அமைச்சர் பிடிஆரின் செல்லப் பிராணியாக மாறிய சென்னை தெரு நாய்!

அமைச்சர் பிடிஆரின் செல்லப் பிராணியாக மாறிய சென்னை தெரு நாய்!
Updated on
1 min read

சென்னை: தலைமைச் செயலகத்தில் சுற்றித்திரிந்த தெரு நாய் ஒன்றை தத்தெடுத்து வளர்த்து வரும் நெகிழ்ச்சியான அனுபவத்தை, அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் தனது சமூக வலைதளத்தில் பகிர்ந்துள்ளார்.

இது தொடர்பாக அவர் வெளியிட்ட சமூக வலைதள பதிவு: கடந்த 2021-ம் ஆண்டு நான் அமைச்சராகப் பொறுப்பேற்ற சில மாதங்களிலேயே, தலைமைச் செயலக வளாகத்தில் கால் உடைந்த நிலையில் ஒரு தெரு நாய் சுற்றித் திரிவதைக் கவனித்தேன். அது மிகவும் அன்பாகப் பழகியது.

சமீபத்தில் ஏற்பட்ட விபத்தில் நாய்க்கு இப்படி ஆகியிருக்கலாம் எனக்கருதி, அதற்கு சிகிச்சை அளித்து மீண்டும் அதன் இடத்திலேயே அதைவிட்டுவிட முடிவு செய்தேன். ஆனால், மருத்துவப் பரிசோதனையில் அந்த நாய்க்கு நீண்ட நாட்களுக்கு முன்பே விபத்து ஏற்பட்டு, உடைந்த எலும்பு தவறான முறையில் கூடியிருந்தது தெரியவந்தது.

இதையடுத்து மேற்கொள்ளப்பட்ட சிக்கலான சிகிச்சையில் கால்நடை மருத்துவர்கள் மட்டுமல்லாது, ஒரு மனித எலும்பு முறிவு சிகிச்சை நிபுணரும் இணைந்து நாய்க்கு சிகிச்சை அளித்தனர். சில மாதங்கள் சிகிச்சை நீடித்த நிலையில், நாயின் காலில் உலோகத் தகடுகள் மற்றும் ஆணிகள் பொருத்தப்பட்டன. சிகிச்சைக் காலம் முழுவதும் அந்த நாயுடன் இருந்ததால் ஏற்பட்ட பிணைப்பில், அதை எங்களோடு வைத்துக்கொள்ள முடிவுசெய்து அதற்கு ‘பீச்சஸ்’ என்று பெயரிட்டோம்.

இப்போது ‘பீச்சஸ்’ எங்களது குடும்ப உறுப்பினரில் ஒருவர். இந்நிலையில் சமீபத்திய உச்ச நீதிமன்ற உத்தரவின்படி, தலைமைச் செயலக வளாகத்தில் சுற்றித்திரிந்த தெரு நாய்கள் அங்கிருந்து அகற்றப்பட்டன. ஆனால் ‘பீச்சஸ்’ சென்னை மாநகராட்சியின் புதிய விதிகளின் அடிப்படையில் முறைப்படி பதிவு செய்யப்பட்டு, எங்களது செல்லப் பிராணியாக மாறிவிட்டது என்று அதில் உருக்கமாகப் பதிவிட்டுள்ளார்.

ஒரு தெரு நாயின் மீதான அமைச்சர் பழனிவேல் தியாகராஜனின் இந்த அன்பு கலந்த செயல் சமூக வலைதளங்களில் பலரது கவனத்தை ஈர்த்துள்ளது குறிப்பிடத்தக்கது.

அமைச்சர் பிடிஆரின் செல்லப் பிராணியாக மாறிய சென்னை தெரு நாய்!
புதுச்சேரியில் ரங்கசாமியின் மாநில அந்தஸ்து கோரிக்கை நிறைவேறுமா? - மத்திய அமைச்சர் விளக்கம்

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in