் உள்ள யுபிஐ பணப் பரிவர்த்தனைக்கு அக்.15 முதல் 0.4 சதவீதம் சேவை கட்டணம் விதிப்பதாகவும், அதை வணிகர்கள் தான் செலுத்த வேண்டும் என்றும் நிர்ப்பந்தத்தை மத்திய அரசு ஏற்படுத்தி இருக்கிறது.
இதற்கு தமிழகம் மட்டுமல்லாது அகில இந்திய அளவிலும் மிகப்பெரும் எதிர்ப்பு உருவாகி இருக்கிறது. இதனால் வணிகர்கள் பாதிப்படைவதோடு மட்டுமன்றி, விலைவாசியும் கடுமையாக உயர்ந்து, பொதுமக்கள் பாதிக்கப்படும் நிலையும் உருவாக்கப்பட்டுள்ளது.
யுபிஐ சேவை கட்டணத்தை மத்திய அரசு தொலைநோக்கு சிந்தனையுடன் ரத்து செய்ய வேண்டுமென, தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பு, தமிழக அளவில் அமைப்பு ரீதியாக உள்ள 61 மாவட்டங்களின் தலைவர்கள் தலைமையில் முக்கிய நகரப் பகுதிகளில் வணிகர்கள் அனைவரும் ஒன்றுகூடி, யுபிஐ சேவை கட்டண எதிர்ப்பு பேட்ஜ் அணிந்து திங்கள்கிழமை அறவழிப் போராட்டம் நடத்த உள்ளனர். இவ்வாறு அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.