

திருவள்ளூர்: ஆர்.கே.பேட்டை அருகே கொண்டாபுரம் அரசுப் பள்ளியில் சுவர் இடிந்து விழுந்து, 7-ம் வகுப்பு மாணவர் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
திருவள்ளூர் மாவட்டம், ஆர்.கே.பேட்டை அருகே கொண்டாபுரம் பகுதியில் அரசு உயர்நிலைப் பள்ளி ஒன்று செயல்பட்டு வருகிறது. 200-க்கும் மேற்பட்ட மாணவர்கள் படித்து வரும் இப்பள்ளியில், இன்று மதிய உணவு இடைவேளையின்போது பள்ளி மாணவர்கள், பள்ளியில் வளாகத்தில் உள்ள நடைமேடையில் அமர்ந்து உணவருந்திக் கொண்டிருந்திருந்தனர்.
அப்போது எதிர்பாராத விதமாக, நடைமேடையை ஒட்டியிருந்த கைப்பிடிச் சுவர் இடிந்து விழுந்தது. இதில், உணவருந்திக் கொண்டிருந்த 7-ம் வகுப்பு மாணவர் மோகித் படுகாயமடைந்து, சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.
இது குறித்து தகவலறிந்த, மோகித்தின் பெற்றோர், உறவினர்கள், பொதுமக்கள் என 100-க்கும் மேற்பட்டோர் பள்ளியை முற்றுகையிட்டனர்.
‘நடைமேடையின் பக்கவாட்டு சுவர் விரிசல் ஏற்பட்டு இருந்ததை பள்ளித் தலைமை ஆசிரியர் ஏன் கவனிக்க வில்லை? அங்கு மாணவர்களை உணவருந்த அனுமதித்தது ஏன்?’ என கேள்விகளை எழுப்பியதால் பரபரப்பு ஏற்பட்டது. இச்சம்பவம் குறித்து ஆர்.கே.பேட்டை போலீஸார் விசாரித்து வருகின்றனர்.