

சென்னை: ‘திருவள்ளூர் கொண்டாபுரம் அரசு உயர்நிலைப் பள்ளியில் பக்கவாட்டுச் சுவர் இடிந்து விழுந்து ஏழாம் வகுப்பு மாணவர் ஒருவரின் உயிர் பறிபோயுள்ளது. அலட்சியப் போக்காலும், திறனற்ற நிர்வாகத்தாலும் ஏழை எளிய மாணவர்களின் உயிரை திமுக அரசு பறிக்கிறது’ என தமிழக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன் கண்டனம் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் வெளியிட்ட எக்ஸ் பதிவில், ‘திருவள்ளூர் மாவட்டத்தில் கொண்டாபுரம் அரசு உயர்நிலைப் பள்ளியில் பக்கவாட்டுச் சுவர் இடிந்து விழுந்து ஏழாம் வகுப்பு மாணவர் ஒருவரின் உயிர் பறிபோயுள்ளது மிகுந்த அதிர்ச்சியையும் கோபத்தையும் உண்டாக்குகிறது.
படித்து முன்னேற வேண்டும் என்னும் நம்பிக்கையில் பிள்ளைகளை அரசுப் பள்ளிக்கு அனுப்பினால், பிள்ளைகளின் தலையில் சுவரை இடிந்து விழச் செய்து, பெற்றோர் வயிற்றில் இடியை இறக்குவது தான் பள்ளிக் கல்வித் துறையின் பொற்காலமா?
கோடி கோடியாய் பணத்தைக் கொட்டி "கல்வியில் சிறந்த தமிழ்நாடு" என்று பிரம்மாண்டமாக விழாக்களை நடத்தத் திராணியிருக்கும் திமுக அரசுக்கு அரசுப் பள்ளிகளின் உட்கட்டமைப்புகளை மேம்படுத்த மனமில்லை என்பது எவ்வளவு கேவலமானது?
இன்னும் எத்தனைப் பிஞ்சு உயிர்களைக் காவு வாங்கினால் திமுக அரசின் விளம்பர மோகம் முற்று பெற்று, மாணவர்களின் நலன் மீது அக்கறை வரும்?
அரசுப் பள்ளி மாணவர்களின் உயிரோடு விளையாடிய முதல்வர் ஸ்டாலின் மற்றும் பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஸ் ஆகியோரின் கைகளில் உள்ள இந்த ரத்தக் கறையை இனி எத்தனை விளம்பர நாடகங்களைக் கொண்டும் துடைத்தெறிய முடியாது.
அலட்சியப் போக்காலும், திறனற்ற நிர்வாகத்தாலும் ஏழை எளிய மாணவர்களின் உயிரைப் பறித்துவிட்டு, மத்திய அரசின் நவோதயா பள்ளிகளையும் வரவிடாமல் தடுத்துவிட்டு, "அப்பா" என்னும் நாடகம் போடும் இந்தப் பாவம் திமுக அரசை சும்மா விடாது’ எனத் தெரிவித்துள்ளார்.